நாட்டிலேயே முதல் முறையாக மக்கள் சாசனம்!
புது தில்லி: நாட்டிலேயே முதல் முறையாக மக்கள் சாசனச் சட்டத்தை தில்லி அரசு அமல்படுத்துகிறது. இந்தச் சட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி அமலுக்கு வர உள்ளது.
ஜன லோக்பால் சட்டம் நிறைவேற்றக் கோரி போராடி வரும் அண்ணா ஹசாரேவின் கோரிக்கைகளில் மக்கள் சாசனச் சட்டமும் ஒன்று.
மக்களுக்கு அரசின் உதவிகள், சேவைகள் உரிய காலத்தில் கிடைக்கும் வகையில், தில்லி அரசு கடந்த மார்ச் மாதம் மக்கள் சாசன சட்டத்தை இயற்றியது.
இந்தச் சட்டத்தின் படி, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை கோரி விண்ணப்பிப்போருக்கு குறித்த நாட்களுக்குள் கிடைக்க வேண்டும். அவ்வாறு வழங்கத் தவறும் அரசு அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.இந்த அபராதத் தொகை ஒரு நாளைக்கு ரூ.10 முதல் ரூ.200 வரை வசூலிக்கப்படும். அதிகபட்ச அபராதத் தொகை ரூ.5000 வரை வசூலிக்கப்படலாம்.
அரசின் சேவைகள் கிடைக்கவும், அதற்கான கால அவகாசத்தைக் கேட்டுப் பெறவும் மக்களுக்கு உரிமை உண்டு.
உத்தேச மக்கள் சாசனச் சட்டம் செப்டம்பர் 15-ம் தேதி தில்லியில் அமலுக்கு வரும். இதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள், சேவைகள், அரசுப்பணிகள் மக்களுக்கு சிறப்பாக சென்றுச் சேரும். அதிகாரிகளும் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என மாநில அரசின் அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த மக்கள் சாசனத்தின் கீழ், வருவாய், உணவு வழங்கல், போக்குவரத்து, வணிகம், வரிகள்,மாநகராட்சி ஆகிய துறைகள் கொண்டு வரப்படும்.
மக்கள் சாசனத்தின்படி, இனி குடும்ப அட்டையை, விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை 7 வேலை நாட்களுக்குள் மாநகராட்சி நிர்வாகங்கள் வழங்க வேண்டும்.
வாகன ஓட்டுநர் உரிம அட்டையை ஒரு நாளைக்குள் புதுப்பித்துத் தர வேண்டும். பயிற்சி ஓட்டுநர் வாகன உரிம அட்டையை, விண்ணப்பித்த அன்றே தர வேண்டும்.
இந்த சட்டத்தை அமல்படுத்த தில்லி காவல் துறைக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக