படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

6 செப்டம்பர், 2011

படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா?


மனிதன் தன் பிரார்த்தனையில் இன்னாரின் பொருட்டால், அவரின் உரிமையால் என்று கூறிக் கேட்கும் போது மனிதனுக்கு ஏதோ சில உரிமைகள் அல்லாஹ்விடம் இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறதல்லவா?இப்படி நினைத்தல் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் போக்கல்ல என விளங்கிக் கொள்ள வேண்டும்.மாறாக இது முஃதஸிலாக்களின் கொள்கையாகும். இவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பிரிவினராவர்.
மனிதனுக்குச் செய்ய வேண்டிய எந்த செயலுமே அல்லாஹ்வின் மீது கடமையாகவில்லை' என்று வேறு சிலர் கூறுகின்றனர். அவன் தன் அடியார்களுக்குச் செய்கின்ற அனுக்கிரகங்கள், நன்மைகள் அனைத்துமே அவன் அருள் கிருபை என்ற அமைப்பிலாகும்.
அல்லாஹ் தன்மீது அடியார்களுக்கு அருள் பாலிப்பதை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். மூமினான படைப்பினங்களுக்கு இத்தகைய இரக்கமான கூலிகளை அளிப்பதாக தன்மீது இறைவன் தானாகவே ஏற்படுத்தியுள்ளான். அவர்களுக்கு அநீதி இழைப்பதை தன்மீது விலக்கியிருக்கிறான் அல்லவா?
சிருஷ்டிகளுக்கு எந்தச் செயலை அல்லாஹ் செய்தாலும் அது கடமை என்ற அடிப்படையிலல்ல. மாறாக அவன் தன் மீது ஏற்படுத்திக் கொண்ட இரக்கம், நேர்மை, நீதி என்பன போன்ற குணங்களுக்கு, தன்மைகளுக்கும் உட்பட்டதாகும்.
ஹதீஸுல் குத்ஸியிலும் இந்த உண்மையை நம்மால் பார்க்க முடிகிறது. அதில் இறைவன் குறிப்பிடுகிறான்: 'அடியார்களே! என் மீது நான் அநீதியை விலக்கிக் கொண்டேன். இந்த அநீதியை விட்டு உங்களையும் விலக்குகிறேன். நீங்கள் யாருக்கும் அக்கிரமம், அநீதி செய்யாதீர்கள்'.
திருமறையும் இதை எடுத்துக் கூறுகிறது: "உங்கள் இறைவன் அருள்புரிவதை தன் மீது கடமையாக்கிக் கொண்டான்" (6:54). "விசுவாசிகளுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாகி விட்டது". (30:47)
முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு ஹதீஸில் கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆதிடம்: முஆதே! அல்லாஹ்வுக்காக அடியார்கள் செய்ய வேண்டிய (ஹக்குகள்) கடமைகள் யாவை என்பது பற்றி உமக்குத் தெரியுமா? எனக் கேட்டார்களாம். இதற்கு அல்லாஹ்வும், ரஸூலும் தான் நன்கறிவார்கள் என நான் கூறினேன். பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூய்மையான உள்ளத்துடன் அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு அவனுக்கு இணைதுணை கற்பிக்காமல் இருப்பதுதான் அல்லாஹ்வுக்காக அடியார்கள் செய்ய வேண்டிய (ஹக்குகள்) கடமைகள் என்று கூறினார்கள். பின் நபியவர்கள் முஆதே! அடியார்கள் இவற்றைப் புரிந்தால் அவர்களுக்காக அல்லாஹ்வின் மீது என்ன கடமையுண்டு? என்று கேட்டார்கள். பின்னர் இதற்கு நபியவர்களே அதாவது அடியார்களை வேதனைப் படுத்தாமலிருப்பதே அவன் மீதுள்ள (ஹக்காகும்) கடமையாகும் என்று விளக்கம் கூறினார்கள்.
இந்த ஹதீஸின் வெளிச்சத்தில் நபிமார்கள், ஸாலிஹீன்கள் போன்ற நல்லடியார்களுக்கும் தூய்மையான உள்ளத்துடன் அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்து நடப்பவர்களுக்கும் (அவர்கள் சுவாதீனம் செலுத்தும்) ஏதோதோ சில உரிமைகள் (ஹக்குகள்) அல்லாஹ்வின் மீது இருப்பதாக விளங்க முடிந்தாலும் இந்த (ஹக்கை) பாத்தியதைகளைக் கொண்டு அவனுடைய ரஹ்மத் எனும் அருளை நாட வேண்டும். மனிதர்கள் தமக்கிடையில் சில விஷயங்களை அமைத்துக் கொண்டு சுவாதீனம் செலுத்துகின்ற பாத்தியதைகளைப் போன்று எண்ணி விடக் கூடாது.
மனிதர்கள் புரிகின்ற வணக்க வழிபாடுகளினால் அவர்கள் சுவாதீனம் செலுத்துகின்ற ஒரு பாத்தியதையையும் அல்லாஹ்வின் மீது சுமத்தி விட முடியாது. மனிதர்கள் தம் வழிபாட்டினால் அல்லாஹ் அவர்களுக்குக் கூலி கொடுத்தல் அவன் மீது கடமையாகி விட்டது என நினைக்கும் போது அங்கே ஈமானுக்குப் பழுது ஏற்பட்டு விடுகிறது. முஸ்லிம்கள் தம் பிரார்த்தனைகளில் எடுத்துக் கூறி சுவாதீனம் செலுத்திக் கேட்கும் அளவுக்கு எந்த ஒரு பாத்தியதையும் மனிதர்களுக்கு அல்லாஹ்வின் மீது இல்லவே இல்லை. இந்த உண்மையை நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சம்பவம் சுட்டிக் காட்டுகிறது. அதில் அல்லாஹ் நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்து உம்முடைய மூதாதையர்களுக்கு என்மீது என்ன (ஹக்கு) பாத்தியதை இருக்கிறது என்று கேட்கிறான்.இதிலிருந்து மனிதர்கள் தமக்கு மத்தியில் ஒருவர் மற்றவர் மீது செலுத்துகின்ற சுவாதீனங்களைப் போன்று அல்லாஹ்வின் மீது எந்தப் பாத்தியதையும், சுவாதீனத்தையும் சுமத்தி விடக் கூடாது என்பது தெளிவாகிறதல்லவா?
விபரமில்லாமல் அல்லாஹ்வை ரொம்ப வணங்குவதாக நினைத்துக் கொண்டிருக்கும் சில போலி வணக்கசாலிகள் தம் வணக்கங்களுக்குக் கூலி வழங்கும் பாத்தியதையை அல்லாஹ்வின் மீது சுமத்தி அவனுக்குக் கடமையாக்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் தம் வணக்கத்தை பாழாக்கி விடுகிறார்களேயொழிய எந்தப் பயனையும் அடைய மாட்டார்கள். மன்னருக்கு வேலைக்காரன் பணிவிடை புரிவதினால் மன்னரிடமிருந்து பற்பல பலாபலன்களைப் பெறுகிறான். வேலையாட்களுக்குப் பற்பல ஒத்தாசை உதவிகளை மன்னன் செய்துக் கொடுக்கிறான். அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும்இ தொல்லைகளையும் விட்டும் அவர்களைக் காப்பாற்ற மன்னன் ஏற்பாடு செய்கிறான். இது மன்னன் மீது கடமையாகிறது.
மன்னனின் பணியாளர்கள் தாம் செய்த பணியின் கூலியை மன்னனிடமிருந்து எதிர்பார்த்து செயல்பட்டது போல இறைவனையும் சில போலி வணங்கிகள் மன்னனுக்கு ஒப்பிடுகிறார்கள். தமது வணக்க வழிபாட்டின் கூலிகளை அல்லாஹ்வின் மீது கடமையாக்கி விடுகிறார்கள். இதனால் அல்லாஹ்வை மனித இனத்தைச் சார்ந்த ஒரு மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறி அவனுக்கு ஒப்புவமை கொடுத்து விடுகிறார்கள். மனிதர்களிலுள்ள இந்த அரசனையும், மற்றவர்களையும் படைத்த இறைவனுக்கும், அரசனுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை இவர்கள் விளங்கவில்லை.
அரசன் தன் பணியாளர்களின் சேவையை எதிர் நோக்கி நிற்கின்றான். இச்சேவை அரசனுக்குப் பெரிதும் தேவை. ஆனால் இறைவனுக்கு மனிதனின் வணக்கங்கள் தேவையா? இல்லவே இல்லை. வணக்க வழிபாடுகளுக்கு வருவோமேயானால் மனிதர்களின் வணக்கம் அல்லாஹ்வுக்குத் தேவையே இல்லை. வணக்கங்களை மனிதன் தன் சுய நன்மைகளை நாடியே புரிகிறானேயொழிய அல்லாஹ்வுக்குத் தன் சிருஷ்டிகளின் எந்த வழிபாடும் தேவையில்லை. அவன் தேவைகளில்லாதவன். எனவே தான் கூறினோம். இந்த உண்மையைத் திருமறையும் கூறுகிறது: "நீங்கள் நன்மை செய்தால் அது உங்களுக்குத்தான் நன்று. நீங்கள் தீமை செய்தால் அது உங்களுக்கே கேடாகும்". (17:7)
மற்றொரு வசனத்தில் இறைவன் கூறுகிறான்: "எவரேனும் நன்மை செய்தால் அது அவருக்கே நன்மையாகும். எவரேனும் பாவம் செய்தால் அது அவருக்கே கேடாகும். உம் இறைவன் தன் அடியார்களுக்கு அறவே தீங்கிழைப்பதில்லை". (41:46)
இன்னொரு வசனத்தில் இறைவன் கூறுகிறான்: "நீங்கள் நிராகரித்து விட்டாலும் அதாவது உங்கள் குஃப்ரினாலும் அவனுக்கு நஷ்டமில்லை. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தேவை இல்லாதவனாக இருக்கிறான். எனினும் தன் அடியார்கள் தன்னை நிராகரிப்பதை அவன் விரும்புவதேயில்லை. நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாயின் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்". (39:7)
இன்னொரு வசனத்தில் இறைவன் கூறுகிறான்: "எவன் இறைவனுக்கு நன்றி செலுத்தினானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கிறானோ அவன் தனக்கே தீங்கு தேடிக் கொள்கிறான். அதனால் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை. நிச்சயமாக என் இறைவன் எவருடைய தேவையற்றோனும், மிக்க கண்ணியமானவனுமாக இருக்கிறான்". (27:40)
இன்னொரு வசனத்தில் இறைவன் கூறுகிறான்: "இதற்காக நீங்கள் எனக்கு நன்றி செலுத்தினால் நான் என்னுடைய அருளை பின்னும் நான் அதிகப்படுத்துவேன். நீங்கள் என்னுடைய அருளுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கொடியதாக இருக்கும். மேலும் நபி மூஸா தம் மக்களை நோக்கி நீங்களும் உலகிலுள்ள மக்கள் யாவரும் இறைவனுக்கு முற்றிலும் மாறு செய்த போதிலும் அவனுக்கொன்றும் நஷ்டமேற்பட்டு விடாது. ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் இல்லாதவனும், புகழுக்குரியவனுமாக இருக்கிறான்". (14:7-8)
இன்னொரு வசனத்தில் இறைவன் கூறுகிறான்: "நிராகரிப்பால் அவர்கள் விரைந்தோடுவது உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு யாதொரு தீங்கும் செய்து விட முடியாது" (3:176).
மற்றொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்: "எவர்கள் அங்கு யாத்திரை செல்ல சக்தியுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வாலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் இதை நிராகரித்தால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை". (3:97)
இன்னொரு வசனத்தில் இறைவன் கூறுகிறான்: ''நாம் அல்லாஹ்வுக்காக செய்கிற அமல்களை அவன் மீது எடுத்துரைத்து தமக்குரிய பாத்தியதைகளைக் கூறுவதற்கு முன்னர் அல்லாஹ்வாகவே நம்மீது அவன் புரிந்த பேருதவிகளை எடுத்துக் கூறி விளக்கம் தருகிறான்: "அவர்கள் இஸ்லாத்தை தழுவியதின் காரணமாக உம்மீது (நபியின் மீது) ஏதோ பேருபகாரம் செய்து விட்டதாகக் கருதுகின்றனர். நீர் கூறும்! நீங்கள் இஸ்லாத்தில் சேர்ந்ததினால் எனக்கு உபகாரம் செய்ததாகக் கருதாதீர்கள். எனினும் விசுவாசத்தின் நேர்வழியில் உங்களைச் செலுத்தியதின் காரணமாக அல்லாஹ்தான் உங்கள் மீது உபகாரம் செய்ததாக எடுத்துரைக்கிறான். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதனை நன்கு அறிந்து கொள்வீர்கள்". (49:17)
பிரிதொரு இடத்தில் இறைவன் கூறுகிறான்: "நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வுடைய தூதரிருக்கிறார். பல விஷயங்களில் அவர் உங்களுக்கு வழிபடுவதென்றால் நிச்சயமாக நீங்கள் தாம் நஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். இருப்பினும் அல்லாஹ் ஈமானை விசுவாசத்தை விரும்பும்படி உங்களை ஆக்கினான். உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கி வைத்தான். மேலும் குஃப்ரையும், பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாக்கி வைத்தான். இத்தகையோர் தாம் நேரான வழியில் இருக்கின்றனர். (மிகச் சிறந்த இவ்வர்ணிப்பை அடைவது) அல்லாஹ்வுடைய கிருபையும்m அருளுமாகும். அவன் நன்கறிந்தோனும்இ ஞானமுடையோனுமாக இருக்கின்றான்". (49:7-8)
ஹதீஸ் குத்ஸியில் இறைவன் கூறுகிறான்: '
''என்னுடைய அடியார்களே! ஒருபோதும் உங்களால் எனக்கு நன்மை செய்யவோ, தீங்கிழைக்கவோ இயலாது. இரவு பகலாக நீங்கள் எத்தனையோ குற்றங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நான் அவையனைத்தையும் மன்னித்து விட்டேன். ஆகவே என்னிடம் மன்னிப்பைக் கேளுங்கள். உங்களை மன்னித்து விடுகிறேன். என் அடியார்களே! உங்களில் தோன்றிய முன்னோர்கள், பின்வருவோர்கள், மனு-ஜின் வர்க்கத்தினர் எல்லோரின் இதயங்களும் பாவம் செய்யும் இயல்புடையதாக மாறி விட்டால் கூட அவை என்னுடைய ஆட்சி பலத்தை எள்ளவும் குறைத்து விடாது.
என் அடியார்களே! இதற்கு மாறாக உங்களிலுள்ள மானிடர்கள் மற்றும் ஜின் இனங்கள் மேலும் தொன்றுதொட்டே தோன்றிய, மறுமை நாள் வரையில் தோன்றவிருக்கும் படைப்புகள் அனைத்தின், அனைவரின் இதயங்களிலெல்லாம் இறைபக்தி நிரம்பிய ஓர் இதயமாக மாறிவிட்டால் கூட இதனால் இவை என்னுடைய ஆட்சி அதிகாரத்தில் ஒரு அணுவளவைக் கூட அதிகமாக்கி விடப் போவதில்லை.
என் அடியார்களே! நீங்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒரே திடலில் ஒரே குரலில் நின்று தத்தம் தேவைகளை வேண்டி அதற்கொப்ப நான் உங்கள் அனைவருக்கும் அவரவர் வேண்டுகோளுக்கிணங்க தந்துவிட்டேனென்றால் கூட அதுவும் என்னுடைய பொக்கிஷத்தைக் குறைத்து விடப் போவதில்லை. சமுத்திரத்தில் முக்கப்பட்ட ஊசியின் முனையிலிருக்கும் ஈரநைப்பால் சமுத்திரம் எந்த அளவு குறையுமோ அந்த அளவுக்குத்தான் என்னுடைய பொக்கிஷத்தைக் குறைக்குமேயொழிய வேறு எவற்றையும் அதிகமாகக் குறைத்து விடாது.''
அதிய்யத்துல் ஊபி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அபூ ஸயீதுல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் வருகிறது: தொழுகைக்கு புறப்படும் ஒரு மனிதனுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கீழ்வரும் பிரார்த்தனையை சொல்ல வேண்டுமென்று கற்றுக் கொடுத்தார்கள்.
'இறைவா! உன்னிடம் பிரார்த்திப்பவர்களுக்காக உன் மீதுள்ள பாத்யதையை (ஹக்கைப்) பொருட்டாக வைத்துக் கேட்கிறேன். இதோ நான் நடந்து செல்லும் பாதையின் பொருட்டால் கேட்கிறேன். நான் வீட்டிலிருந்து அகங்காரத்தை நாடி புறப்பட்டதில்லை. அமானிதத்திற்காகவோஇ பெருமையையோ, முகஸ்துதியையோ எதிர்பார்த்து நான் புறப்படவில்லை. உன் கோபத்தை பயந்தவனாகவும்இ உன் திருப்பொருத்தத்தை நாடியுமே நான் கிளம்பியிருக்கிறேன்' (அஹ்மத், இப்னு மாஜா)
இந்த ஹதீஸை இமாம் அஹ்மதும், மற்றும் இப்னு மாஜா போன்றவர்கள் அறிவித்தாலும் இதன் (இஸ்னதில்) அறிவிப்பாளர் பட்டியலில் பலவீனமான அறிவிப்பாளரான அதிய்யதுல் ஊபி இடம் பெறுவதினால், இந்த ஹதீஸைப் பற்றி முஹத்திஸீன்கள் பலவீனமானதென்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். ஸஹீஹான ஹதீஸ் என்று நாம் கருதினால் கூட இந்த ஹதீஸ் பொருத்தமான விளக்கத்தைத்தான் அளிக்கிறது. அதாவது கேட்பவர்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் மீதுள்ள கடமை (ஹக்கு) அவர்களின் கேள்விக்கு பதில் கொடுப்பது, அவர்கள் பிரார்த்தனைகளை அங்கீகரிப்பது மேலும் அவர்களின் வணக்கங்களுக்கு பிரதிபலன் நல்குவது. இப்படியாக பதில் கொடுத்தல், துஆக்கள் அங்கீகரித்தல், பிரதிபலன் நல்குதல் இவை அனைத்துமே அல்லாஹ்வின் ஹக்குகளாகும். இவற்றை அல்லாஹ் தன் மீது வாஜிபாக்கிக் கொண்ட (ஸிபாத்துகள்) தன்மை எனலாம்.அப்படியென்றால் மனிதன் அல்லாஹ்வின் ஸிபாத்துகளின் பொருட்டால் பிரார்த்தனை செய்தால் அது மேலான விரும்பத்தகுந்த பிரார்த்தனையாகிறது. இதைத்தாம் நாம் முன்னர் கூறியிருக்கிறோமே. மனிதன் விசுவாசத்தின் பொருட்டாலும், அல்லாஹ்வின் திருநாமங்கள், அவனுடைய தன்மை (ஸிபாத்து) கள் பொருட்டாலும் வேண்டப்படும் பிரார்த்தனைகள் அனைத்துமே அங்கீகரிக்கப் படுவதற்குக் காரணமாகின்றன. இறைவன் தன் திருமறையில் இதை சுட்டிக்காட்டும் போது: "விசுவாசங் கொண்டு நற்கருமங்கள் செய்தோர்களின் பிரார்த்தனைகளை அவன் அங்கீகரித்து அவர்களுக்கு தன்னுடைய அருளை மேலும் அதிகப் படுத்துகின்றான்" எனக் கூறினான். (42:26)
இதைப்போல இறைவன் வாக்களித்திருக்கும் வாக்குறுதிகளைக் கொண்டும், அவற்றின் பொருட்டாலும் பிரார்த்தனைகள் வேண்டப்பட அனுமதிக்கப்படுகிறது. ஏனென்றால் இறைவனின் வாக்குறுதி தவறாகாது அல்லவா? நிச்சயம் வாக்குறுதிகொப்ப நடைபெறத்தான் செய்யும். எனவே அந்த வாக்குறுதிகளை முன் வைத்தும் துஆக்கள்வேண்டலாம்
இந்த உண்மையைக் கீழ்வரும் இறைவசனம் மேலும் விளக்கிக் காட்டுகிறது: "(மூமின்கள் கூறுவார்கள்) இரட்சகனே! 'உங்கள் இறைவனை விசுவாசியுங்கள்' என எங்களை விசுவாசத்தின் பக்கம் அழைத்தோரின் அழைப்பை நிச்சயமாக நாங்கள் செவியேற்று நாங்களும் அவ்வாறே விசுவாசம் கொண்டோம். ஆதலால் இறைவா! எங்கள் குற்றங்களை மன்னித்து எங்கள பாவங்களிலிருந்து விடுவித்து முடிவில் நல்லோர்களுடன் எங்களை இறக்கச் செய்வாயாக!". (3:193)
இன்னொரு இடத்தில் இறைவன் குறிப்பிடுகிறான்: "நிச்சயமாக என்னுடைய அடியார்களில் ஒரு வகுப்பார் இருந்தனர். அவர்கள் (என்னை நோக்கி) 'இறைவனே! நாங்கள் உன்னை விசுவாசிக்கிறோம். நீ எங்களுடைய குற்றங்களை மன்னித்து எங்கள் மீது அருள் புரிவாயாக! அருள் புரிவோரிலெல்லாம் நீ மிக்க மேலானவன் என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். ஆனால் நீங்களோ என்னை தியானிப்பதை முற்றிலும் மறந்து விட்டு, அவர்களைப் பரிகசித்து அவர்களைப் பற்றி சிரித்துக் கொண்டிருந்தீர்கள்". (23:109-110)
பத்று யுத்தம் நடந்த அன்று நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'இறைவா! நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்றித் தந்தருள்!' என்று. இதைக்கூறி அல்லாஹ்வின் வாக்களிப்பை ஆசை வைத்துப் பிரார்த்தித்தார்கள்.
தௌராத் வேதத்திலும் கீழ்வரும் சம்பவம் காணப்படுகிறது: பனூ இஸ்ரவேலர்கள் மீது இறைவனின் கோபம் இறங்கிய வேளையில், நபிகள் மூஸா அலை ஹிஸ்ஸலாம் அவர்கள் தம் இறைவனிடத்தில் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறைவன் முன்னர் ஒருமுறை வாக்களித்ததை முன்வைத்து, அதை எடுத்துக் காட்டி அந்த வாக்குறுதியின் பொருட்டால் மூஸா அலைஹிஸ்ஸலாம் தமக்காகப் பிரார்த்தித்தார்கள். நல்ல அமல்களின் பொருட்டாக பிரார்த்தனை செய்வது ஷரீஅத் அனுமதிக்கின்ற ஒரு பிரார்த்தனையாகும். குகையில் அகப்பட்ட மூவரின் வரலாற்றை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வை மட்டும் நாடி கலப்பற்ற ரீதியில் புரிந்த அமல்களைப் பொருட்டாக வைத்துப் பிரார்த்தித்தனர். இதனால் பாறை தானாக விலகியது. ஆம், உண்மையான ரீதியில் நல்ல அமல்களைத் தூய எண்ணத்துடன் மனிதன் செய்யும்போது அவனை இறைவன் நேசிக்கிறான். அவனுடைய அமலைப் பொருந்திக் கொள்கிறான். இதனால் அந்த அமல்களைச் செய்தவனின் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுகின்றன. ஏனெனில் தம் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் நிலைமையில் இம்மனிதனை அவனது நல்லமல்கள் திருப்பி விட்டன. எப்போது இவன் பிரார்த்தித்தாலும் அது அங்கீகரிக்கப்பட ஏதுவாகிறது.
குகையில் அகப்பட்ட மூவரில் ஒருவர் தம் பெற்றோர்களுக்காக பேருதவி செய்து கொடுத்ததைப் பொருட்டாக வைத்து பிரார்த்தனை செய்தார். மற்றொருவர் தமது சம்பூர்ண பத்தினித் தன்மையை எடுத்துக்கூறிப் பிரார்த்தனை செய்தார். மூன்றாமவர் தனது நாணயத்தையும், உபகார மனதையும் எடுத்துரைத்து துஆ இறைஞ்சினார். இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நள்ளிரவு வேளைகளில் கூறுவார்கள்: இறைவா! உனக்கு வழிப்பட வேண்டுமென்று நீ என்னைப் பணித்தாய். வழிப்பட்டேன். என்னை நீ அழைத்தாய். இதோ வந்திருக்கிறேன் இந்த நள்ளிரவு வேளையில். எனவே எனக்கு மன்னிப்பு அருள்வாயாக!.
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஃபா மலைமீது ஏறி நின்று கூறினார்கள்: 'இறைவா! என்னிடம் கேட்டுப் பிரார்த்தியுங்கள். நான் தருகிறேன் என நீ கூறியுள்ளாய். இதோ உன்னை அழைக்கிறேன். நீ வாக்குறுதி பிறழாதவன்' என்று கூறிவிட்டு தம் தேவைகளைக் கேட்டு பிரார்த்தித்தார்கள். நபிமார்களின் அல்லது மலக்குகளின் அல்லது நல்ல மனிதர்களின் (ஹக்கால்) பொருட்டால், (ஹுர்மத்தால்) மேன்மையால் (ஜாலால்) அந்தஸ்தால் என்றெல்லாம் இவர்களின் அந்தஸ்தையும், மதிப்பையும் எடுத்துரைத்து அவற்றைப் பொருட்டாக வைத்து மனிதன் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தித்தால், இது தவறான பிரார்த்தனையாக கருதப்படும்.ஏனென்றால் இப்பிரார்த்தனையின் தாத்பரியத்தில் தவறான கருத்துக்களைக் காண முடிகிறது. நல்ல மனிதர்களுக்கு அவர்களுடைய உரிமை என்று கருதப்படக்கூடிய சில (ஹக்குகள்) பாத்யதைகள் அல்லாஹ்விடத்தில் இருப்பதாக இதிலிருந்து விளங்க முடிகிறதல்லவா? மனிதன் தன் உரிமை என்று கருதும் அளவுக்கு என்ன பாத்யதைகள் தான் அல்லாஹ்வின் மீது கடமையாகி விடப் போகின்றன? அப்படியொன்றும் அல்லாஹ்வின் மீது கடமையில்லை என்பது தானே மூமின்களின் விசுவாசம்.
நபிமார்களுக்கும் நல்ல மனிதர்களுக்கும் அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்துகளையும், நல்ல பெரிய பதவிகளையும் வைத்திருக்கிறான் என்பது உண்மைதான். குறிப்பாக நபிமார்களுக்கு நல்ல பல பதவிகள் அல்லாஹ்விடத்தில் உண்டு. இந்த நபிமார்களைப் பின்பற்றி அவர்கள் காட்டிச் சென்ற வழியை அனுசரித்து நடந்தவர்களுக்கும் நல்ல பல கூலிகளை அல்லாஹ்விடமிருந்து பெற முடியும். (நன்மக்கள்) ஸாலிஹீன்களுக்குப் பற்பல அந்தஸ்துகள் அல்லாஹ்விடத்தில் உண்டு என்பதின் தாத்பரியம் என்னவென்றால் சுவனத்தில் இவர்களின் படித்தரத்தையும், (அதுவும் இறைவன் நாடினால்) மதிப்பையும் மேன்மைப் படுத்தி விடுவான் என்பதாகும். தவிர இவர்களைப் பொருட்டாகக் கொண்டு கேட்கின்ற பிரார்த்தனைகளை கண்டிப்பாக அல்லாஹ் அங்கீகரிப்பான் என்பதல்ல அதன் தாத்பரியம். இவர்களின் மதிப்பை எடுத்துக் கூறி பிரார்த்தித்தால் ஒரு போதும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
நபிமார்களுக்குக் கூட அல்லாஹ்வின் அனுமதியின்றி சிபாரிசு செய்ய அதிகாரமில்லாமலிருக்கும் போது அவர்களை விட மதிப்பில் குறைந்தவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் என்ன உரிமை கொண்டாட முடியும்?இறைவன் கூறுகிறான்: "அல்லாஹ்வின் அனுமதியின்றி அவனிடத்தில் யார்தான் சிபாரிசு செய்ய முடியும்? (2:255)
அன்பியாக்களின் மதிப்பால் மனிதன் எப்பொழுது பயன் பெறுகிறான் தெரியுமா? அவர்களின் வழிமுறைகளைக் கடைபிடித்தொழுகும் போதுதான். அல்லாஹ்வைப் பற்றி அவர்கள் போதித்தவற்றை செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். அதற்கொப்ப வழிப்பட்டு நடக்க வேண்டும். அந்த நபிமார்களின் வாழ்க்கை முறைகளை மனிதன் அணுஅணுவாகப் பின்பற்ற வேண்டும். அப்படியானால் நபிமார்களின் அந்தஸ்தாலும், மதிப்பாலும் மனிதன் பயனடைந்தான் என்று கூற முடியும்.
இங்குதான் நபிமார்களின் அந்தஸ்தும், மேன்மையும் மனிதனுக்குப் பயனளிக்கின்றன. மூமின்களுக்கு நபிமார்கள் எவற்றையெல்லாம் காட்டிச் சென்றார்களோ அவற்றுக்கொப்ப மூமின்கள் தம் வாழ்க்கையில் செய்து காட்டினால் அன்பியாக்களின் பொருட்டாலும் மூமின்கள் வெற்றி பெற்றார்கள் என்று கூற முடியும். இதைப் போலதான் நபிமார்களின் துஆக்களும், ஷபாஅத்தும். இந்த நபிமார்கள் மற்றும் நன்மக்கள் இவர்களெல்லாம் மூமின்களுக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தித்தால், அவனிடத்தில் ஷபாஅத்துச் செய்தால் இங்கேயும் மூமின்கள் அன்பியாக்களுடைய மதிப்பாலும், அந்தஸ்தாலும் பயனடைந்தார்கள் என்று கூற முடியும்.
இதற்கு மாறாக நபிமார்களிடமிருந்து துஆக்கள் பெருமளவுக்கு மனிதன் நடந்து கொள்ளாமலும், அவர்களிடமிருந்து சிபாரிசு பெறும் அருகதையும் அவன் அடையாமல் இருக்கின்ற வேளையில் அந்நபிமார்களைப் பொருட்டாக வைத்துப் பிரார்த்திப்பதில் அவர்களின் அந்தஸ்தையும், மேன்மையையும் எடுத்துக் கூறி துஆச் செய்வதில் என்ன பயனிருக்கிறது? எனவே தான் கூறினோம்: நபிமார்களின் மதிப்பைக் கொண்டும், பெரியோர்களுக்குரிய அந்தஸ்தைக் கொண்டும் மனிதன் பயன்பெற வேண்டுமானால் அது அவர்களை முன்னிறுத்தியோ, அவர்களின் சிறப்பை எடுத்துக் கூறியோ துஆ கேட்பதின் மூலமாகப் பெறக் கூடியதல்ல. அவர்களின் நெறிமுறைகளை மனிதன் பின்பற்றியொழுகும் பொழுதுதான் அவர்களால் இவன் பயனடைந்தான் என்று கருதப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot