"நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலராக எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்." (அல்குர்ஆன்-18:102)
மாமறை அல்குர்ஆன் இவ்வாறு தெளிவாக அறிவித்த பின்பும், மக்கள் 'தர்கா' மாயைகளில் விழுவார் களேயானால் அவர்களைவிட கைசேதத்துக்குரியவர்கள் யார் இருக்க முடியும்?அல்லாஹ் அல்லாத எதனிடமும் அவரிடமும் நமது தேவைகளைக் கேட்பதும் பாதுகாப்புத் தேடுவதும் இறைக்கு இணை வைத்தல் என்னும் மாபெரும் கொடிய பாவமாகும். அதாவது 'ஷிர்க்' ஆகும். இது விஷயத்தில் நாம் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
பச்சைத் தலைப்பாகைகளுடன் பவனி வரும் போலி வேடதாரிகளை 'இறை நேசர்கள்' என்றும், 'நடமாடும் வலீ' என்றும் கருதி, நமது பொன்னான நேரத்தையும் - பொருளையும் செலவழித்து, நமது பகுத்தறிவையும் - இறை நம்பிக்கையையும் இறையச்சத்தையும் ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டு அவர்கள் பின்னாலேயே செல்வோமேயானால் நம்மைவிட நஷ்டமடைந்தவர்கள் எவரும் இலர்.அல்லாஹ், அருள் மறையிலே அழகாக நமக்கு எச்சரிக்கின்றான்.
"நாங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகிறோம் என்று வாயளவில் கூறுபவர்களும் மனிதர்களில் உள்ளனர் (உண்மையில்) அவர்கள் விசுவாசிகள் அல்லர்". (அல்குர் ஆன் 2:8) மேலும்,
உயிருடன் நடமாடும் "மஜ்தூப்களை" (பைத்தியக்கார நிலையிலுள்ளவர்களை) "வலீ" என்று கற்பனை செய்து கொண்டு, அவர்களின் பிறந்த நாளின் போது அவர்களின் உடம்பில் சந்தனதைப் பூசுகின்ற கோலத்தையும் கேள்விப்படுகின்றேன்! அவர்கள் இறந்துவிட்டால் அடக்கம் பண்ணுவதற்கென்று தர்காக்கள் கட்டி வைத்திருப்பதையும் அறிகின்றேன். அம்மட்டோ? பிணி முதலான மன நோய்களுக்குள்ளானோர், அந்தத் தர்காவே சரணென - 40 நாட்கள் - 3 மாதங்கள் - 6 மாதங்கள் - ஓராண்டு என நேர்ச்சைக்காக தங்கியும் வருகின்றனர். இவ்வளவும் உயிருடன் வாழ்கின்ற ஒருவரின் பெயரால் கட்டிவைக்கப்பட்ட தர்காவில்?
கூத்துக்கள் கொஞ்சமா? நஞ்சமா? காகிதக் கூண்டுகளை இழுத்து "கும்மாளம்" போடும் நயவஞ்சக நரிக் கூட்டங்களான வேடதாரிகளை, அப்பாவி பாமர மக்கள், "உயர்ந்தோர் எனவும், "சாலச் சிறந்தோர்" எனவும் நம்பி, "மாலை - துண்டு" மரியாதை செய்வதையும் கண்ணுற முடிகின்றது! சிறு நீர் கழித்துவிட்டுத் துப்புரவு செய்யாத இந்த இறை நேச பக்தர்(?)களின் கால்களில் விழும் அப்பாவிகள் எண்ணற்றோர்!
பசுத்தோல் போர்த்திய புலிகளாய் பவனி வரும் இவர்கள், தங்கள் வயிறுகளை எப்படியெலாம் நிரப்புகின்றார்கள் தெரியுமா? ஏமாந்த அப்பாவி மக்கள் "தர்கா" உண்டியலில் போடும் காணிக்கைகளை-தாங்களே அங்கு "அடக்க" மாகியிருக்கும் "பாவாவின் நேரடி வாரிசுகள்" என பாமரர்களை நம்பவைத்து பங்கு ேபாட்டுக்கொள்கின்றனர்!
முகமூடிக் கொள்ளைக்காரர்களைவிட பயங்கரவாதிகளான இவர்களின் அட்டகாசங்களை இறை நம்பிக்கைக் கொண்டவர்கள் உணர்ந்து தெளிந்து - வல்ல நாயனான அல்லாஹ்வை மட்டுமே தங்களுக்குப் பாதுகாவலனாக ஏற்று ஈடேற்றம் பெற்று வாழ்வாங்கு வாழுங்கள்! எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே நம் அனைவரையும் நன்கு உணர்ந்தவன்!
நாம் செய்யக்கூடியவைகளை அறிந்து கொள்பவனாகவும் பார்ப்பவனாகவும் செவியுறுபவனாகவும் இருப்பவன் அல்லாஹ் ஒருவனே!
அல்லாஹ்வுக்கும் நமக்கும் தடுப்பும் இல்லை! திரையும் இல்லை!
ஆதலால் அல்லாஹ்வுக்கும் நமக்கும் இடைத்தரகர்கள் தேவையில்லை! பிடரி நரம்பினும் அருகிலுள்ள அல்லாஹ்விடமே நமது தேவைகளை எடுத்துரைத்து உதவி பெறுவோமாக!
(ஆமீன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக