போகியத்திற்கு (லீஸ்) வீடு பிடிக்கலாமா? - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

20 அக்டோபர், 2013

போகியத்திற்கு (லீஸ்) வீடு பிடிக்கலாமா?

யம்: அஸ்ஸலாமு அலைக்கும்தற்போது நான் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். வேறு வீடு மாற்றுவதற்காக வீடு பார்த்த போது வீட்டு உரிமையாளர், "வீட்டிற்கு ரூபாய் இரண்டு லட்சம் பணம் வேண்டும்; கட்டிட வேலை முடிப்பதற்காக நீங்கள் வாடகை தரவேண்டாம்; இரண்டு வருடத்தில் தங்களுடைய பணத்தை கொடுத்து விடுகிறேன்!" என்று கூறுகிறார்.
மேற்கண்ட பணத்தை கொடுத்துவிட்டு வீடு வாடகை இல்லாமல் இருந்து கொள்ளலாமா? சிலர் குறைந்த வாடகை தரவேண்டும் என்று கூறுகிறார்கள். எனக்கு தங்கள் விளக்கம் தர அன்புடன் கோருகின்றேன். - சகோதரர் முஸ்தஃபா.

தெளிவு: வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

நீங்கள் கூறும் மேற்படி நிபந்தனையை ஒத்தி அல்லது குத்தகை என்று சொல்வார்கள். இரண்டும் ஒன்றுதான். வீடு, கடை, நிலம், வயல், தோட்டம்-துரவு என ஒப்பந்த அடிப்படையில் இவற்றை வாடகைக்கு விடலாம்.
 
உமர் இப்னு கத்தாப் (ரலி) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் ஹிஜாஸ் மாநிலத்திலிருந்து நாடு கடத்திவிட்டார்கள். இறைத்தூதர் கைபர் பிரதேசத்தை வெற்றி கொண்டபோது (அங்கிருந்த) யூதர்களை நாடு கடத்திட விரும்பினார்கள். (ஏனெனில்,) அந்தப் பிரதேசத்தை வெற்றி கொண்டபோது அந்தப் பகுதியிலிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகி விட்டிருந்தது. (அந்த நிலையில்) யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம், 'நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலில் 'பாதியைப் பெற்றுக் கொள்கிறோம். (மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்தி விடுகிறோம்)" என்று கேட்டுக் கொண்டார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒப்புக் கொண்ட இந்த நிபந்தனையின் (நிலக் குத்தகை ஒப்பந்தத்தின்) அடிப்படையில் நாம் விரும்பும் வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம்" என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி), தம் ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை தைமா, அரீஹா, (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும் வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயிரிட்டு வரி செலுத்தி) வசித்து வந்தார்கள்.(அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி 2338, முஸ்லிம் 3158)
 
வீடு வாடகைக்கு விடும்போது, வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு வருபவரிடம் முன்பணம் (Advance) பெறுவதுண்டு. இது வாடகைப் பணத்தை முன்னரேப் பெறுவதாக இருக்கலாம். அல்லது குடியிருக்க வருபவர் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீடு பாதுகாப்புத் தொகை (Security deposit) ஆகவும் இருக்கலாம். எனினும் வீட்டைக் காலி செய்யும்போது வீட்டின் உரிமையாளர் வாடகையாளருக்கு இந்த முன்பணத்தைத் திரும்பத் தந்துவிடுவார்.
 
வீட்டின் உரிமையாளரிடம் முன்பணம் இருந்தாலும் வாடகைதாரர் ஒவ்வொரு மாதமும் வாடகைப் பணத்தைக் கொடுத்திட வேண்டும். நடப்பில் வாடகை ஒப்பந்தம் இந்த அடிப்படையில் உள்ளன என்பதை அனைவரும் அறிந்தது. இதில் கடன் ஏற்படாது.

கேள்வியில் உள்ள "ஒத்திக்கு முடித்தல்" சூழ்நிலையில் வீட்டின் உரிமையாளருக்குத் தேவைப்படும் பெரும் தொகையைக் கொடுத்து அதைத் திரும்பத் தரும்வரை வாடகை தரமாட்டேன் என ஒப்பந்தம் செய்து வீட்டில் குடியேறி இலவசமாக அனுபவித்துக் கொள்வது இஸ்லாம் பொருந்திக் கொள்ளாத ஒப்பந்தமாகும்! இது கடன் கொடுப்பதாகும்.

ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்து, வாடகையைக் கொடுக்காமல் மூன்று வருடங்கள் ஒருவர் குடியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்: மாதம் 2,000 ரூபாய் வாடகை என்றாலும் மூன்று வருடங்களுக்கு 72,000 ஆயிரம் ரூபாய் வருமானத்தை வீட்டின் உரிமையாளர் இழக்கின்றார். ஒரு லட்சம் ரூபாயை வேறெங்காவது முதலீடு செய்து அதன் மூலம் வீட்டின் உரிமையாளர் லாபம் அடைவார் என்று சொன்னாலும் அந்த லாபம் அவர் ஓடி உழைப்பதற்கான கூலியாகும். நஷ்டமடைந்தாலும் அது அவரைச் சார்ந்ததாகும்.
 
மூன்று வருடங்களில் ஒரு லட்சம் ரூபாயைத் திரும்பப் பெறும் நிலையில், மூன்று வருடங்களுக்கு வாடகைக் கொடுக்காமல் குடியிருப்பவர் எவ்வித உழைப்புமின்றி 72,000 ஆயிரம் ரூபாய் லாபம் பெறுகின்றார் இதன் சுயரூபம் வட்டி!
அதே ஒரு லட்சம் ரூபாயை உறங்குநிலை கூட்டாளி (Sleeping partner) ஆக ஒரு தொழிலில் முதலீடு செய்தாலும், தொழிலில் ஏற்படும் லாப - நஷ்டங்கள் இரண்டிற்கும் பொறுப்பேற்கிறார் என்பதைக் கவனித்தால், பிறரின் மீது நஷ்டத்தைப் போட்டு விட்டு லாபத்தை மட்டுமே பெற வைக்கும் வட்டி நிலை வெளிப்படும்.
ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் மாதம் வட்டியைப் பணமாகப் பெறாமல் வாடகையாகப் பெற்றுக் கொள்கிறார். வாடகைப் பணம் 72,000 ஆயிரம் ரூபாயை மிச்சப்படுத்தி லாபடைந்தாலும் துவக்கத்தில் கொடுத்த அந்த ஒரு லட்சம் ரூபாய் குறையாமல் இருக்கிறதே என்பதைச் சிந்தித்தாலும் இது தெளிவான வட்டியாகும் என்பதை விளங்கலாம்.

சிலர் குறைந்த வாடகை தரவேண்டும் என்று கூறுகிறார்கள்:
 
வட்டியின் தன்மையை அறிந்தவர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார். கடன் கொடுத்தவருக்கு கடன் பட்டவர் அன்பளிப்பாக எதையும் வழங்குதல் கூடாது. கடன் கொடுத்தவரும் கடன் பட்டவரும் ஒருவருக்கொருவர் இதற்கு முன்னர் அன்பளிப்புகள் வழங்கிக் கொண்டிருந்தாலே தவிர.
 
போகின்ற வழியாக இருந்தாலும் ''என்னை இந்த இடத்தில் இறக்கிவிடு'' என்று கடன் பட்டவரிடம் கடன் கொடுத்தவர் வாகனத்தில் இடம் (Lift) கேட்டால் அது வட்டியாகும். இதற்கு முன்னர் அவர்களிடையே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிகள் செய்திருந்தாலே தவிர, என்று கடன் பட்டவரிடம் கடன் கொடுத்தவர் எவ்வித சலுகைகளையும் பெறக்கூடாது. இவ்வாறு சலுகையை எதிர்பார்ப்பது வட்டி என்றே நபிமொழிகள் உரைக்கின்றன.

இதன் அடிப்படையில், 2000 ரூபாய் மாத வாடகைக்கு விடப்படும் வீட்டை ஒரு லட்ச ரூபாய் கடன் தந்திருக்கிறார் என்பதற்காக 500 ரூபாய் என மாத வாடகையைக் குறைத்துக் கொண்டால் எஞ்சியுள்ள 1500  ரூபாயும் இஸ்லாத்தின் பார்வையில் வட்டியாகும்.

பணமதிப்பில் வீழ்ச்சி எழுச்சி ஏற்படுகின்றதே என்கிற வாதம் சரியா?

இன்று பணமதிப்பில் ஏற்றத் தாழ்வு (Rupee fluctuation) நிகழ்கிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடன் கொடுத்த அதேத் தொகையை மட்டும் பெறும்போது கடன் கொடுத்தவர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறாரே? என்கிற வாதமும் எழுகிறது. இது தொடர்பாக முந்தைய கேள்வி - பதிலை இங்கு தருவது பொருத்தமெனக் கருதுகிறோம்.
கேள்வி:   அஸ்ஸலாமு அலைக்கும்....

பிற மதச் சகோதரர் ஒருவர் இந்த கேள்வியை கேட்டுள்ளார். இதற்கான உங்கள் பதிலை தருமாறு கேட்டு கொள்கிறேன். இன்று என் கையில் ஆயிரம் ரூபாய் இருக்கிறது. அதை ஒருவருக்கு வட்டியில்லா கடனாகக் கொடுக்கிறேன். அவர் இந்தப் பணத்தை ஒரு பத்து வருடங்களுக்குப் பிறகுதான் திருப்பிக் கொடுக்கப் போகிறார்என்று வைத்துக் கொள்வோம். இந்த ஆயிரம் ரூபாய்க்கான இன்றைய மதிப்பு அப்படியே மாறாமல் பத்து வருடங்களுக்குப் பிறகும் இருக்கப் போவதில்லை. விலைவாசி கூடிக் கொண்டே இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு ஆயிரம் ரூபாயை கொண்டு நாம் வாங்கியிருக்கக் கூடிய பொருளை இப்போது நம்மால் வாங்க இயலாது. அதுபோலவே இப்போது வாங்கக் கூடிய பொருளை பத்து வருடங்களுக்குப் பிறகு வாங்க இயலாது.

ஆக, வட்டியில்லாக் கடன் கொடுக்கப்படும்போது (அது உதவியாக இருந்தாலும் கூட) கொடுத்தவர் பாதிக்கப்படுகிறார். அவரது உழைப்புக்கான சரியான மதிப்பு இல்லாமல் போகிறது. (அந்தப் பணம் உழைப்பில்தானே வந்திருக்கும்). கடன் வாங்கியவர் வட்டியில்லாமல் கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது, ஒருவரை ஏமாற்றிய பாவத்தை ஏற்கிறாரே? பணம் கொடுத்தவரின் பணத்தை திருடியவரைப் போலாகிறாரே? 

(துபையிலிருந்து ஜமால்)

பதில்:

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

இன்று கையிருப்பாக உள்ள ஆயிரம் ரூபாயின் மதிப்பில் நாளை ஏற்றத் தாழ்வு ஏற்படலாம். அதுபோல் விலைவாசி ஏற்றமும் வீழ்ச்சியும் நாளைய தினத்தில் என்னவாகுமோ என்கிற எதிபார்ப்பில் நாம் இன்று உள்ளது போல் நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் விலைவாசி ஏற்றம், நாணய மதிப்பின் ஏற்றத் தாழ்வு நிகழ்ந்து கொண்டிருக்க இதே சூழ் நிலையில் வஹீ அருளப்பட்டுக் கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் அருளப்பட்ட வசனம்:

அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும் வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டு விடுவீர்களானால் - (அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும். (அல்குர்ஆன் 002:280)

கடன் வாங்கியவர் கஷ்டத்தில் இருந்தால் அவருக்கு வசதி வரும்வரை அவகாசம் கொடுங்கள் என்பது அல்லாஹ்வின் அறிவுரையாகும். அவகாசம் என்பதில் கால அளவு குறிப்பிட்டுச் சொல்லாததால் இங்கு கால அளவுக்கு எல்லையைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்!

விலைவாசி ஏற்றம், பண மதிப்பின் வீழ்ச்சி, என்பதெல்லாம் எதிர்காலத்தில் ஏற்படும் என்பதை நன்கு அறிந்த இறைவன், கடன் கொடுத்தோருக்கு அவகாசம் கொடுங்கள் என்றும் கூறுகின்றான். பத்து ஆண்டுகள் கழித்து கடனைத் திருப்பிச் செலுத்தினால் கடன் கொடுத்தவர் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுகிறார் என்று கூறுவது சரியல்ல.
மேலும், கடன் வாங்குபவரிடம், கொடுப்பவர் - இத்தனைத் தவணைகளில் - இத்தனை மாதங்களில் கடன் திருப்பி அடைக்கப்படும் என்ற உறுதிமொழிகள் முன்னமே ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில் கடன் தொகை கை மாறும் போது, கொடுத்தவரின் பாதிப்பு பற்றி பேசுவதும் முறையல்ல...

கடன் வாங்கியவர் பத்து ஆண்டுகள் கழித்து வட்டியில்லாமல் கடனைத் திரும்பச் செலுத்தும்போது, கடன் கொடுத்தவரை ஏமாற்றுகிறார் அல்லது கடன் கொடுத்தவரிடமிருந்து திருடிக் கொள்கிறார் என்கிற கருத்தை அல்லாஹ்வோ இறைத் தூதரோ சொல்லாமல் நாமாக முடிவு செய்ய இயலாது.

யூதர்கள் ''வியாபாரம் வட்டியைப் போன்றதே'' (அல்குர்ஆன் 002:275) என்று கூறியதைப் போன்றே இன்றும் வட்டியை வியாபாரத்துடன் ஒப்பிட்டு நியாயப்படுத்துவோரும் உள்ளனர். அப்படி வியாபாரத்துடன் இணைத்து வட்டியை நியாயப்படுத்தும் கேள்வியைத் தான் பிற மத சகோதரர் கேட்டிருக்கிறார். விலைவாசி ஏற்றம் பணமதிப்பின் வீழ்ச்சி என்பதையெல்லாம் காரணியாக்கி வட்டியை நியாயப்படுத்துவது மார்க்கத்திற்கு முரணாகும்.

கடன் கொடுப்பவர், கடன் தொகை ஆயிரம் ரூபாயை நாளைய விலைவாசி ஏற்றத்துடன் ஒப்பிட்டு கடனுதவியை வியாபாரமாக்கி கொச்சைப் படுத்துவதைவிட கடன் கொடுக்காமல் இருந்து விடலாம். ஏனெனில், கடன் தொகையைத் திரும்பப் பெறும்போது விலைவாசியைக் கணக்கிட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றோ அல்லது பண மதிப்பின் ஏற்றத்தாழ்வைக் கணக்கிட்டு கடனைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றோ இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை!
(இறைவன் மிக்க அறிந்தவன்)        நன்றிசத்தியமார்க்கம்.காம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot