(சுப்ஹான மவ்லிதின் தமிழாக்கம்)
… காலங்காலமாக எமது சமூகம் நபிகளாரை நேசிக்கின்றோம், புகழ்கின்றோம் என்ற போர்வையில் இபாதத்தாகவும் நன்மைகளை எதிர்பார்த்தும் அரங்கேற்றி வரும் ஒரு நூதன அனுஷ்டானமே மவ்லிது பாடல்களாகும். ஐவேளை தொழாதவர்கள் கூட இந்த மவ்லிது பாடல்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது இது எந்தளவிற்கு மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது என்பதற்குச் சிறந்த உதாரணமாகும்.
இந்த மவ்லிது பாடல்கள் சுப்ஹான மவ்லிது, முஹிய்யிதீன் மவ்லிது, ஹஸன் ஹுஸைன் மவ்லிது, ஹிதாயதுல்லாஹ் மவ்லிது, யா குத்பா மவ்லிது, புர்தா பாடல்கள், பதர் ஸஹாபாக்கள் மவ்லிது, மீரான் ஸாஹிபு மவ்லிது என்றெல்லாம் ஒவ்வொரு மகான்களின் பெயரிலும் உலா வருவதை அவதானிக்கின்றோம். இவைகளில் பிரதான இடத்தைப் பெறுகின்ற மவ்லிதே நபிகளாரை நபி என்ற அந்தஸ்த்தைத் தாண்டி அல்லாஹ்-வுடைய அந்தஸ்த்தில் வைத்துப் பாடப்படுகின்ற சுப்ஹான மவ்லிது ஆகும்.
இந்த சுப்ஹான மவ்லிது என்று சொல்லப்படும் நூலானது வருடா வருடம் ரபிவுல்-அவ்வல், முஹர்ரம் மற்றும் சில முக்கிய தினங்களில் பள்ளிவாசல்களிலும், செல்வந்தர் வீடுகளில் பாரிய செலவீனங்களுக்கு மத்தியில் ஓதப்பட்டு வருபதனையும் அதனை ஓதுபவர்கள் முன்னிலையில் உணவுகள் படைக்கப்பட்டிருப்பதையும் ஓதி முடிந்தவுடன் உணவுகள் பறிமாறப்பட்டு, ஓதிய மவ்லவிமார்கள் காணிக்கையாகப் பணம் பெறுவதனையும் காலங்காலமாக நாமும் அவதானிக்கிறோம்.
இவர்கள் இவ்வளவு பக்தி பரவசத்தோடு ஓதும் இந்த நூலில் அப்படி என்னதான் சொல்லப்பட்டிருக்கின்றது அல்லது இவர்கள் நபிகளாரை என்னென்று தான் சொல்லிப் புகழ்கிறார்கள் என ஆராய முற்பட்ட வேளையே, இந்த சுப்ஹான மவ்லிது என்ற நூல் எந்தளவிற்குப் பொதுமக்களை அறியாமையில் வழிகெடுத்துக் கொண்டிருக்கும் இணைவைப்பின் தொகுப்பு நூலாகும் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதனை பக்தியோடு நபிகளாரைப் புகழ்கிறோம் என்ற பெயரில் பாடுகின்ற முதியவர்கள், சின்னஞ் சிறார்கள், ஏன் சில உலமாக்கள் கூட இதன் பொருள் விளங்காமலேயே இதுகால வரைக்கும் பாடிவருகின்றனர். இதுவே இவ்வழி கேட்டை மக்கள் உணராமலிருக்க முக்கிய காரணமாகும்.
எனவேதான் இந்த சுப்ஹான மவ்லிது என்ற நூல் எந்த இந்தளவிற்கு நபிகளாரின் பெயரால் கட்டுக்கதைகளையும் பொய் பித்தலாட்டங்களையும், நபிகளாரை அல்லாஹ்-வாக சித்தரிக்கும், இணைவைப்பான வார்த்தைகளையும் கொண்டுள்ள இணைவைப்பு நூல் என்பதனை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு மக்கள் மன்றத்தில் கொண்டுவர வேண்டியது என் போன்ற ஒவ்வொரு ஈமானிய உள்ளங்களினதும் பாரிய பொறுப்பாகும் என உணர்கிறேன்.
அதனடிப்படையிலே தான் ”நரகத்திற்கு அழைத்துச்செல்லும் சுப்ஹான மவ்லிது” என்ற எனது இந் நூலில் இவர்கள் எழுதி வைத்திருக்கும் சுப்ஹான மவ்லிது புத்தகத்திலுள்ள கட்டுக் கதைகளையும், எமது ஈமானை பறித்தெடுக்கும் இணைவைப்பு பாடல் வரிகளையும் வரிக்கு வரி மொழிபெயர்த்து வழங்குகின்றேன். இந்நூலில் சுப்ஹான மவ்லிதில் இடம் பெரும் சில முக்கிய இணைவைப்புகளே அடையாளப் படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே, இறுதிவரைக்கும் இந்நூலை முழுமையாகப் படித்து, அறியாமையில் நாம் செய்து கொண்டிருக்கும் எம்மை நிரந்தர நரகில் தள்ளிவிடும் இந்த வழிகேட்டை விட்டும் எம்மையும் எமது குடும்பத்தையும் அல்லாஹ்வின் உதவியோடு பாதுகாப்போம்.
வல்ல இறைவன் அதற்கு எமக்கு அருள்புரிவானாக.
JM சாபித் ஷரயி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக