பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும் - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

8 செப்டம்பர், 2011

பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும்

ஃபாத்திமா நளீரா, வெல்லம்பிட்டி
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. இவையெல்லாம் நடைமுறை வாழ்க்கும் யதார்த்தத்துக்கும் மிகவும் ஏற்றவையே. தொட்டதெல்லாம் துலங்க வேண்டும் என்பதே நம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
ஆனால், வளமான, சுகமான வாழ்வென்பது பிறக்கும் போதோ அல்லது இடையிலோ எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நம் சமுதாய மட்டத்தில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை முறை வறுமைமிக்கதாகவும் அல்லது இடைத்தரப்பட்டதாகவும் மதில் மேல் பூனை போல் அமைந்துவிடுகிறது.
இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிப்போர் தமது பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட தெரிவு செய்யும் ஒரு விடயம் தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு. மத்தியதர வர்க்கத்தினரின் தெரிவும் அதுவாகவே உள்ளது. இலங்கையை பொறுத்தவரை இது சற்று அதிகம். காரணம் அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருவதில் மூன்றாவது இடத்தில் இதை அடக்குமளவிற்கு இதன் ஆதிக்கம் உள்ளது.
இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக கடமையாற்ற செல்வோரின் தொகை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச்செல்லும் இலங்கை வாழ் பெண்களின் நிலையோ மிகவும் கவலைக்குரியது.
தமது சம்பள விகிதங்கள் வேலை நேரங்கள் பற்றிய போதிய விளக்கங்களின்றி தமது குடும்ப சூழ்நிலையை மட்டும் கருத்திற்கொண்டு வெளிநாடு செல்லும் இவர்கள் அங்கு சொல்லொணா துயரங்களை அனுபவிக்கின்றனர்.
பல இன்னல்களுக்கு மத்தியில் அவர்கள் உயிர் பிழைத்து நாடு திரும் புவதே பெரிய விடயமாகிவிட்டது. கடந்த பல வருடங்களில் மட்டும் இலங்கையில் இருந்து வெளிநாடு சென்ற பெண்களில் பலர் தாம் கடமையாற்றிய வீடுகளில் இனந்தெரியாத முறையில் மரணத்தை தழுவியுள்ளனர். மேலும் அவர்களின் உடல்கள் கூட இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே சொந்தங்களுக்குக் கிடைத்திருக்கின்றன என்பது கூட நாம் ஊடகங்கள் மூலம் அறிந்த விடயம்.இப்படி எல்லாம் நடப்பது தெரிந்தும் பலரும் இந்த வெளிநாட்டு தொழில் வாய்ப்பையே மீண்டும் மீண்டும் நாடுவது ஏன்..?
குடும்பப் பொருளாதார சூழ்நிலை, வீட்டு வருமானம், கல்வி, தொழில் பிரச்சினை, திருமண வயதுப் பிரச்சினை, கடன் சுமை, வீட்டுத் தலைமையின் (கணவன் அல்லது தந்தை) பொறுப்பின்மை இப்படிப் பல பிரச்சினைகள் பெண்களை வீட்டுப்படி தாண்டி வெளிநாட்டுப் படியேற நிர்ப்பந்திக்கின்றன.
நல்ல பொருளாதார வசதியுடன் நிம்மதியான வாழ்வுக்காகவும் பின்தங்கிய கல்வித் தகைமையைக் கருத்திற் கொண்டும் இந்தப் பெண்கள் கையிலெடுக்கும் ஆயுதமே வெளிநாட்டு வேலைவாய்ப்பு. அதே நேரம் ஒரு சிலர் மற்றவர்களைப் பார்த்து இருப்பதனையும் விட்டுவிட்டுப் பறக்க நினைத்து ஆடம்பர வாழ்வுக்காக அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்த கதையாக மூக்குடைபட்ட சம்பவங்களும் உண்டு.
பலருக்கு வெளிநாடு என்றால் ஏதோ சுவர்க்கம் போல் ஒரு மாயை. ஆனால் போய் அனுபவிக்கும் போதுதான் இப்படி ஒரு நரகமா என்ற வேதனை மேலெழுகிறது. கால் வயிறு கஞ்சி குடித்தாலும் பேசாமல் நம் நாட்டிலேயே இருந்திருக்கலாம் என்ற நினைப்புக் கூட வரும். மூச்சுவிட்டாலும் சுதந்திரமாகச் சொந்த நாட்டில் விடுவது போல் வருமா?
இருந்தாலும் குடும்பத்தின் பொருளாதார சீர்கேட்டின் நிமித்தம் பெண்கள்வெளிநாடுகளுக்கு போய் உழைத்து நல்லபடியாகத் திரும்புவதற்கும் சீர்கெட்டு வருவதற்கும் வீட்டுத்தலைமை ஆண்கள் நிர்வாகமே பெரும்பாலும் காரணமாக அமைந்து விடுகிறது. அல்லது வீட்டை நிர்வகிக்க ஆண் துணை இல்லாமையும் காரணியாக அமையலாம். எவ்வாறாயினும் விரும்பியோ விருப்பம் இன்றியோ சந்"தர்ம்ப்பச் சூழ்நிலை காரணமாக மணமானவர்களும் இளம் யுவதிகளும் பலவிதமான நிர்ப்பந்தத்தினால் வெளிநாடு போகிறார்கள்.
சிலருக்கு நல்ல முகவர்களும் (ஏஜென்சி) சிலருக்குப் போலியான முகவர்களும் கிடைத்து விடுகின்றனர். இப்படிப்பட்ட தரம்கெட்ட முகவர்கள் அப்பாவிப் பெண்களை ஏமாற்றி பலி ஆடுகளாக்கி அவர்களின் முக வரிகளையே மாற்றியமைப்பதோடு முழுக் குடும்பத்துடனுமே விளையாடி விடுகிறார்கள்.பல இளம் பெண்களின் எதிர்காலமே சூனியமாக்கப்பட்டு விடுகிறது. நல்ல வேலைவாய்ப்பு, சம்பளம் என்று ஏமாற்றப்படும் பெண்களே அதிகம்.
வெளிநாடு சென்று அவர்கள் பணி புரியும் வீடுகளில் பெரும்பாலும் ஒழுங்கான சம்பளம் இன்மை, அடி உதை, பாலியல் துன்புறுத்தல்கள், தாய்நாட்டுடன் எவ்வித தொடர்புமற்ற நிலை, மனிதாபிதானத்தை மீறிய கடும்போக்கு, மொழிப் பிரச்சினை, இன்னும் பல அவலங்கள்.
என்ன கனவுகளுடன் வெளிநாடு போகிறார்களோ அவை பெரும்பாலும் நிறைவேறுவதில்லலை. நியாமாக உழைக்கப் போய் அநியாயத்துக்கு மாறுபவர்களும் உண்டு. ஒழுக்கத்துக்காகப் போராடியவர்களும் உண்டு ஒழுக்கத்தை விலை பேசியவர்களும் உள்ளனர்.
இன,மத, கலாசார விழுமியங்களை விழுங்கி பலவிதமான வாழ்க்கையை அமைப்பவர்களும் இல்லாம லில்லை. மணமானவர்கள் பிரிந்து வாழும் சந்தர்ப்பச் சூழ்நிலையில் சில வேளைகளில் தவறிழைக்கத் தூண்டுகிறது.
திருமணமான பெண்கள் கணவன், பிள்ளைகளைத் தற்காலிகமாகப் பிரிந்து சென்று பல கஷ்டத்துக்கு மத்தியில் சம்பாதித்து வீட்டையும் குடும்பத்தையும் முன்னேற்றினாலும் சில கணவன்மார்கள் பொறுப்பின்மையுடன் செயற்படுகின்றனர். பணம் பத்தும் செய்யுமென்ற விதத்துக்கு ஏற்ப வீண்விரயம், மதுபானப் பாவனை, போதை, கல்வியைச் சீர்கெட வைத்தல், பிள்ளைகளை அநாதைகள் போல் சீரழித்தல். இதனால் பிள்ளைகளின் வாழ்க்கை முறை நெறி தவறுதல். மற்றும் பணம் புரளும் போது சில கணவன்மார்கள் தவறான பெண் தொடர்பினை வைத்துக்கொள்ளல் என்று சமுதாய சீர் கேடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதேவேளை, சம்பாதித்தோம், தப்பித்தோம், பிழைத்தோம் என்று நல்வாழ்வுக்காக தம் தாய்நாடு திரும்பும் இந்த யுவதிகளின் சீதனப் பிரச்சினை ஓரளவு முடிவுக்கு வந்தாலும் அவர்களின் கற்பு ஒழுக்க நெறி குறித்து அநியாயமான கேள்விகளும் எழுப்பப்படுகிறன்றன. அப்படியே தியாக மனப்பான்மையுடன் வாழ்வளிக்க வரும் ஆண் சமூகம் பணம், பொருள் வீடு, இவற்றின் மேலேயே ஆசை வைத்து வாழ்க்கை கொடுக்கிறார்கள் (இவர்களுக்கு ஒழுங்கான தொழில் கூட இருக்காது) தாம் ஆசை வைத்த பணமும் சொத்தும் நாளடைவில் கரைந்த பின்னர் தமது மனைவிமார்களை மீண்டும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் கருத்தாக இருக்கும் ஆண்களையும் நாம் காணத்தான் செய்கிறோம்.
வெளிநாடு.. இவர்களின் பார்வையில் ஓர் அபிவிருத்திக்கான மூலதனம்.. முட்களில் புரண்டு விட்டு வந்தாலும் பஞ்சுமெத்தைகளில் புரண்டு வந்ததாகவே இந்தச் சமூகம் நினைத்துக் கொள்கிறது. உடல், உள ரீதியான மனநோய்கள் எரிந்து கொண்டிருந்தாலும் குடும்பத்துக்காக மெழுகாய் உருகி உழைக்கும் பெண்கள் வாழ்வில் என்றுதான் விமோசனம் கிடைக்குமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot