இஸ்லாத்தின் அடிப்படை “லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்” எனும் ஷஹாதத் கலிமாதான். இதுதான் இஸ்லாத்தின் அத்திவாரம். இதன் மீதுதான் இஸ்லாத்தின் கொள்கை-கோட்பாடுகள், வணக்க-வழிபாடுகள், ஷரீஆ சட்டங்கள் என்பன கட்டியெழுப்பப்பட்டுள்ளன.
நாம் “நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர்” எனச் சாட்சி சொல்வது என்பது வெறும் வெற்று வார்த்தைகளால் மாத்திரம் உறுதியாகி விடாது.
அல்லாஹ்வின் தூதரை உண்மையில் நேசிக்காது அவரை “இறைத் தூதர்” என்று முறையாக நம்பாது நீங்கள் “அல்லாஹ்வின் தூதர் என நாம் சாட்சி கூறுகின்றோம்” என அவர்கள் கூறிய சாட்சியத்தை அல்லாஹுதஆலா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது. எனவே நாம், கூறும் சாட்சியம் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்றால் அந்தச் சாட்சியத்தில் முக்கிய சில பண்புகள் அடங்கியிருக்க வேண்டும்.
இஸ்லாத்தின் அத்திவாரத்தின் ஒரு பகுதியான “முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என நான் சாட்சி கூறுகின்றேன் என்ற” சாட்சி உண்மையாக வேண்டுமென்றால் நம்மிடம் பின்வரும் பண்புகள் வெளிப்பட்டேயாக வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களை உண்மைப்படுத்துவது அவசியம். எல்லா முஸ்லிம்களும் அவர் “அல்லாஹ்வின் தூதர்” என உண்மைப்படுத்துகின்றனர். ஆனால், நபியை உண்மைப்படுத்துவது என்பது அவர் அறிவித்த அனைத்தையும் உண்மைப்படுத்துவதைக் குறிக்கும். “நான் நபியை ஏற்றுக்கொள்கின்றேன்” அவர் கூறிய இன்னின்ன செய்திகள் பகுத்தறிவுக்கும், விஞ்ஞானத்திற்கும், நடைமுறைக்கும் பொருத்தமில்லாதவை. அதற்கு என்னால் உடன்பட முடியாது” என்ற தோரணையில் பேசுவது நபியை உண்மைப்படுத்துவதாகாது. அடுத்து, நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வஹியை மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் எத்திவைப்பதற்காக அனுப்பப்பட்ட இறுதித் தூதர் என நம்புவதும் நபியை உண்மைப்படுத்துதல் என்பதில் அடங்கும்.
- நபி(ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவதும், அவர்களது தீர்ப்பை எத்தகைய அதிருப்தியும் இல்லாது முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதும் அவசியமாகும். நபி(ஸல்) அவர்களது ஸுன்னாவைப் பின்பற்றுவதும், அதற்கு மாற்றமானதை விட்டு விடுவதும் ஷஹாதாக் கலிமாவில் அடங்கக் கூடியதாகும்.
- அடுத்து, நபி(ஸல்) அவர்களை நேசிக்க வேண்டும். இது சாதாரண நேசம் அல்ல. தனது பெற்றோர், பிள்ளைகள், மற்றோர் ஏன்! தனது உயிரை விட அதிகமாக நபியை நேசிக்க வேண்டும். இந்த நேசம் என்பது வாய் வார்த்தையில் மட்டுமல்லாது நடைமுறையிலும் இருக்க வேண்டும். நபி(ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும், அவர்களுக்கு உதவி செய்வதும், அவர்கள் மூலம் கூறப்பட்ட செய்திகளை நடைமுறைப்படுத்துவதும், நபி(ஸல்) அவர்களுக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதும் இந்த நபி மீதான நேசத்தின் சான்றுகளாக இருக்கும்.
எமது குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் போது “முஹம்மத்” எனப் பெயர் வைத்து விட்டால் நாம் நபியை நேசிப்பதாய் விடாது. அல்லது அவர்களது பிறந்த தினத்திற்கு விழா எடுத்தால் அது நபி மீது நேசம் கொண்டதற்குச் சாட்சியாகவும் அமைந்து விடாது.
மேலே நாம் கூறியது போன்று நமது ஷஹாதத் கலிமா ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக நாம் ஆற்ற வேண்டிய பணிகள் சிலவற்றைச் சுருக்கமாக நோக்குவோம்.
- நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதற்கான சான்றுகளை உங்கள் சிந்தனையில் பதியச் செய்யுங்கள்! இந்தச் சிந்தனையின் அடிப்படை குர்ஆன்தான். எனவே, நபி(ஸல்) அவர்களது தூதுத்துவம் பற்றிக் கூறும் குர்ஆன் வசனங்களை சிந்தித்துப் பாருங்கள்!
- நபி(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதைக் கூறக் கூடிய குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் கற்றுக்கொள்ளுங்கள்!
- இந்த உம்மத்தில் உள்ள அறிஞர்களின் தியாகத்தின் மூலமும், நுணுக்கமான ஆய்வின் மூலமும் நபி(ஸல்) அவர்களது ஸுன்னாவை அல்லாஹ் பாதுகாத்துள்ளான். ஏனைய எந்த சமூகம் கவனம் செலுத்தாத அளவுக்கு இந்த உம்மத் நபியின் ஸுன்னாவைப் பாதுகாப்பதற்கும், அதில் நுழைந்த கலப்படங்களைக் களைவதற்கும் செய்த தியாகங்களை அறிந்துகொள்ளுங்கள்!
(அப்போதுதான் ஸுன்னாவின் பெறுமதியையும், போலிச் செய்திகளைப் புறக்கணிக்க வேண்டியதன் அவசியத்தையும் உங்களால் உணர முடியும்.)
- நபி(ஸல்) அவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்கள் என்பதை நேரடியாகக் காட்டுங்கள்! உள்ளத்தளவில் அவரது உயர்ந்த பண்புகளை நினைவுக் கூறுங்கள்! நீங்கள் ஒரு நடிகனையோ, விளையாட்டு வீரனையோ, அரசியல் தலைவனையோ விரும்பினால் அவனது பெயர், பிறந்த இடம், வரலாறு, செய்த சாதனைகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றீர்கள். நபியை நேசிக்கும் நாம், நபி(ஸல்) அவர்களது பரிபூரணமான பண்புகள், நடைமுறைகள், வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்வதில் ஆர்வமற்றிருக்கலா? எனவே, நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பேசும் “ஷமாயிலுத் திர்மிதி” (தமிழில்: நபிகள் நாயகம் – நேர்முக வர்ணனை) போன்ற புத்தகங்களைப் படித்து அறிந்துகொள்ள வேண்டும்.
- அவரது மகத்துவத்தையும், சிறப்பையும் அறிந்திருக்க வேண்டும். “நபி(ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பணியை கொஞ்சம் கூடக் குறைவின்றிப் பரிபூரணமாக நிறைவேற்றினார்கள்” என நம்ப வேண்டும். எங்கள் அனைவரை விடவும் அவர் சிறந்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். (இந்த நம்பிக்கை உறுதியாக இருந்தால்தான் நபிமொழிக்கு மாற்றமாக யார் பேசினாலும் நம்மால் அதைப் புறக்கணிக்க முடியும். இல்லையென்றால் “இவர் பெரிய அறிஞர்”, “சேவை செய்தவர்” என்றெல்லாம் காரணம் கூறி நபிமொழியை விடத் தனி நபரின் கூற்றுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விடுவோம்.)
- நபி(ஸல்) அவர்கள்தான் எமது வழிகாட்டிளூ நபிவழியே நம் வழி. அல்லாஹ்வின் அன்பைப் பெற அவரது வழிகாட்டல் ஒன்றின் மூலம் மட்டுமே முடியும் என்பதை உறுதிப்படுத்துவதாக எமது வாழ்க்கை அமைய வேண்டும்.
- நபி(ஸல்) அவர்கள் இந்த உம்மத்தின் மீது பேரன்பும், கிருபையும் கொண்டவர்கள் என்பதை நம்ப வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களது கண்ணியத்தையும், அவர்களுக்கு அல்லாஹ்விடம் இருக்கும் உயர்ந்த ஸ்தானத்தையும் அல்லாஹ் அவர்களைக் கண்ணியப்படுத்தியுள்ள விதத்தையும் விளக்கும் குர்ஆனிய வசனங்களையும், ஹதீஸ்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களை நேசிக்குமாறு நாம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களைக் கண்ணியப் படுத்துமாறு நாம் ஏவப்பட்டுள்ளோம்.
அல்லாஹ்தஆலா தன் திருமறையில்;
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் சப்தங்களை நபியின் சப்தத்திற்கு மேலால் உயர்த்தாதீர்கள். மேலும், உங்களில் சிலர் மற்றும் சிலருடன் சப்தமிட்டுப் பேசுவது போன்று அவருடன் சப்தமிட்டுப் பேசாதீர்கள்;. (ஏனெனில்,) நீங்கள் உணராத நிலையில் உங்கள் செயல்கள் அழிந்து விடும். நிச்சயமாக எவர்கள் தமது சப்தங்களை அல்லாஹ்வின் தூதரிடத்தில் தாழ்த்திக்கொள்கிறார்களோ, அவர்களது உள்ளங்களை அல்லாஹ் பயபக்திக்காகப் பரிசுத்தமாக்கினான். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு. (49:2-3)இத்தூதரை அழைப்பதை உங்களுக்கிடையில் சிலர் சிலரை அழைப்பது போன்று ஆக்கிக்கொள்ளாதீர்கள். உங்களில் யார் மறைவாக நழுவிச் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் நன்கறிவான். அவரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு ஒரு துன்பம் நேருவதையோ, அல்லது தமக்கு நோவினை தரும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக்கொள்ளட்டும். (24:63)
இன்று நபி(ஸல்) அவர்கள் நம்மிடையே இல்லையென்றாலும் அவர்களது வழிமுறையும், பொன்மொழிகளும் இருக்கின்றன. நபிவழிக்கும், நாயக வாக்கியங்களுக்கும் கண்ணியமளிப்பது எமது மார்க்கக் கடமையாகும்.
நபி(ஸல்) அவர்களைப் பாதுகாப்பது எமது மார்க்கக் கடமையாகும். இந்த வகையில் நபி(ஸல்) அவர்களை நோவினை செய்யும் விதத்தில் அல்லது அவர்களது அந்தஸ்தைக் குறைக்கும் விதத்தில் செய்யப்படும் அனைத்துச் சதிகளுக்கு எதிராகவும் போராடுவதும் எமது மார்க்கக் கடமையாகும்.
இதனை;
“…எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவியும் செய்து, அவருடன் இறக்கப்பட்டிருக்கும் (குர்ஆன் எனும்) ஒளியையும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்” (7:157) என்ற வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.
- எனது சக்திக்கும், ஆற்றலுக்கும் ஏற்ப முடிந்த அளவு நபி(ஸல்) அவர்களுக்கு “நுஸ்ரத்” செய்வேன் என உண்மையான உள உறுதிப்பாட்டை எடுத்தல் வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களை முறையாக நேசித்தால் சுவனத்தில் அவர்களுடன் இருக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும். ஒரு நபித் தோழர், “நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கின்றேன்” என்று கூறிய போது, “நீ யாரை நேசித்தாயோ அவர்களுடன் இருப்பாய்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த மகத்தான பாக்கியத்தை மனதில் வைத்து அவர்களை உண்மையாக நேசிக்க வேண்டும்.
- நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள எமது நேசத்தை வெளிப்படுத்துமுகமாக நபியவர்கள் கற்றுத் தந்த “ஸலவாத்”தை அதிகமதிகம் ஓத வேண்டும். குறிப்பாக நபியவர்கள் நினைவுகூறப்படும் போதும், அதானுக்குப் பின்னரும், வெள்ளிக் கிழமை தினம் மற்றும் சகல சந்தர்ப்பங்களிலும் “ஸலவாத்”து ஓதி அந்த நன்மையைப் பெற்றுக்கொள்ள முனைய வேண்டும்.
- நபி(ஸல்) அவர்கள் மீது நேசம் கொண்டவர்கள் நபி(ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாற்றையும், அது தரும் படிப்பினைகளையும் அதிகமதிகம் படித்துப் பயன்பெற வேண்டும். “நபியை நேசிக்கின்றேன்!” என்று கூறிக்கொண்டு அவரது அவரது வாழ்வு பற்றிப் படிக்காமல் இருக்க முடியாது.
- நபி(ஸல்) அவர்களது பொன்மொழிகளைப் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். புகாரி, முஸ்லிம், திர்மிதி, அஹ்மத், அபூதாவூத் போன்ற ஹதீஸ் கிரந்தங்களும், ரியாளுஸ் ஸாலிஹீன், புழூஹுல் மறாம் போன்ற ஹதீஸ் தொகுப்புக்களும் இன்று தமிழில் வெளிவந்துள்ளன. இந்த மொழிபெயர்ப்புக்கள் மூலம் நபிமொழிகளை அறிந்துகொள்ளலாம்.
- நபி(ஸல்) அவர்களின் ஸுன்னாக்களைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் நபி(ஸல்) அவர்களையே முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களது எந்த ஸுன்னத்தையும் இழிவுபடுத்துவதை விட்டும், கேலி செய்வதை விட்டும் தவிர்ந்திருத்தல் வேண்டும். இன்று எம்மில் சிலர் தாடி வைத்தல் போன்ற ஸுன்னாக்களை இழிவுபடுத்துகின்றனர். இது நபியை இழிவுபடுத்துவது போன்று குற்றமாகக் கருதப்படும்.
- மக்கள் மத்தியில் ஸுன்னா முக்கியத்துவம் பெறும் போதும், நடைமுறைப்படுத்தப்படும் போதும், மேலோங்கும் போதும் மகிழ்வடைய வேண்டும்.
- சில ஸுன்னாக்கள் மக்கள் மத்தியில் மறைந்து போயிருப்பது குறித்து கவலை கொள்ள வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களையோ, அவர்களது ஸுன்னாவையோ விமர்சிப்பவர்கள் மீது கோபம் கொள்வதும் நபி மீதான நேசத்தை வெளிப்படுத்தும் அம்சமாகும்.
- நபி(ஸல்) அவர்களது மனைவியர், அவர்களது சந்ததியினர் மற்றும் நபி(ஸல்) அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த முஃமின்கள் அனைவரையும் நேசிக்க வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களது தோழர்களான ஸஹாபாக்கள் அனைவரையும் நேசிக்கவும், மதிக்கவும் வேண்டும். அத்துடன் மார்க்க அறிவு, பேணுதல், அல்லாஹ்விடம் பெற்றுள்ள அந்தஸ்து அனைத்திலும் அவர்கள் பின்னால் வந்தவர்களை விட உயர்வானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- “உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நபிவழியைப் போதிக்கும் உலமாக்களை நேசிப்பதும், கண்ணியப்படுத்துவதும் நபி(ஸல்) அவர்கள் மீதான எமது நேசத்தை வெளிப்படுத்தும் அம்சமாக அமையும்.
குடும்ப மட்டத்தில் நபியை நேசிக்க..
எமது குடும்ப அமைப்பில் நபி மீது நாம் கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்தப் பின்வருவன போன்ற செயல் திட்டங்களை முன்னெடுக்கலாம்.
எமது குடும்ப அமைப்பில் நபி மீது நாம் கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்தப் பின்வருவன போன்ற செயல் திட்டங்களை முன்னெடுக்கலாம்.
- நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் அடிப்படையில் குழந்தைகளை வளர்த்தல், பயிற்றுவித்தல்.
- உண்பது, உறங்குவது, மல-சல கூடத்துக்குச் செல்வது போன்ற விடயங்களில் குழந்தைகள் நபிவழியைப் பின்பற்றப் பயிற்றுவித்தல்.
- நபி(ஸல்) அவர்களது வரலாற்றைப் பிள்ளைகளுக்குக் கற்பித்தல். அதற்கான நூற்கள், இறுவட்டுக்களைக் குழந்தைகளுக்கு அன்பளிப்புச் செய்தல்.
- சின்னச் சின்ன நபிமொழிகளையும், அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய அவ்றாதுகளையும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தல்.
கல்விக் கூடங்கள்:
நீங்கள் ஒரு ஆசிரியராகவோ, அதிபராகவோ இருக்கலாம். அல்லது பல்கலைக்கழக மாணவ அமைப்புக்களின் பொறுப்புதாரிகளாகவோ, பேராசிரியர்களாகவோ இருக்கலாம். நீங்கள் அல்லாஹ்வின் தூதரை உண்மையாக நேசிக்கின்றீர்கள் என்பதை நடைமுறையில் நிரூபித்தாக வேண்டும். அதற்காகப் பின்வரும் செயற்திட்டங்களை முன்னெடுக்கலாம்.
நீங்கள் ஒரு ஆசிரியராகவோ, அதிபராகவோ இருக்கலாம். அல்லது பல்கலைக்கழக மாணவ அமைப்புக்களின் பொறுப்புதாரிகளாகவோ, பேராசிரியர்களாகவோ இருக்கலாம். நீங்கள் அல்லாஹ்வின் தூதரை உண்மையாக நேசிக்கின்றீர்கள் என்பதை நடைமுறையில் நிரூபித்தாக வேண்டும். அதற்காகப் பின்வரும் செயற்திட்டங்களை முன்னெடுக்கலாம்.
- உங்கள் மாணவர் மனதில் நபி(ஸல்) அவர்கள் மீதான நேசத்தை விதையுங்கள்! (ஒரு கம்யூனிஸவாதி கார்ல் மார்க்ஸ் மீது பற்றை விதைக்கும் விதத்தில் தனது பாடத்தையும், உதாரணத்தையும் அமைத்துக்கொள்ளும் போது ஒரு முஸ்லிம் நபி(ஸல்) அவர்கள் மீது நேசத்தை விதைக்க முயலக் கூடாதா என்ன!?)
- நபி(ஸல்) அவர்களது பன்முக ஆளுமைகளை விபரிக்கும் விதத்தில் அதிகமான செயலமர்வுகளை நடத்தலாம்.
- நபி(ஸல்) அவர்களது வரலாறு குறித்த ஆய்வுகளை உற்சாகப்படுத்தி இது தொடர்பான நூலாக்க முயற்சிகளை ஊக்குவிக்கலாம்.
- பொது வாசிகசாலைகளில் நபி(ஸல்) அவர்களது வாழ்வு, வரலாறு, ஆளுமை குறித்துப் பேசும் நூற்களை வைக்கலாம். அந்நியர்களது வாசிகசாலைகளுக்கும் நாமே இது தொடர்பான நூற்களை அன்பளிப்புச் செய்யலாம். இல்லையென்றால் இஸ்லாத்தின் எதிரிகளின் நூற்கள்தான் அந்த இடத்தை நிரப்பும். நபி(ஸல்) அவர்களைப் பற்றி அறிய விரும்பும் ஒரு அந்நிய வாசகன் இஸ்லாத்தின் எதிரிகளின் நூற்களை எடுத்துத்தான் வாசிப்பான். இதைத் தவிர்ப்பதற்கும், நபி(ஸல்) அவர்கள் பற்றிய உண்மையான-உயர்வான வரலாறு பிற மக்களைச் சென்றடையவும் இந்தத் திட்டம் உதவும்.
- நபி(ஸல்) அவர்களது வாழ்வு, வழிகாட்டல் தொடர்பான வருடாந்தப் போட்டி நிகழ்ச்சிகளை நடத்தலாம். இதில் அந்நியர்களும் பங்குகொள்ள வாய்ப்பளிக்கலாம். இதன் மூலம் நபி(ஸல்) அவர்களது வாழ்வை அனைவரும் ஆர்வத்துடன் படிக்கும் நிலையை உருவாக்கலாம். இதற்காகக் கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளை நடத்தலாம்.
- இளைஞர்-யுவதிகளுக்காக விடுமுறை நாட்களில் ஆழமான, விரிவான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யலாம்.
அறிஞர்கள் – தாயிகள் (அழைப்பாளர்கள்)
நீங்கள் மக்களுக்கு மார்க்கத்தைப் போதிக்கும் இமாமாகவோ, தஃவாப் பணியில் ஈடுபாடு கொண்டவராகவோ, அறிவைத் தேடும் மாணவராகவோ இருந்தால் பின்வரும் பணிகளூடாக நபி(ஸல்) அவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் பற்றையும், பாசத்தையும் பறை சாட்டலாம்.
நீங்கள் மக்களுக்கு மார்க்கத்தைப் போதிக்கும் இமாமாகவோ, தஃவாப் பணியில் ஈடுபாடு கொண்டவராகவோ, அறிவைத் தேடும் மாணவராகவோ இருந்தால் பின்வரும் பணிகளூடாக நபி(ஸல்) அவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் பற்றையும், பாசத்தையும் பறை சாட்டலாம்.
- நபி(ஸல்) அவர்களது பிரச்சாரத்தினதும், அவர்களது தூதுத்துவப் பணியினதும் தனித்துவங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்தலாம்.
- நபி(ஸல்) அவர்கள் முழு மனித சமுதாயத்திற்குமான வழிகாட்டியாவார்கள். இந்த வகையில் குல-நிற-கோத்திர-பிரதேச வேறுபாடுகளையும் தாண்டி அனைத்துலக மக்களிடமும் நபி(ஸல்) அவர்களது தூதுச் செய்தியைத் தன் சக்திக்கு ஏற்பச் சுமந்து செல்லுவதன் மூலமும், அதற்கான முயற்சிகளை முடுக்கி விடுவதன் மூலமும் உங்கள் அன்பை உறுதி செய்யலாம்.
- அழகிய நடையில் நபி(ஸல்) அவர்களது சிறப்புக்களையும், அவர்களைப் பின்பற்றும் சமூகத்தினது தனித்தன்மையையும் பிற மதத்தவர்களுக்கு எடுத்துரைத்தல்.
- நபி(ஸல்) அவர்களது வாழ்வை மக்களுக்குத் தெளிவுபடுத்துதல், நபித்துவத்திற்கு முந்திய-பிந்திய அவர்களது தூய வாழ்வையும், அவர்களது சிறப்பான பண்பாடுகளையும் தெளிவுபடுத்துதல்.
- நபி(ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினர், அண்டை அயலவர், தோழர்கள் என்போருடன் எவ்வாறு உறவுகளைப் பேணினார்கள் என்பதை விளக்குதல்.
- நபி(ஸல்) அவர்கள் தமது எதிரிகளுடனும், யூத-கிறிஸ்தவர்களுடனும், இணைவைப்போருடனும் எத்தகைய மனித நேயத்துடன் நடந்து கொண்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்துதல். குறிப்பாக இஸ்லாத்தின் எதிரிகள் நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களுடன் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார்கள் என விமர்சிக்கப்படும் இந்தச் சூழலில் நபி(ஸல்) அவர்கள் அந்நியர்களுடன் மேற்கொண்ட அன்னியோன்யமான உறவு குறித்து தெளிவுபடுத்துதல் அவசியமாகும்.
- காலையில் கண்விழித்ததிலிருந்து இரவு உறங்கும் வரை அவர்களது அன்றாட நடவடிக்கை எப்படி அமைந்திருந்தது? என்பதைத் தெளிவுபடுத்தல்.
- குத்பா உரைகளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தை நபி(ஸல்) அவர்கள் மீது பற்றையும், பாசத்தையும் ஏற்படுத்தத்தக்க அவர்களது அழகிய வாழ்க்கையை மக்களுக்கு முன்வைக்கப் பயன்படுத்துதல்.
- தொழுகையில் நபி(ஸல்) அவர்களது வாழ்வோடு சம்பந்தப்பட்ட ஆயத்துக்கள் ஓதப்பட்டால் 5 அல்லது 10 நிமிடங்கள் தொழுகை முடிந்ததும் அந்த ஆயத்தின் அர்த்தம் நபி(ஸல்) அவர்கள் அதைக் கடைப்பிடித்த விதம் அல்லது அது என்ன காரணத்திற்காக அருளப்பட்டது? என்பதைச் சுருக்கமாக மக்களுக்கு விளக்கலாம்.
- குர்ஆன் வசனங்களைப் பாடமிட ஆர்வமூட்டுவது போன்று சின்னச் சின்ன ஹதீஸ்களை மனனமிடப் பயிற்றுவிக்கும் மஜ்லிஸ்களை ஏற்பாடு செய்யலாம்.
- நபி(ஸல்) அவர்களது செயற்பாடுகளையும், வழிமுறைகளையும் விமர்சிப்பவர்களை விட்டும் விலகி இருப்பதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
- நபி(ஸல்) அவர்கள் மீது நேசம் வைப்பதிலும், அவர்களது சிறப்பைப் பேசுவதிலும் எல்லை மீறிச் சென்று விடக் கூடாது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துதல். இந்த எல்லை மீறும் போக்கு எம்மை அறியாமலேயே எம்மை ஷிர்க்கில் தள்ளி விடும் என மக்களை விழிப்படையச் செய்தல் வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களது உண்மையான வரலாற்றைக் கற்பதை மக்களுக்கு ஆர்வமூட்ட வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களின் வரலாறு சிறப்பு என்ற பெயரில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை மக்களுக்கு இனம் காட்டி நபி(ஸல்) அவர்களது தூய வரலாற்றின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும்.
- நபி(ஸல்) அவர்களது வாழ்வு, வரலாறு குறித்து மக்களிடம் காணப்படும் ஐயங்களைத் தெளிவுபடுத்துதல் வேண்டும்.
அறிஞர்கள், சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள்:
இவர்கள் தனி நபராக இருந்து சமூகத்தில் பாரிய தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்கள். இந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் மீது பற்றும், பாசமும் கொண்ட இத்தகைய ஊடகவியலாளர்களும், சிந்தனையாளர்களும் பின்வருமாறு பணியாற்றலாம்.
இவர்கள் தனி நபராக இருந்து சமூகத்தில் பாரிய தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்கள். இந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் மீது பற்றும், பாசமும் கொண்ட இத்தகைய ஊடகவியலாளர்களும், சிந்தனையாளர்களும் பின்வருமாறு பணியாற்றலாம்.
- சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பயன்படுத்தி நபி(ஸல்) அவர்களது பண்புகளையும், தனித்தன்மைகளையும் மக்களுக்கு எடுத்து வைக்கலாம். உதாரணமாக, நபி(ஸல்) அவர்களை குண்டு வைப்பவராகக் கார்டூன் வரையப்பட்டு அது பரபரப்பை ஏற்படுத்திய சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்கள் காபிர்களுடன் நடந்து கொண்ட விதம், எதிரிகளை மன்னித்த அவர்களது பண்பு, அவர்களின் அன்பான வாழ்வை மக்களுக்கு எடுத்து வைக்கலாம். அதே போன்று நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த போர் தர்மங்கள், ஒழுங்குகள் என்பவற்றை பகிரங்கப்படுத்தலாம்.
- நபிவழியில் குறை காணும் கருத்துக்களையோ, கட்டுரைகளையோ, செய்திகளையோ வெளியிடக் கூடாது.
- ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள், செய்தியாளர்களுக்கான செயலமர்வுகளை ஏற்படுத்தி நபி(ஸல்) அவர்களது உண்மையான வரலாற்றைப் பல்வேறு கோணங்களில் முன்வைக்கலாம். அதன் மூலம் அந்த ஊடகவியலாளர்கள் நபி(ஸல்) அவர்கள் குறித்து தப்பும் தவறுமாகச் செய்தி வெளியிடுவதைத் தவிர்க்கலாம்.
- நபி(ஸல்) அவர்கள் குறித்து மாற்று மத அறிஞர்கள் வெளியிட்டுள்ள நல்ல கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பலாம்.
- நாட்டில் உள்ள மாற்று மதம் சார்ந்த அறிஞர்கள், சிந்தனையாளர்களை அழைத்து நபி(ஸல்) அவர்களது வாழ்வு, அவரது அரசியல்-சமுகப் பணிகள் குறித்து விரிவான கலாச்சார மாநாடுகளை நடத்தலாம்.
- முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டும் பங்குகொள்ளும் விதத்தில் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த போட்டி நிகழ்ச்சிகளை தொலைத் தொடர்பு சாதனங்கள் ஊடாக நடத்தலாம். அவர்கள் ஆக்கங்கள் தயாரிக்கத்தக்க தகவல்களை நாமே நூற்களாக வெளியிடலாம். இதன் மூலம் நபி(ஸல்) அவர்களது வாழ்வை அந்நியர்களும் படிக்கும் சூழலை உண்டுபண்ணலாம். அந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்குப் பெருமதியான பரிசில்களை வழங்கலாம். வெற்றி பெற்றோரின் ஆக்கங்களைத் தேசிய நாளேடுகளிலும் வெளிவரச் செய்து அதை மக்கள் மயப்படுத்தலாம்.
- நபி(ஸல்) அவர்கள் குறித்துப் பேசும் கட்டுரைகள், சிறுவர் இலக்கியங்கள், சிற்றேடுகள் என்பவற்றைப் பல மொழிகளிலும் வெளியிடலாம்.
- நபி(ஸல்) அவர்களை நேசிப்பது மார்க்கக் கடமை. அவர்களது நேசிப்பது என்பது அவர்களை கண்ணியப்படுத்துவது, பின்பற்றுவது என்பவற்றை உள்ளடக்கியது என்பதைத் தெளிவுபடுத்தும் கட்டுரைகளையும், வெளியீடுகளையும் சமுகத் தலைவர்கள் பார்வைக்கு உட்படுத்தலாம்.
நிறுவனங்களின் பணி:
முஸ்லிம் சமுகத்தில் பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள பற்றையும், பாசத்தையும் பின்வரும் வழிகளில் வெளிப்படுத்தலாம்.
முஸ்லிம் சமுகத்தில் பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள பற்றையும், பாசத்தையும் பின்வரும் வழிகளில் வெளிப்படுத்தலாம்.
- நபி(ஸல்) அவர்களது உண்மையான வாழ்வை உலகுக்கு எடுத்துக் கூறும் ஒலி-ஒளி நாடாக்கள், புத்தகக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யலாம்.
- பிரதேச, தேசிய மட்டங்களிலான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து முஸ்லிம் சிறுவர்-இளைஞர்களுக்கு நபி(ஸல்) அவர்களது வரலாற்றைப் போதிப்பதுடன் மாற்று மதத் தலைவர்களும் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர் நபி(ஸல்) அவர்களது வாழ்வை அறிந்துகொள்ளத்தக்க கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யலாம்.
- நபி(ஸல்) அவர்களது வாழ்வை விபரிக்கும் இலவச வெளியீடுகளை விநியோகம் செய்யலாம்.
- நபி(ஸல்) அவர்களது ஸுன்னாவைப் பரப்புவதற்காகப் பாடுபட்ட நல்லறிஞர்களை இனங்கண்டு அவர்களையும், அடுத்தவர்களையும் ஊக்கப்படுத்துமுகமாகப் பரிசில்களையும், நினைவுச் சின்னங்களையும் வழங்கலாம்.
- மாற்று மொழிகளில் நபி(ஸல்) அவர்களது பன்முக ஆளுமைகளை விபரிக்கக் கூடிய வெளியீடுகளை வெளியிட்டு அதனைப் பல்கலைக் கழகங்கள், அரச-தனியார் பணியிடங்கள், நூலகங்கள், வாசிகசாலைகளுக்கு விநியோகிக்கலாம்.
- வருடாந்த நினைவு மலர்களை வெளியிட்டு அதன் மூலம் நபி(ஸல்) அவர்களது பண்பாடு, ஒழுக்கம், வழிகாட்டல்களை விபரிக்கலாம்.
- நபி(ஸல்) அவர்களது தூய வாழ்வை விபரிப்பதற்கும், அவர்கள் குறித்து எழுப்பப்படும் ஐயங்களுக்குப் பதிலளிப்பதற்குமெனத் தனியான அறக்கட்டளையை நிறுவி அதன் மூலமாக நூல் வெளியீடு, மொழியாக்கப் பணி, வலைப்பின்னல் எனப் பணிகளை விரிவுபடுத்தலாம்.
இணையத் தளங்களை நடத்துவோர்:
இணையத் தளங்கள் இன்றையத் தொடர்பூடங்களில் பிரிக்க முடியாத அம்சமாக மாறியுள்ளது. இணையத் தளப் பாவணையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இணையத் தளங்களை நடத்தும் முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்கள் மீது தாம் கொண்ட அன்பை வெளிப்படுத்தப் பின்வரும் விதத்தில் பணியாற்றலாம்.
இணையத் தளங்கள் இன்றையத் தொடர்பூடங்களில் பிரிக்க முடியாத அம்சமாக மாறியுள்ளது. இணையத் தளப் பாவணையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இணையத் தளங்களை நடத்தும் முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்கள் மீது தாம் கொண்ட அன்பை வெளிப்படுத்தப் பின்வரும் விதத்தில் பணியாற்றலாம்.
- இந்த மார்க்கத்தின் சிறப்பம்சங்களை இணையம் மூலம் தெளிவுபடுத்தலாம்.
- இஸ்லாம் அனைத்துத் தூதர்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், அவர்கள் மீது அன்பு வைக்க இஸ்லாம் கட்டளையிட்டுள்ள செய்தியையும் தெளிவுபடுத்தலாம்.
- நபி(ஸல்) அவர்களது தூதுத்துவத்தின் சிறப்பம்சங்களையும், தனித்துவங்களையும் தெளிவுபடுத்தும் தனிப் பகுதியை இணையத்தில் ஏற்படுத்தலாம்.
- இணையத்தில் (chat) அரட்டையில் உரையாடும் போது நபி(ஸல்) அவர்களது வரலாற்றையும், அவர்கள் போதித்த கொள்கையையும் ஆய்வு செய்யுமாறு மாற்று மதச் சகோதரர்களிடம் வேண்டுதல் முன்வைக்கலாம்.
- நபி(ஸல்) அவர்களது சிறப்பம்சங்களையும், அவர்களது குறிப்பான சில ஹதீஸ்களையும் மாற்று மதத்தவர்களுக்கு (email) அஞ்சல் செய்யலாம். உதாரணமாக நபியவர்களின் மன்னிக்கும் பண்பு, விட்டுக் கொடுக்கும் போக்கு, சிறுவர்களுடன் அவர்கள் நடந்து கொண்ட விதம், இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமை போன்ற அம்சங்களைக் குறிப்பிடலாம்.
- நபி(ஸல்) அவர்களது வாழ்வைப் பற்றிப் பேசும் சிறந்த நூற்கள், உரைகள் என்பவற்றை இணையத் தளத்தைப் பயன்படுத்தி மக்கள் மயப்படுத்தலாம்.
செல்வந்தர்களும், இஸ்லாமிய அரசும்:
எமது சமுகத்திலுள்ள செல்வந்தர்களும், இஸ்லாமிய அரசுகளும் நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள உண்மையான தமது அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளனர். வெறுமனே நபி(ஸல்) அவர்களுக்காக “மீலாத் விழா” எடுத்து விட்டு அல்லது “மவ்லூது” ஓதி விருந்து படைத்து விட்டு நாம் நபி(ஸல்) அவர்களுக்குரிய அன்பை வெளிப்படுத்தி விட்டோம் எனச் சிலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இது தவறாகும். இஸ்லாமிய அரசுகள், செல்வந்தர்கள் என்போர் நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் ஊக்குவித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும். செல்வந்தர்கள், சாதாரண நூல் வெளியீடுகள்-கவிதை வெளியீடுகள் என்பவற்றுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தில் 10 வீதம் கூட இஸ்லாமிய வெளியீடுகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இஸ்லாமிய அரசுகளைப் பொறுத்த வரையில் நபி(ஸல்) அவர்கள் மீதான தமது பாசத்தை வெளிப்படுத்தும் இத்தகைய பணிகளை அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகக் கொள்ள வேண்டும். இன்றைய முஸ்லிம் அரசுகள் சினிமா, கலை-கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் அநாச்சாரங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் கூட நபி(ஸல்) அவர்களது தூய வாழ்வை மக்கள் மன்றத்திற்கு வைப்பதற்கு அளிப்பதற்கு தவறி விட்டன. இருப்பினும் வருடம் ஒரு முறை “மீலாத்” நடத்தி, நபி மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தி விட்டோம் என்று திருப்தி காண்கின்றன. அல்லது நடிக்கின்றன எனக் கூறலாம்.
எமது சமுகத்திலுள்ள செல்வந்தர்களும், இஸ்லாமிய அரசுகளும் நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள உண்மையான தமது அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளனர். வெறுமனே நபி(ஸல்) அவர்களுக்காக “மீலாத் விழா” எடுத்து விட்டு அல்லது “மவ்லூது” ஓதி விருந்து படைத்து விட்டு நாம் நபி(ஸல்) அவர்களுக்குரிய அன்பை வெளிப்படுத்தி விட்டோம் எனச் சிலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இது தவறாகும். இஸ்லாமிய அரசுகள், செல்வந்தர்கள் என்போர் நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் ஊக்குவித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும். செல்வந்தர்கள், சாதாரண நூல் வெளியீடுகள்-கவிதை வெளியீடுகள் என்பவற்றுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தில் 10 வீதம் கூட இஸ்லாமிய வெளியீடுகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இஸ்லாமிய அரசுகளைப் பொறுத்த வரையில் நபி(ஸல்) அவர்கள் மீதான தமது பாசத்தை வெளிப்படுத்தும் இத்தகைய பணிகளை அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகக் கொள்ள வேண்டும். இன்றைய முஸ்லிம் அரசுகள் சினிமா, கலை-கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் அநாச்சாரங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் கூட நபி(ஸல்) அவர்களது தூய வாழ்வை மக்கள் மன்றத்திற்கு வைப்பதற்கு அளிப்பதற்கு தவறி விட்டன. இருப்பினும் வருடம் ஒரு முறை “மீலாத்” நடத்தி, நபி மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தி விட்டோம் என்று திருப்தி காண்கின்றன. அல்லது நடிக்கின்றன எனக் கூறலாம்.
எனவே, எமது ஈமானின் ஒரு அம்சமான நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள நேசத்தை வெறும் வெற்று வார்த்தைகளிலும் உண்ணும் உணவிலும் மட்டும் காட்டும் இந்தப் போக்கைக் கைவிட்டு விட்டு நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள நேசத்தை உள்ளத்து உணர்வுகளாலும், எமது ரூபத்திலும், நடத்தையிலும் வெளிக்காட்ட முனைவோமாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக