உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின்னால் அப்போது உலகில் மிகச் சிறந்த மனிதராகவிருந்து, தனது 70 வயதில் ஆட்சிக்கு வந்த உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தனக்கு முன்னர் ஆட்சிபுரிந்த அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரைப் போன்றே நீதி, நேர்மைக்கு இலக்கணமாக ஆட்சி செய்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் எப்போது பிரச்சிணை வெடிக்கின்றதென்றால் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் குடும்பத்தைச் சேர்ந்த தகுதியான சிலரை பொறுப்புக்களில் அமர்த்திய போதுதான்.
அதே வேளை உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு ஆட்சியானது இஸ்லாமிய நாகரீகத்தின் பொற்காலங்களிலொன்றாகவிருந்தது.
ஆபிரிக்கா, ஐரோப்பாவென்று நாலா பக்கமும் இஸ்லாம் வளர்ச்சி பெற்றிருந்தது. இவ்வளவு விசாலமான தனது ஆட்சியில் தனது குடும்பத்தைச் சேர்ந்த வெறும் நான்கு பேரை மட்டுமே பொறுப்புக்களில் அமர்த்தியிருந்தார்கள் எனும் போது எந்த வகையிலும் இதை, ஓர் அதிகார துஷ்பிரயோகமாக, அல்லது முறைகேடானா செயலாகப் பார்க்க முடியாது.
அதே வேளை தன்னால் நியமிக்கப்பட்ட தன் குடும்பத்தைச் சேர்ந்த வலீத் என்பவர் போதையுடன் தொழுகை நடாத்தினார் என்ற செய்தி தனக்கு வந்ததும் அதற்கெதிராக உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நடவடிக்கை எடுக்காமலும் இருந்ததில்லை. மது அருந்திய அந்நபருக்கு கசையடி கொடுக்கச் சொல்லி, பொறுப்பிலிருந்து அவரை நீக்கியுமுள்ளார்கள்.
சிலர் கூறவதைப் போல உண்மையிலேயே உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அநியாயக்காரராக நடந்திருந்தால் இத்தகைய அநியாயக்கரருக்கு அல்லாஹ்வின் தூதர் சுவனம் கிடைப்பதாக வாக்களித்திருக்கமாட்டார்கள். அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் மீது ஷியாக்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கட்டுக்கதைகளால்தான் இவ்வாறான தப்பபிப்பிராயங்கள் எழுந்துள்ளன. உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் குடும்பத்தார்களை மற்றவர்களை விடக் கூடுதலாகக் கவனித்தார் எனும் செய்தியை சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டு நிரூபிக்க முடியாது.
நபியவர்களைப் பற்றி வரும் செய்திகளைப் பொறுத்த மட்டில் அவற்றின் அறிவிப்பாளர் வரிசைகள் முறைப்படி திறனாய்வு செய்யப்பட்டு, ஆதாரபூர்மானதுதான் என்று உறுதியான பின்பு பின்பற்றப் படவேண்டியதாகும். வரலாற்றைப் பொறுத்தமட்டில் நாம் எதைக் கவனிக்க வேண்டுமென்றால் நபியவர்கள் குறித்த ஒரு நபித்தோழரைப் பற்றிப் பாராட்டி முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள் என்றால் வரலாற்றில் அவரைப் பாராட்டி சில செய்திகள் வந்துள்ளதென்றால் அவற்றின் அறிவிப்பாளர் தொடர்களையெல்லாம் நுணுக்கமாக ஆய்வு செய்யவேண்டிய அவசியமில்லை.
நபியவர்கள் இவரைப் பற்றிப் புகழ்ந்து கூறியுள்ளார்கள். எனவே இவர் இந்த சிறப்புக்கு உரியவர்தான் என்றுதான் முடிவு செய்ய வேண்டும். அதே நேரம் ஒரு நபித்தோழர் பற்றி இகழ்ந்து வரலாற்றில் சில செய்திகள் வந்துள்ளதெனில் அதன் அறிவிப்பாளர் தொடர்களை ஆராயவேண்டும். அது உண்மைதான் என்று தெரிந்தால் ஒளிவு, மறைவின்றி அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அவர்; நல்லாவர்தான். ஆனாலும் மனிதர் என்ற அடிப்படையில் இத்தவறைச் செய்துள்ளார் என்று ஏற்கவேண்டும்.
ஸிப்பீன், ஜமல் யுத்தங்களையும் இவ்வாறுதான் நாம் கவனிக்க வேண்டும். இல்லையென்ன்றால் நல்ல பல ஆட்சியாளர்களைத் தவறாக எடை போடும் நிலைக்குத் தள்ளப்படுவோம். ஏனெனில் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு போன்ற நல்லவர்களைப் பற்றி பல விதமான தவறான செய்திகள் வரலாற்றில் கூறப்பட்டுள்ளன. ஜமல் யுத்தத்தில் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எவ்வகையிலும் நம்பமுடியாததும், சாத்தியமற்றதுமாகும்.
வரலாற்றை அறிவிப்பவர்களில் மிகப் பிரதானமாக மூவர் இடம் பெறுகின்றனர். அவர்களில் ‘வாகிதீ’ என்பவரும் ஒருவராகும். இவர் ஒரு பெரும் பொய்யர். இவர் ஒரு முறை உஹத் யுத்தத்தைப் பற்றிப் பாடம் நடாத்திக் கொண்டிருக்கும் போது அவரது மாணவரில் ஒருவர் ‘என்ன சுருக்கமாகச் சொல்கிறீர்கள் சற்று விரிவாகச் சொல்லுங்கள்’ என்று கூறவும் மறுநாள் 70 பாகங்கள் கொண்ட தொகுப்பை எடுத்துக் கொண்டு வந்து உஹத் யுத்தம் பற்றி பாடம் நடாத்தியதாக வரலாற்றில் காண்கிறோம். 70 பாகங்கள் கொண்ட தொகுப்பை எடுத்துக் கொள்ளும் அளவிற்கு உஹத் யுத்தம் நீண்டதல்ல. எனவே கூடுதலாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக அவ்வளவு பொய்களைக் அள்ளிக் கொட்டியுள்ளார் என்பது மிகத் தெளிவாகின்றது. ஆகவே இவ்வாறான பொய்யர்களின் அறிவிப்புக்களும் வரலாற்றில் இடம் பெறுகின்றமையால் எவ்வாறு இவற்றை அணுக வேணடும் என்ற மேலே நாம் கூறிய அடிப்படையை அவசியம் நாம் அறிந்திருக்க வேண்டும்.
‘அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரும் தன் குடும்பத்தில் யாருக்கும் எப்பதவியையும் கொடுக்காத போது ஏன் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் குடும்பத்திலுள்ளவர்களைப் பதவியில் அமர்த்தினார்கள்’ என்ற கேள்வி உருவாக்கப்பட்டது. இதைக் கண்ணுற்ற நயவஞ்சகர்கள் தருணம் பார்த்து காய்களை நகர்த்தி நிலைமையைப் பூதாகரிக்கச் செய்தனர். இச் செய்தி தேசம் பூராகவும் பரவுகின்றது. அதிருப்தியுற்ற சிலர் உபைதுல்லாஹிப்னு கிலாப் என்வரிம் சென்று இவ்விடயம் பற்றி உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பேசுமாறு வேண்டுகின்றனர் அந்த செய்தி கீழுள்ளவாறு இடம் பெறுகின்றது.
صحيح البخاري 3696 – عَنْ يُونُسَ قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَدِيِّ بْنِ الْخِيَارِ أَخْبَرَهُ أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الْأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ قَالَا مَا يَمْنَعُكَ أَنْ تُكَلِّمَ عُثْمَانَ لِأَخِيهِ الْوَلِيدِ فَقَدْ أَكْثَرَ النَّاسُ فِيهِ فَقَصَدْتُ لِعُثْمَانَ حَتَّى خَرَجَ إِلَى الصَّلَاةِ قُلْتُ إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً وَهِيَ نَصِيحَةٌ لَكَ قَالَ يَا أَيُّهَا الْمَرْءُ قَالَ مَعْمَرٌ أُرَاهُ قَالَ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ فَانْصَرَفْتُ فَرَجَعْتُ إِلَيْهِمْ إِذْ جَاءَ رَسُولُ عُثْمَانَ فَأَتَيْتُهُ فَقَالَ مَا نَصِيحَتُكَ فَقُلْتُ إِنَّ اللَّهَ سُبْحَانَهُ بَعَثَ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَقِّ وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ وَكُنْتَ مِمَّنْ اسْتَجَابَ لِلَّهِ وَلِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهَاجَرْتَ الْهِجْرَتَيْنِ وَصَحِبْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَأَيْتَ هَدْيَهُ وَقَدْ أَكْثَرَ النَّاسُ فِي شَأْنِ الْوَلِيدِ قَالَ أَدْرَكْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ لَا وَلَكِنْ خَلَصَ إِلَيَّ مِنْ عِلْمِهِ مَا يَخْلُصُ إِلَى الْعَذْرَاءِ فِي سِتْرِهَا قَالَ أَمَّا بَعْدُ فَإِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَقِّ فَكُنْتُ مِمَّنْ اسْتَجَابَ لِلَّهِ وَلِرَسُولِهِ وَآمَنْتُ بِمَا بُعِثَ بِهِ وَهَاجَرْتُ الْهِجْرَتَيْنِ كَمَا قُلْتَ وَصَحِبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَايَعْتُهُ فَوَاللَّهِ مَا عَصَيْتُهُ وَلَا غَشَشْتُهُ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ ثُمَّ أَبُو بَكْرٍ مِثْلُهُ ثُمَّ عُمَرُ مِثْلُهُ ثُمَّ اسْتُخْلِفْتُ أَفَلَيْسَ لِي مِنْ الْحَقِّ مِثْلُ الَّذِي لَهُمْ قُلْتُ بَلَى قَالَ فَمَا هَذِهِ الْأَحَادِيثُ الَّتِي تَبْلُغُنِي عَنْكُمْ أَمَّا مَا ذَكَرْتَ مِنْ شَأْنِ الْوَلِيدِ فَسَنَأْخُذُ فِيهِ بِالْحَقِّ إِنْ شَاءَ اللَّهُ ثُمَّ دَعَا عَلِيًّا فَأَمَرَهُ أَنْ يَجْلِدَهُ فَجَلَدَهُ ثَمَانِينَ
உபைதுல்லாஹ் இப்னு அதீ கூறுகிறார்: மிஸ்வர் இப்னு மக்ரமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் என்னிடம், ‘உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நீங்கள் அவர்களின் (தாய்வழிச்) சகோதரர் வலீத் இப்னு உக்பா) பற்றிப் பேசாமலிருப்பது ஏன்? மக்கள் வலீத் விஷயத்திலும் மிக அதிகமாகக் குறை கூறுகிறார்களே!’ என்று கேட்டார்கள். எனவே நான் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு தொழுகைக்காகப் புறப்பட்ட நேரத்தில் அவர்களைத் தேடிச் சென்றேன். அவர்களிடம், எனக்கு உங்களிடம் சற்று(ப் பேச வேண்டிய) தேவை உள்ளது. அது உங்களுக்கு (நான் கூற விரும்பும்) அறிவுரை’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘ஏ மனிதரே! உம்மிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்று கூறினார்கள்.
உடனே, நான் திரும்பி அவ்விருவரிடம் வந்தேன். அப்போது உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடை தூதுவர் (என்னைத் தேடி) வர, நான் அவர்களிடம் (மீண்டும்) சென்றேன். உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு, ‘உங்கள் அறிவுரை என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘அல்லாஹ், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பி அவர்களின் மீது (தன் வேதத்தையும் இறக்கியருளினான். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்புக்கு பதிலளித்தவர்களில் நீங்களும் ஒருவராயிருந்தீர்கள். எனவே, (மக்காவைத் துறந்து அபிசீனியாவுக்கும், அதன்பின்னர் மதீனாவுக்குமாக) இரண்டு ஹிஜ்ரத்துகள் மேற்கொண்டீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதருடன் தோழமை கொண்டு அவர்களின் வழிமுறையைப் பார்த்திருக்கிறீர்கள். மக்களோ வலீத் இப்னு உக்பாவைப் பற்றி நிறையக் குறை பேசுகிறார்கள் (நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?)’ என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், ‘நீங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்க நான், ‘இல்லை. ஆனால், திரைக்கப்பால் இருக்கும் கன்னிப் பெண்களிடம் (கூட) அல்லாஹ்வின் தூதருடைய கல்வி சென்றடைந்து கொண்டிருக்கும் (போது, அந்த) அளவு (கல்வி) என்னிடமும் வந்து சேர்ந்துள்ளது (குறித்து வியப்பில்லை.)’ என்று பதில் சொன்னேன்.
அதற்கு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு, ‘அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின் கூறுகிறேன். அல்லாஹ், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி வைத்தான். அப்போது, அல்லாஹ்வின் அழைப்புக்கும் அல்லாஹ்வின் தூதருடைய அழைப்புக்கும் பதிலளித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். மேலும், அவர்கள் எ(ந்த வேதத்)தைக் கொடுத்தனுப்பப்பட்டார்களோ அதை நான் நம்பி ஏற்றுக் கொண்டேன். நான் இரண்டு ஹிஜ்ரத்துத்துகளை மேற்கொண்டேன். – நீங்கள் சொன்னதைப் போல் – நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தோழமை கொண்டேன்; அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். எனவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மரணிக்கச் செய்யும் வரை நான் அவர்களுக்கு மாறு செய்யவுமில்லை; அவர்களை ஏமாற்றவுமில்லை.
பிறகு அபூ பக்ர் அவர்களிடமும் அதைப் போன்றே (நடந்து கொண்டேன்) பிறகு உமர் அவர்களிடமும் அதைப் போன்றே (நடந்து கொண்டேன்.) பிறகு நான் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டேன். எனவே, அவர்களுக்கிருந்தது போன்ற அதே உரிமை எனக்கில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (உங்களுக்கும் அதே போன்ற உரிமை இருக்கிறது)’ என்று சொன்னேன். அவர்கள், ‘அப்படியென்றால் உங்களைக் குறித்து எனக்கு எட்டுகிற (என்னைக் குறை கூறும்) இந்தப் பேச்சுகளெல்லாம் என்ன? நீங்கள் வலீத் இப்னு உக்பா விஷயமாக சொன்னவற்றில் விரைவில் இறைவன் நாடினால் சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்’ என்று கூறினார்கள்.
பிறகு அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து வலீத் இப்னு உக்பாவுக்கு (எதிராக சாட்சிகள் கிடைத்தால் அவருக்கு) கசையடிகள் கொடுக்கும் படி உத்தரவிட்டார்கள். அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் வலீதுக்கு எண்பது கசையடிகள் அடித்தார்கள். (அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னி கியார் ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஆதாரம்: புகாரி 3696)
கூபாவாசிகளே உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கூடுதலாக விமரிசித்தவர்கள். இஸ்லாமிய வரலாற்றைப் பார்ப்போமாயின் பெரும்பாலான வழிகேடுகளும், பித்அத்களும் கூபாவில்தான் உருவாகியிருக்கிறன. ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை கூபாவுக்கு வருமாறு அழைத்து, அவர் வரும் வழியில் யஸீதுடைய படை அவரோடு யுத்தம் செய்து அவரைக் கொலையும் செய்தது. ஆனால் அவரை அழைத்த கூபா வாசிகள் யாரும் அவருக்கு உதவவில்லை. இதைப் போன்றுதான் ஸஃதிப்னு அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் அவர் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று கூபாவாசிகள் குற்றம் சாட்டினர்.
இவ்வாறு எதிலும் திருப்தியடையாதவர்களும், எதிலும் குறை காண்பவர்களாகவும் அவர்கள் இருந்தனர். சுருக்கமாகச் சொல்வதாயின் ‘குழப்பங்களின் தாயகம்’ என்று கூபாவுக்குச் சொல்லலாம். இந்தப் பிரதேசத்தில்தான் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களால் நியமிக்கப்பட்ட ‘வலீத்’ என்பவர் தொழுவித்தார். மது அருந்துபவரை உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சியில் அமர்த்தவில்லை. அவர்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்டவர் மது அருந்தினார் என்பதுதான் நடைபெற்றதாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனக்கெதிராக வந்த விமரிசனத்தைத் தட்டிக்கழிக்காமல் ஏற்றுக் கொண்டு, முறைப்படி அதற்குத்தக்க பதிலை வழங்கியதும் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறந்த அணுகுமுறைக்கு நல்லதொரு சான்றாகவுள்ளது.
ஆனால் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நயவஞ்சகர்களினால் பிண்ணப்பட்ட உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கெதிரான இந்த சதிவலையில் சில நபித்தோழர்களும் சிக்கினார்கள் என்பதுதான். இந்நபித் தோழர்கள் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கவில்லையென்றாலும் நயவஞ்சகர்களினால் கட்டவிழ்த்து விடப்பட்ட உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீதான அபாண்டங்களை நம்பினார்கள் எனலாம். இஸ்லாமிய கிலாபத் துண்டாடப்படுவதற்கும், நூற்றுக்கணக்கான உயிர்கள் போவதற்கும் காரணமாகவிருந்தவர்கள் நயவஞ்சகர்களே என்பதை ஜமல் யுத்தம் போன்ற சம்பவங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இதே காரணிதான் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் விவகாரத்திலும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது. உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த அந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது நபியவர்களோடிருந்த ஒர் உத்தமருக்கா இத்தகைய கோர நிகழ்வுகள் சம்பவித்தன என்ற கவலை உள்ளத்தை வாட்டுகின்றது. உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முற்றுகை பற்றியும், அந்நேரத்தில் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள், கிளர்ச்சியாளர்களின் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொன்னார்கள் போன்ற அனைத்தையும் கீழ்வரும் செய்தி விவரிக்கின்றது
இன்ஷா அல்லாஹ், தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக