கேள்வி
? திருமண நிகழ்ச்சிகளில் ஷிர்க், பித்அத் இல்லாமல், மாலை போன்றவற்றைக் கூட மாற்று மதக் கலாச்சாரம் என்று தவிர்க்கும் நாம் வீடியோ, போட்டோ போன்ற வீண் விரயங்களைச் செய்யலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கூட அழைக்காமல் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் போன்ற நபித்தோழர்கள் திருமணம் முடித்துள்ள போது, நம் திருமண நிகழ்ச்சிகளில் குத்பா நிகழ்த்துவது சரியா? திருமணத்தில் குத்பா நிகழ்த்துவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதேனும் உள்ளதா? விளக்கவும்.
பின்த் காஸிம், சென்னை.
பதில்
திருமணங்களில் வீடியோ, போட்டோ போன்ற காரியங்களைச் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதை
வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்கள்
என்ற கட்டுரையில் இது பற்றி விரிவாக விளக்கியுள்ளோம்.
திருமணத்தை வீடியோ எடுக்கவில்லை: சொற்பொழிவுகளை மட்டும் வீடியோ எடுக்கிறோம் என்று சிலர் கூறினாலும் உண்மையில் அவர்களும் திருமண நிகழ்ச்சிகளை எடுப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றார்கள்.
செலவு இல்லாமல் ஆற்றப்படும் உரையை மட்டும் நமது ஸ்மார்ட் போன் மூலம் எடுத்து அவ்வுரையைப் பரப்புவது இதில் சேராது.
எளிமையான திருமணத்தில் தான் பரக்கத் இருக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது இந்த வீடியோ கலாச்சாரத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட தெரியாமல் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் திருமணம் நடத்தியிருப்பதால் திருமண உரை நிகழ்த்துவது சரியா என்று கேட்டுள்ளீர்கள்.
குத்பா என்று சில வாசகங்களைக் குறிப்பிட்டு, இவற்றைக் கூறினால் தான் திருமணம் நிறைவேறும் என்று மக்கள் விளங்கி வைத்துள்ளனர்.
ஆனால் திருமணத்திற்கும், பிரசங்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. பிரசங்கம் எதுவும் நிகழ்த்தாவிட்டாலும் திருமணம் நிறைவேறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஆனால் அதே சமயம் திருமணத்தில் உரை நிகழ்த்தப்படுவதை மார்க்கத்திற்கு முரணான செயலாகச் சித்தரிப்பது தவறு.
பொதுவாக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் செய்தியை அடிப்படையாக வைத்து, திருமணத்திற்கு யாரையும் அழைக்கக் கூடாது; யாருக்கும் தெரியாமல் திருமணம் நடத்த வேண்டும் என்ற கருத்து ஏகத்துவவாதிகளிடம் பரவலாக உள்ளது.
مسند أحمد بن حنبل
16175 – حدثنا عبد الله حدثني أبي ثنا هارون بن معروف قال عبد الله وسمعته أنا من هارون قال حدثنا عبد الله بن وهب قال حدثني عبد الله بن الأسود القرشي عن عامر بن عبد الله بن الزبير عن أبيه ان النبي صلى الله عليه و سلم قال : أعلنوا النكاح
تعليق شعيب الأرنؤوط : حسن لغيره وهذا إسناده فيه عبد الله بن الأسود القرشي من رجال " التعجيل " انفرد بالرواية عنه عبد الله بن وهب وبقية رجاله ثقات رجال الشخيين غير عبد الله بن أحمد فمن رجال النسائي وهو ثقة
திருமணத்தை நீங்கள் அறிவியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)
நூல்: அஹ்மத் 15545
இந்த ஹதீஸில் திருமணத்தை அறிவியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதே பலருக்கும் தெரியும் வகையில் திருமணம் நடத்தப் படவேண்டும் என்பதையே காட்டுகின்றது.
தற்போதுள்ள நடைமுறையில் இருப்பது போல் பலரையும் அழைத்து திருமணம் நடத்துவது மார்க்க அடிப்படையில் சரியான செயல் தான் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறிய முடியும். இவ்வாறு செய்வதால் அதை செலவு குறைந்த திருமணம் இல்லை என்று யாரும் கூறி விடமுடியாது.
மேள தாளங்கள், மேடை அலங்காரங்கள், ஆடியோ, வீடியோ கலாச்சாரம் போன்ற அனாச்சாரங்களைக் கூடாது என்று கூறலாம். ஆனால் யாரையுமே அழைக்கக் கூடாது என்று கூறுவது மார்க்க அடிப்படையில் ஏற்புடையதல்ல!
திருமண உரை என்று தனியாக எதுவும் இல்லை. பொதுவாக எந்த இடத்திலும் பிரசங்கம், சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஏகத்துவப் பிரச்சாரம் செய்வதற்காக பொதுக்கூட்டம் போடுகின்றோம். இதைத் தவறு என்று யாரும் வாதிடுவது கிடையாது. அது போல் திருமணத்தின் போதும் ஒருவர் மார்க்கத்தைப் போதித்தால், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தால் அது கூடாது என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
இந்த இடத்தில் இந்தக் கருத்தைக் கூறினால் அது மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று ஒருவர் நினைத்தால் அதை திருமண சபை மட்டுமல்ல, எந்த சபையிலும் சொல்லலாம்.
உதாரணமாக ஜனாஸா தொழுகையை நடத்துவதற்காக ஒருவர் முன்னே நிற்கின்றார். அந்தத் தொழுகையில் கலந்து கொள்பவர்கள் ஹதீஸ் அடிப்படையில் அந்தத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, ஜனாஸா தொழுகையின் சட்டதிட்டங்களைப் பற்றி ஒரு சிறிய உரை நிகழ்த்துகின்றார். இதற்கு ஜனாஸா உரை என்று பெயரிட்டு, இது கூடுமா என்று கேட்க மாட்டோம்.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வார்கள். அந்தச் சமயத்தில் நிகழ்த்துகின்ற சொற்பொழிவு நிச்சயமாக ஒரு பயனைத் தரும் என்று ஒருவர் கருதினால் அவர் அங்கு பிரச்சாரம் செய்யலாம்.
سنن الترمذي
1105 – حدثنا قتيبة حدثنا عبثر بن القاسم عن الأعمش عن أبي إسحق عن أبي الأحوص عن عبد الله قال : علمنا رسول الله صلى الله عليه و سلم التشهد في الصلاة والتشهد في الحاجة قال التشهد في الصلاة التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله والتشهد في الحاجة إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا فمن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ويقرأ ثلاث آيات قال عبثر ففسره لنا سفيان الثوري اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واتقوا الله الذي تساءلون به والأرحام إنه الله كان عليكم رقيبا اتقوا الله وقولوا قولا سديدا قال وفي الباب عن عدي بن حاتم
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையின் போதும், தேவை ஏற்படும் போதும் ஓத வேண்டிய தஷஹ்ஹுதைக் கற்றுத் தந்தார்கள். தொழுகையில் உள்ள தஷஹ்ஹுத் அத்தஹிய்யாத் (என்று துவங்கும் துஆ) ஆகும். தேவை ஏற்படும் போது சொல்லும் தஷஹ்ஹுத் கீழ்க்கண்ட தஷஹ்ஹுத் ஆகும். நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனிடமே நாம் உதவி தேடுகின்றோம். அவனிடமே நாம் பாவமன்னிப்பு தேடுகிறோம். நம்முடைய உள்ளங்களின் தீங்குகளை விட்டும் நமது கெட்ட செயல்பாடுகளை விட்டும் அவனிடமே நாம் பாதுகாவல் தேடுகின்றோம். அல்லாஹ் நேர்வழி காட்டியவரை கெடுப்பவன் இல்லை. அல்லாஹ் வழிகெடுத்தவனுக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று ஒப்புக் கொள்கிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று ஒப்புக் கொள்கிறேன். அல்லாஹ்வை அஞ்சக் கூடிய விதத்தில் அஞ்சிக் கொள்ளுங்கள். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்காதீர்கள். எந்த இறைவனை முன்னிறுத்தி நீங்கள் கேட்கிறீர்களோ அந்த இறைவனை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி)
நூல்: திர்மிதீ 1023
இந்த அறிவிப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேவை ஏற்படும் போது இறையச்சத்தைப் பற்றி மக்களுக்குப் போதிக்குமாறு கற்றுத் தந்துள்ளதால் எங்கு தேவை ஏற்பட்டாலும் நாம் பிரச்சாரம் செய்வது நமது கடமையாகும். அது திருமண சபையாக இருந்தாலும், வேறு எந்த சபையாக இருந்தாலும் சரி.
ஆனால் திருமணத்தின் போது உரை நிகழ்த்துவதை திருமணம் நிறைவேறுவதற்கான விதிமுறைகளில் ஒன்றாகக் கருதும் நிலை உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. குத்பா ஓதினால் தான் திருமணம் நிறைவேறும் என்று மக்கள் கருதும் நிலை இருப்பதால் அதைத் தவறு என்று நிரூபிப்பதற்காக குத்பா இல்லாமலும் திருமணங்களை நடத்திக் காட்ட வேண்டும்.
பிரசங்கம் செய்வதே தவறு என்று கூறவும் கூடாது. அதேபோல் திருமணத்தில் பிரசங்கம் செய்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தவும் கூடாது. திருமணத்திற்கு குத்பா அவசியமில்லை என்பதை மக்களுக்கு விளங்க வைப்பதற்காக குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் அவ்வப்போது குத்பா இல்லாத திருமணங்களையும் நடத்த வேண்டும். LINK.https://onlinepj.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக