குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்கும் நர்சரி பள்ளிகள்
நர்சரி பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளை விட தாத்தா, பாட்டியிடம் வளரும் குழந்தைகளின் ஆற்றல் சிறப்பாக இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அன்றைய காலகட்டத்தில் 5 வயது ஆன பிறகு தான் குழந்தை முதன் முதலில் பள்ளிக்கூடத்தில் அடியெடுத்து வைக்கும். தற்போது இந்த வழக்கம் மறைந்துவிட்டது.
இதுதொடர்பாக இங்கிலாந்தின் நஃபீல்டு அறக்கட்டளை மற்றும் பண புழக்கம் தொடர்பான ஆய்வு நிறுவனம் இணைந்து ஆய்வு நடத்தின. சமூக ஆராய்ச்சியாளர் கரோலின் பிரைசன் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிதாக பள்ளி செல்லும்போது குழந்தைகளுக்கு ஒருவித தயக்கம், பயம் இருக்கும். நர்சரி சென்ற குழந்தைகளுக்கு இந்த பிரச்னைகள் இருக்காது.
அதே நேரம், அதிக பணம் செலவழித்து சேர்க்கப்படும் நர்சரி பள்ளியில் கிடைப்பதைவிட நல்ல அனுபவம், பழக்க வழக்கங்கள் தாத்தா, பாட்டியிடம் வளரும் குழந்தைக்கு கிடைக்கிறது.
அந்த குழந்தைகள் புதிது புதிதாக நிறைய வார்த்தைகள் தெரிந்து கொள்கின்றன. சரளமாக பேசுகின்றன. கோபம், வருத்தம் என அவர்கள் சட்டென்று உணர்ச்சிவசப்படுவது இல்லை.
பள்ளியில் சேர்ப்பது என்ற குறுகிய நோக்கத்துடன் பார்க்காமல், குழந்தையின் எதிர்காலம் என்ற தொலைநோக்கு பார்வையில் பார்த்தால் 5 வயதுக்கு முன்பு வரை தாத்தா, பாட்டியிடம் வளர்வதே நல்லது. அன்பு செலுத்தும் உறவினர்கள் மத்தியில் வளரும் குழந்தைகள் நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்கின்றன.
அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில் குழந்தையை வேறு வழியின்றி நர்சரியில் சேர்க்கின்றனர். சிலர் பிள்ளையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை தங்களது பெற்றோரிடம் (தாத்தா, பாட்டி) விடுகின்றனர்.
நர்சரியில் பிள்ளையை சேர்க்க பணம் இல்லாதது மட்டுமே இதற்கு காரணம் அல்ல. தங்கள் பிள்ளையை தாத்தா, பாட்டி நன்கு கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை முதல் காரணம். அவர்கள் நன்கு அன்பு செலுத்துவார்கள் என்பது அடுத்த காரணம்.
2000ம் ஆண்டில் பிறந்த குழந்தைகளை வைத்து ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அவர்களில் நர்சரியில் படித்த குழந்தைகளைவிட தாத்தா, பாட்டியிடம் வளர்ந்த குழந்தைகள் சீக்கிரமே நன்கு பேசுகின்றன.
நன்கு படித்த குடும்பங்களில் தாத்தா, பாட்டியிடம் வளரும் குழந்தைகள் அடுத்தவர்களிடம் எளிதாக பழகுகின்றனர். எளிதில் உணர்ச்சிவசப்படாமல், எந்த பிரச்னையையும் நிதானமாக அணுகுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
நன்றி: lankasri news
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக