மவ்லவீ, அ. முஹம்மது கான் பாகவி.
கணவன் - மனைவி இடையே சுமூகமான உறவில்லாமல், அடிக்கடி சண்டையும் சச்சரவும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது என வைத்துக் கொள்வோம். இவர்கள் இதே குழப்பமான நிலையில் வாழத்தான் வேண்டுமா? அல்லது நீதிமன்றம் தலையிட்டு இருவரையும் பிரித்துவைத்து விடலாமா?
இத்தகைய தருணங்களில் தம்பதியரின் பிரச்சனைகளைப் பரிசீலித்து ஒரு முடிவு எடுப்பதாகவேண்டி,கணவன் குடும்பத்திலிருந்து ஒருவரும், மனைவி குடும்பத்திலிருந்து ஒருவருமாக ‘இரு நபர் நடுவர் குழு’ ஒன்றை நியமிக்க வேண்டும் என்பது மார்க்கச் சட்டமாகும். தம்பதியரில் ஒருவர் மற்றவரைப்பற்றிப் புகார் செய்யும்போது ஷரீஅத் நீதிமன்றம் இந்த நடுவர் குழுவை ஏற்படுத்தலாம்.பிரச்சனையை விவாதித்து நடுவர் குழு நீதிமன்றத்திற்கு அறிக்கை தரும்.தம்பதியரிடையே சமாதானம் செய்து வைத்து, இருவரும் இல்லற வாழ்க்கையைத் தொடரச் செய்ய முடியும் என்று நடுவர் குழு கருதுமானால், அவ்வாறே செய்ய வேண்டும். பிரிவினை செய்ய நீதிபதிக்கு அதிகாரம் கிடையாது. இல்லை, இருவரும் இனி இணைந்து வாழ வாய்ப்பில்லை என்று நடுவர் மன்றம் கருதினால், இருவரையும் தன் விஷேச அதிகாரத்தைக் கொண்டு நீதிபதி பிரித்து வைக்கலாம். இந்தப் பிரிவினை ‘பாயின்’ தலாக்காக கருதப்படும்.இப்படிக் கணவன் - மனைவித் தகராறுக்காகப் பிரித்து வைப்பது கூடும் என இமாம் மாலிக்ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் அஹமது ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியோர் கருதுகின்றனர்.ஆனால், இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் ஷாஃபீ ரஹ்மதுல்லாஹி அலைஹி இருவரும் சண்டை சச்சரவுக்காகவெல்லாம் பிரிவினை ஏற்படுத்த முடியாது என்று கூறுகின்றனர்.சுமூகமாக சேர்ந்து வாழாமல், தலாக் சொல்லி பிரிந்து கொள்ளவும் செய்யாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியை, ஒன்று சமாதானப்படுத்தி சுமூக வாழ்வை மேற்கொள்ள வழி காண வேண்டும். அல்லது பிரித்து வைத்துவிட வேண்டும். அவ்வாறு செய்வதினால் அவரவர் மனதுக்குப் பிடித்த வேறொருவருடன் புதுவாழ்க்கைத் துவங்க வழிபிறக்கும் என்பது முதலில் சொன்ன இரு இமாம்களின் கருத்தாகும்.
பிடிவாதத் தலாக்:
தலாக் வகைளிலும் சரி, பிரிவனைகளிலும் சரி – கணவன், மனைவி இருவருக்குமோ, இருவரில் ஒருவருக்கோ உள்ள உரிமை காக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம். இவையன்றி வேறு இரு நிலைகளிலும் தலாக் நிகழலாம். இது முழுக்க முழுக்க பிடிவாதத்தினாலும், குரோதத்தாலுமே நிகழ்கின்ற தலாக்காகும்.
1) மரணப்படுக்கையில் கிடக்கும் கணவன், இப்படியே தான் இறந்துவிட்டால் தன்னுடைய சொத்தில் தன் மனைவிக்குப் பங்கு கிடைத்துவிடும்: அவளுக்குப் பங்கு கிடைக்காமல் செய்ய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் மனைவியை தலாக் சொல்லி விடுகிறான். இது மார்க்கத்தில் வெறுக்கப்பட்ட தலாக் என்பது மட்டுமின்றி, மனிதாபிமானத்திற்கே எதிரானதாகும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தலாக் நிகழ்ந்துவிடின் சட்டம் என்ன என்பது தொடர்பாக இமாம்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது.இமாம் ஷாஃபீ ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்: மரணப்படுக்கையில் உள்ள கணவன் தன் மனைவியை ‘பாயின்’ தலாக் சொல்லி, மனைவியின் இத்தா முடிவதற்கு முன்பே இறந்துவிட்டால்,கணவனின் சொத்தில் மனைவிக்கு பங்கு கிடையாது. காரணம் ‘பாயின்’ (திரும்ப மீட்டிக்கொள்ளாத)தலாக்கானது, தாம்பத்திய உறவையே முறித்துவிடும். எனவே கணவன் இறக்கும்போது, அவனது மனைவியாக அவள் இல்லை. ஆதலால் அவள் வாரிசுரிமை பெறமுடியாது. வேண்டுமென்றே மனைவிக்கு பங்கில்லாமல் செய்த கணவன் குற்றவாளிதான். ஆனால், அந்த குற்றத்திற்கு தண்டனை அளிப்பது அல்லாஹ்வின் கையில். நாம் ஒன்றும் செய்ய முடியாது.
இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்: ‘மனைவி இத்தா இருக்கையில் கணவன் உயிர் பிரிந்தால், மனைவிக்கு அவன் சொத்தில் பங்குண்டு. இத்தா கழிந்தபிறகு கணவன் இறந்தால்,அவனுடைய சொத்தில் அவள் பங்குபெற முடியாது.’
இமாம் அஹமது பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்: ‘இத்தா முடிந்த பின்னர் கணவர் இறந்தாலும், அவனுடைய சொத்தில் மனைவிக்கு பங்கு கிடைக்கும். ஆனால், அவள் மறுமணம் செய்திருக்கக் கூடாது. அப்படி மறுமணம் செய்திருந்தால் கணவனின் சொத்தில் இவளுக்கு பங்கு கிடையாது.’
இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்: ‘இத்தா முடித்து மற்றொருவரை அவள் மறுமணம் முடித்துக் கொண்டாலும் முதல் கணவனின் சொத்தில் அப்பெண்ணுக்கு பங்குண்டு. இதன் மூலம் வாரிசுரிமையைத் தடுக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் தலாக் சொன்ன அந்த கணவனின் செயலுக்குத் தண்டனை கிடைக்கும். இந்த கெட்ட எண்ணத்தில் எவரும் தம் மனைவியைத் தலாக் சொல்வதைத் தடுக்க முடியும்.
2) தகுந்த காரணமின்றி மனைவியைத் தலாக் சொல்வது இரண்டாவது நிலையாகும். இச்சமயத்தில் மனைவி, வறியவளாக இருக்கலாம், வயதானவளாக இருக்கலாம், மறுமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லாதவளாக இருக்கலாம். இப்போது இவளுக்காக செலவு செய்வதற்குக் கணவன் இல்லாமல் அவள் அவதிப்படும் நிலை ஏற்படும். அப்படியானால், காரணமேயின்றித் தலாக் சொன்ன கணவன் பெரும்பாவி என்பதில் ஐயமே இல்லை. ஆனால், இவளது ஜீவனாம்சத்துக்கு வழி என்ன என்பதே இப்போது கேள்வி.பொதுவாக தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு சிலசமயம் கணவன் ‘முத்அத்’ அல்லது ‘மதாஉ’ (பராமரிப்புச்செலவு) கொடுக்க வேண்டும் என்பது சட்டம். இந்த பராமரிப்புச் செலவுக்கு ஒரு குறிப்பிட்ட வரையறை இல்லை. இடம், காலம், பெண்ணின் நிலை இவற்றைப் பொருத்து இது வித்தியாசப்படலாம். இதனால், நீதிபதியின் முடிவுக்கு விட்டு, அவருடைய மதிப்பீட்டின்பேரில் ஒரு நஷ்டஈட்டுத் தொகையை கணவனிடமிருந்து பெற்றுத்தரலாம் என்பது சிரியா போன்ற சில நாடுகளில் அமலில் இருந்து வரும் சட்டமாகும். அநியாயமாகத் தலாக் சொன்ன கணவனுக்கு இது ஒரு தண்டனையாக அமையும் என்பது அவர்களின் கூற்றாகும். இந்த நஷ்டஈட்டுத் தொகையும்கூட அந்த பெண்ணின் மரணம் வரை அல்லது அந்த பெண் மறுமணம் முடிக்கும்வரை வழங்க வேண்டும் என்பது டமாஸ்கஸைச் சேர்ந்த டாக்டர் ஷைகு முஸ்தஃபா ஸிபாஈ போன்ற அறிஞர்களின் கருத்தாகும்.
எனினும், இவ்வாறு முறையின்றி கணவனால் தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ‘இத்தா’ முடியும்வரை கணவனே ஜீவனாம்சம் தருவான். அதன்பிறகு அவள் மறுமணம் செய்து வாழலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றால், பெண்ணின் பெற்றோர் அல்லது சகோதரர்கள் அவளுக்குப் பொருப்பேற்றுக் கொள்வர். அதற்கும் முடியாதபோது பெண்ணே சொந்த உழைப்பினால் வாழலாம். ஒன்றும் முடியாதபோது இறுதியாக ‘பைத்துல்மாலில்" இருந்து அப்பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கப்படும் என நம் நாட்டு ஆலிம்கள் ‘ஷாபானு’ வழக்கில் தீர்ப்பு கூறினர்.
ஆனால், பைத்துல்மால் அமைப்பே இல்லை என்றாலோ அல்லது இருந்தும் முறையாகச் சௌயல்படவில்லை என்றாலோ அந்தப் பெண் மறுமணம் செய்து கொள்ளும் வரை அல்லது மரணிக்கும் வரை அவளுக்கப் பொறுப்பு யார்? நம் நாட்டைப் பொருத்தவரையில் பைத்துல்மால் அமைப்பு எல்லா இடங்களிலும் உண்டா? இருக்கும் இடங்களில் கைம்பெண்கள் சரிவர கவனிக்கப்படுகிறார்களா? சமுதாயம் சிந்திக்க வேண்டிய – விடை காண வேண்டிய விஷயம்.
நன்றி: 'ஜமா அத்துல் உலமா' மாத இதழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக