ஆயிரம் பிறை கண்ட கண்கள்! - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

14 ஜூன், 2011

ஆயிரம் பிறை கண்ட கண்கள்!

தயவு செய்து இக்கட்டுரையை முழுமையாகப் படியுங்கள் ]
ஒன்றை இழந்தால் தான் மற்றொன்று கிடைக்கும். ஆம், நாம் நமது வயதை இழந்து அனுபவத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். நமது தாத்தா, பாட்டிகளிடம், நம்மிடம் இதுவரை சொல்லாத எத்தனையோ அனுபவக் கதைகள் அவர்கள் மனதில் புதையுண்டு கிடக்கின்றன.
மரத்தின் வயது ஏற ஏற அதிகரிக்கும் வளையங்கள் போல மனிதர்களின் தோல்களிலும் சுருக்கங்கள் வயதிற்கேற்ப அதிகரிக்கின்றன. உடல் வலு இழக்கிறது, ஞாபக சக்தி குறைகிறது, உடல் கலைத்து ஓய்வு தேடுகிறது. நடப்பதற்கும், சாப்பிடுவதற்கும் மற்ற அன்றாட செயல்களுக்கு பிறரின் உதவி தேவைப்படுகிறது.
குழந்தையின் சிரிப்பில் மட்டுமல்ல முதுமையின் சிரிப்பிலும் இறைவனைக் காணலாம். எண்பது வயதுக்கு மேல் மனிதன் மீண்டும் குழந்தையாகத் துவங்குகிறான். பிறர் உதவி இன்றி தனித்து செயல்பட முடிவதில்லை.
எல்லோரும் இளமையாக இருக்க நினைப்பதை தவிர்க்க முடியவில்லை. அதற்கான முனைப்பு இல்லாதவர்களை பார்ப்பது அரிது. நரைக்கும் முடிக்கு சாயம் பூசி, விழுந்துவிட்ட பல்லுக்கு பொய்பல் கட்டி எப்படியாவது இளமையை தங்க வைத்துக் கொள்ள முயல்கிறார்கள்.
வயதானவர்கள் உலகத்தின் வாழ்க்கையை வேறு மாதிரியாகப் பார்க்கிறார்கள். அவர்கள் பார்வையில்உலகம் தன்னை அன்னியப் படுத்திவிட்டதாகவே உணர்கிறார்கள்.
பதின் வயதுகளில் பள்ளி கோடை விடுமுறை நாட்களில் தாத்தா இருக்கும் ஊருக்கு சென்று தங்குவது வழக்கம். அதுவும் கிராமம். அங்கே எங்கள் வீட்டு இரும்பு கேட்டிற்கு முன் ஊர் பஞ்சாயத்து டி.வி. இருக்கும். அமர்ந்து பார்பதற்கு கொட்டகை போன்ற அமைப்பில் தூண்கள் நிறுத்தி கூரை வேய்ந்திருப்பர்.
மாலை ஏழு மணிக்கு மேல்தான் டி.வி. பார்க்கவே ஆரம்பிப்பார்கள். அதுவரை, பகல் வேளைகளில் ஊரில் இருக்கும் வயதானவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த இடத்திற்கு சோம்பேறி மடம் என்றே பெயர். வயதானவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்கு எதற்கு சோம்பேறி மடம் என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. முதிர்ந்த வயதில் ஓய்வாக அமர்ந்திருப்பது சோம்பேறித்தனமா என்ன?
பகல் வேளையில் அங்கு அமர்திருப்பவர்கள் பெரும்பாலும் அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். பேசிக்கொண்டோ , தாயம் அல்லது பதினைந்தாம் கரம் விளையாடிக் கொண்டோ அவர்களுடைய பகல் மெதுவாகவே நகரும். அவர்களுடைய விளையாட்டிலும் அவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது. ஜெயிப்பது பற்றியோ தோற்றது பற்றியோ கவலை இருக்காது. அவர்களுக்குத் தேவை நேரம் செல்ல வேண்டும், அவ்வளவுதான்.
சில நாட்கள் நான் அங்கு சென்று அமர்ந்திருப்பது உண்டு.
அங்கு ஒரு தாத்தா தினமும் வருவார்,
எண்பத்தைந்து வயதுக்கு மேல் இருக்கும்.
ஆயிரம் பிறை கண்ட கண்கள்,
தலையிலிருந்து புருவம் வரை அனைத்து முடிகளும் நரைத்து வயதிற்கு கட்டியம் கூறிக் கொண்டிருக்கும்.
தடி ஊன்றி மெல்ல நடந்து வருவார்.
அதிகம் பேச மாட்டார்,
மற்றவர்கள் பேசுவதையும் வருவதையும் போவதையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருப்பார்.
யாராவது கேள்வி கேட்டாலோ, பேச்சு கொடுத்தாலோ ஓரிரு வார்த்தைகள் பேசுவார்.
அப்பொழுது இதையெல்லாம் பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்திருப்பேன். பின்பு அதற்க்கு மேல் அங்கு சலிப்புற்று வீட்டிற்க்கு வந்து விடுவேன். இப்பொழுது யோசித்துப் பார்க்கும் பொழுது அந்த பெரியவர்கள், அவர்களின் நடவடிக்கைகள் எல்லாம் அப்படியே கண்முன் நிற்கிறது.
இளமை காலத்தில் ஓயாமல் பேசிய வாய் ஏன் இன்று மெளனத்தை தரித்துக் கொண்டிருக்கின்றன. உலகத்தின் பரபரப்பான நிகழ்வுகளில் இருந்து உடற்சோர்வு அவர்களை தனிமைப் படுத்தி விட்டதோ. கண் பார்வை மங்கி, கேட்கும் திறன் குறைந்து, அதீத ஞாபக மறதியுடனான வாழ்க்கை பிடிப்பற்றதாகி விடுகிறதோ.
அவர்கள் எந்த ஒரு செயலையும் தம் இளமை காலத்தோடு ஒப்பிட்டுப் பார்பதாகவே தோன்றுகிறது. நம்முடைய செயல்களைப் பார்க்கும்போதோ அல்லது அது பற்றி பேச்சு எழும் போதோ பல பெரியவர்கள் 'உன்ன மாதிரிதா அந்த காலத்துல நானு...' என்று அவர்களுடைய அனுபவத்தை கூற ஆரம்பிக்கிறார்கள். அவர்களுடைய மனது தமது இளமை கால நினைவுகளை தொடர்ந்து அசை போட்டபடியே இருக்கிறது.
எண்பது வயது நிச்சயம் ஓய்வு எடுக்க வேண்டிய வயது. ஆனால் சிலருக்கு அது கிடைப்பதில்லை. பெற்ற குழந்தைகளால் புறக்கணிக்கப் படும் பொழுது தங்களுடைய மிச்ச வாழ்நாளை கழிக்க எதாவது ஒரு வேலை செய்ய வேண்டி இருக்கிறது.
மிக சிலரே எண்பது வயது தாண்டியும் விருப்பப் பட்டு வேலை செய்கின்றனர். எங்கள் வீட்டிற்குப் பக்கத்துக்கு வீட்டில் ஒரு முதியவர் வயது தொண்ணூறை தொடும். ஆரோக்கியமான தேகம் இல்லாவிட்டாலும் இன்னும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார். இந்த வயதிலும் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விடுவார். அவரால் எப்பொழுதும் சும்மா உட்கார்ந்திருக்கவே முடியாது. எதாவது சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே இருப்பார். வீட்டில் இருப்பவர்கள் 'ஏன் இப்படி சிரமப்படுகிறீர்கள்..' என்று கூறினாலும், அவருக்கு வேலை செய்வது சிரமம் இல்லை, சும்மா உட்காந்திருப்பதுதான் சிரமம்.
அதே போல் வயது முதிர்ந்த பாட்டி ஒருவர். தினமும் ஆடு மேய்ப்பதை பார்க்க முடியும். விடாமல் மழை பெய்யும் நாட்கள் தவிர அவர் ஆடு மேய்க்காமல் இருந்த நாள் கிடையாது. ஆனால் இப்பொழுது சுத்தமாக நடமாட முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டார். தன்னால் வேலை செய்ய முடியாமல் போனது அவர் மனதை மிகவும் பாதித்திருக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்களை எல்லாம் காரணமின்றி திட்ட ஆரம்பித்தார். இன்றும் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் யாரையாவது திட்டிக் கொண்டே தான் இருப்பார். அதற்க்கு காரணம் நிச்சயம் தன்னால் முன்பு போல் எழுந்து நடக்க முடியவில்லை, வேலை செய்ய முடியவில்லை என்பதே.
தனது இயலாமையை மற்றவர்களை திட்டுவதன் மூலம் வெளிப்படுத்துகிறார். இவ்வளவு காலமும் இந்த குடும்பத்திற்கு உதவியாய் இருந்துவிட்டு இன்று பயனற்று படுத்திருப்பதை அவர் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.
எந்நேரமும் ஓய்வாக இருப்பவருக்கு ஒவ்வொரு நாளும் மற்றும் ஒரு நாளே. குறிப்பிட்ட நேரத்திற்கு உண்பது உறங்குவது என்று ஒரு சின்ன சுழற்சிக்குள் தங்களை அடைத்துக் கொள்கிறார்கள். பண்டிகை பற்றியோ விசேஷ தினங்கள் பற்றியோ பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. உணவு உடை என்று எதிலும் நாட்டம் இல்லாமலே இருக்கின்றனர். அவர்களுக்கான தேவைகளும் மிகவும் குறைந்துவிடுகிறது.
நண்பர்களிடம் தனிமை பற்றி எவ்வளவோ சிலாகித்துக் கூறியிருக்கிறேன்.
ஆனால் அதே தனிமைதான் முதியவர்களை வாட்டி வதைக்கிறது.
அவர்களிடம் சற்று நேரமேனும் பொறுமையாக அமர்ந்து உரையாட குடும்பத்தில் யாருக்கும் நேரம் இருப்பதில்லை.
நேரம் இருந்தாலும் அவசியம் இருப்பதில்லை.
பொத்திப் பொத்தி வளர்த்த தம் மக்களே தன்னை புறக்கணிப்பதை நினைத்து மன வாட்டம் கொள்கின்றனர்.
இன்றைய வாழ்க்கை முறை அவர்களை வெகுவாக பாதிக்கிறது. அவர்களால் இந்த அவசர வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதேபோல் தங்களுடைய வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் நிராகரிக்கப் படுவதையும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
சரியாக ஞாபகம் இல்லை, அப்பொழுது எனக்கு பன்னிரெண்டு வயதிருக்கும். தோட்டத்தில் இருக்கும் கிணறுக்குச் சென்று நண்பர்களுடன் நீச்சல் அடிப்பது வழக்கம். ஒரு முறை பக்கத்து தோட்டத்தில் இருந்த தாத்தாவும் குளிப்பதற்காக வந்தார். தள்ளாடும் நடை, இருந்தாலும் எப்போதாவது கிணற்றுக்கு வருவதுண்டு. நீச்சல் தெரிந்தாலும் படிக்கட்டிலேயே அமர்ந்து குளிப்பார்.
நாங்கள் அங்கும் இங்கும் குதித்து விளையாடிய பொழுது அவர் முகத்தில் தண்ணீர் அடித்தது. 'கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடுங்கப்பா..' என்று கூறினார். அன்றைய குறும்புப் பருவத்தில் அவருடைய சிரமம் எங்களுக்கு தெரியவில்லை. வேண்டும் என்றே மேலும் மேலும் கை கால்களை அடித்து தண்ணீரை சிதறடிக்கச் செய்தோம். தாத்தாவால் படியில் நிற்கவே முடியவில்லை. அவர் மீண்டும் வேண்டாம் என்று சொல்லியும் நாங்கள் கேட்பதாக இல்லை.
மெதுவாக கிணற்றிலிருந்து மேலே ஏறி நின்றவர் 'இப்படிப் பன்னறீங்கலேப்பா..' என்றார் மெல்ல. அப்படிக் கூறும் பொழுதே அவர் குரல் கம்மியது. உதடுகள் துடித்தது. அதுவரை விளையாட்டாக செய்துகொண்டிருந்த நாங்கள் சட்டென்று அமைதியாகிவிட்டோம். என்ன சொல்ல வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை. தாத்தாவும் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அவருடைய உதடு துடித்து குரல் கம்ம என்ன காரணம். பிறகு அதுபற்றி நினைக்கும் போதெல்லாம் என் மனது கணக்கும். அந்த வயதான முதியவரின் உள்ளம் என்னவெல்லாம் நினைத்திருக்கும். தன் இளமை காலத்தில் இதுபோல் எப்படியெல்லாம் நீச்சல் அடித்திருப்பார், இன்று தன் இயலாமையை நினைத்து வருந்தினாரா? தான் சொல்வதை இந்த சிறுவர்கள் கூட கேட்க மாட்டேன் என்கிறார்களே என்ற ஆதங்கமா? அது மனதளவில் என்னை பாதித்த நிகழ்ச்சி. வயது முதிர்ந்தவர்களிடம் அவர்கள் மனது நோகாமல் நடந்துகொள்ளவேண்டும் என்று எனக்கு உணர்த்திய நிகழ்ச்சி.
சொந்த தாத்தா பாட்டியையே மதிக்காத இந்தக் காலத்தில் வயதிற்கு மரியாதை கொடுப்போர் மிகச் சொற்பமே. அந்தக் காலத்தில் தாங்கள் பெற்ற அனுபவம் இன்றைய இளைய தலைமுறைக்கு வாய்மொழியாக கூற நினைத்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்று அமைதியாகி விடுகின்றனர்.
எல்லா வீடுகளிலும் முதியவர்கள் இருந்தால் அவர்களுக்கென இடம், படுக்கை ஒதுக்கப் படுகிறது. அவற்றோடு சேர்த்து அவர்களும் ஒதுக்கப் படுகிறார்கள். அவர்களும் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தை தாண்டி அதிகம் வெளியே வருவதில்லை. ஒரு ஆமை தன் ஓட்டிற்குள் பதுங்கிக் கொள்வதைப் போல அவர்களும் தங்களுக்கான இடத்திலேயே முடங்கிக் கொள்கிறார்கள்.
ஒரு உண்மையை எல்லோரும் மறந்து விடுகிறோம். எல்லோருக்கும் ஆயிரம் முறை முழு பிறை காண கிட்டுவதில்லை.
by : பாலமுருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot