வயதானவர்கள் என்ன சாப்பிடலாம்?
முதுமை காரணமாக உடல் கட்டமைப்பு மாறுகிறது. புரதச் சத்து குறைந்து, அதற்குப் பதிலாக கொழுப்புச் சத்து அதிகமாகிறது. தசைகள் பலவீனம் அடையத் தொடங்குகின்றன. ஜீரணத்துக்கு உரிய சுரப்புகள் செயல்படும் தன்மை குறையத் தொடங்குகின்றன. பார்வை மங்குதல், காது போதிய அளவு கேட்காமை, சுவை மாறுதல், எரிச்சல் ஏற்படுதல், அஜீரணக் கோளாறுகள் ஏற்படத் தொடங்குகின்றன.
முதுமை காரணமாக இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை இருக்க வாய்ப்பு உண்டு.உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு காரணமாக, நோய்த் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு. எனவே இத்தகையோருக்கு சமச்சீரான ஊட்டச்சத்து உணவு அவசியம்.
மிருதுவான கஞ்சி, நன்கு வேக வைக்கப்பட்ட மிருதுவான சாதம் ஆகியவை நல்லது. மசாலா நிறைந்த உணவுகளைத் தவிர்பபது நல்லது. உணவில் உப்பு, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த நெய், எண்ணெய் ஆகியவற்றைக் குறைவாகச் சாப்பிடுவது அல்லது. காய்கறிகளை நன்றாக வேக வைத்து, மிக்சியில் அரைத்து மசிய வைத்துகூடச் சாப்பிடலாம்.காய்கறிகளை மசித்துச் சாப்பிட்டாலும் நார்ச்சத்து கிடைக்கும். மசிக்கும் நிலையில் வடிகட்டாமல் திரவத்துடன் சேர்த்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். முதுமையில் இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும்.
முதுமையின் மிகப் பெரிய பிரச்னை எலும்பு வலுவிழத்தல். குறிப்பாக பெண்கள் முதுமையை எட்டியவுடன் எலும்பு வலுவிழத்தல் நோய் (ஆஸ்டியோஸ் போரோசிஸ்) நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதேபோன்று 65 வயதுக்குப் பிறகு ஆண்களுக்கு இதே நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகையோர் கால்ஷியம் சத்து நிறைந்த சமச்சீரான உணவு சாப்பிடுவது நல்லது. ஆடை நீக்கிய பால், பச்சைக் காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரிக்காது. மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க தினமும் குடிநீர் போதுமான அளவு குடிப்பது அவசியம். முதுமையில் தாகம் எடுக்கும் உணர்வு பெருமளவு குறைந்து விடும். எனவே தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படாவிட்டாலும் நாள் முழுவதுக்கும் குறைந்தபட்சம் 2 லிட்டர் குடிநீர் குடிக்க வேண்டும்.சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் குடிநீர் குடிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அதோடு, பால்-மோர்-காய்கறி சூப்பிலும் குடிநீர் உள்ளது.
மூன்று வேளை சாப்பிடாமல், இடைவெளி விட்டு அதிக வேளைகள் சாப்பிட வேண்டும். உதாரணமாக, காலை எழுந்தவுடன் சர்க்கரை இல்லாமல் ஆடை நீக்கிய பால், காலை 8.30 மணிக்கு 2 இட்லியுடன் சாம்பார்-புதினா சட்னி, காலை 10 மணிக்கு மோர் (ஒரு சிறிய டம்ளர்) அல்லது காய்கறி சூப் அல்லது சத்துமாவு கஞ்சி, பருப்பு-கீரை சேர்ந்த மதிய உணவு, மாலை சிற்றுண்டியாக பழம், இரவு 8 மணிக்கு இட்லி அல்லது இடியாப்பம் அல்லது சப்பாத்தி அல்லது எண்ணெய் குறைவாக தயாரிக்கப்பட்ட தோசை ஆகியவற்றை கூட்டு-பொரியலுடன் சாப்பிடலாம்.இரவு படுக்கச் செல்லும் முன் பால் சாப்பிடலாம். இதுபோன்று சாப்பிட்டால் சமச்சீரான உணவுத் திட்டமாக அது அமையும்.
அவர்களுக்குத் தேவையான வேலைகளைச் செவ்வனே செய்வதற்கு குறைவான கலோரிச் சத்து கிடைக்கும்.உடலில் ஏற்கெனவே உள்ள சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளும் தீவிரமடையாது.
முதுமையை அடைந்து விட்டால் தம்மை கவனிக்க யாரும் இல்லை என விரக்தி உணர்வு வேண்டாம். கண் குறைபாடு, காது கேளாமை உள்ளிட்ட பாதிப்புகளைச் சரி செய்து கொள்வது அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக