இரண்டு வகை மனிதர்கள்
அகிலத்தைப் படைத்து பரிபாலித்து அதில் மனிதனை சிறந்த படைப்பாகப் படைத்து அவனுக்கு சிந்திக்கின்ற தன்மையையும் அல்லாஹ் அருளியுள்ளான். மனிதன் தன் சுயதேவைகளுக்கு சிந்திக்கின்ற அளவை விட அதிகம் மறுமையைப்பற்றிச் சிந்திக்கக் கடமைப்பட்டவனாக இருக்கின்றான்.
இறை வேதத்தை மறுத்து அதற்கு மாறு செய்பவர்களுக்கும், அவ்வேதத்தை நம்பி அதன்படி செயல்படுபவர்களுக்கும், சிந்தனை என்ற கருத்துப்படிவத்தின் கீழ் இறைவன் மனிதனை இருவேறு தன்மைகளைக் கொண்டு வேறுபடுத்திக் காட்டுகின்றான்...
﴿مَثَلُ الْفَرِيقَيْنِ كَالْأَعْمَى وَالْأَصَمِّ وَالْبَصِيرِ وَالسَّمِيعِ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا أَفَلَا تَذَكَّرُونَ﴾இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம் (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும் (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர், இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (11:24)
சிந்திக்கும் திறன் கொண்டவர்களை அல்லாஹ் பார்வைத்திறன் கொண்டவர்கள் என்றும் நல்ல செவிப்புலனுடையவர்கள் என்றும் கூறுகின்றான். சிந்திக்காத மனிதனை அல்லாஹ் பார்வையிருந்தும் அவன் குருடனைப்போல மற்றும் செவிகள் இருந்தும் அவன் செவிடனைப்போல என்று சிந்திக்காதவர்களை அல்லாஹ் தாழ்மைப்படுத்திக் கூறுகின்றான். மனிதன் படைப்பால் ஒன்றுபட்டாலும் அவனுடைய செயல்களால் வேறுபடுகின்றான்.
உயர்வுக்கு காரணம் சிந்தனையேஉதாரணமாக எடுத்துக் கொண்டோமானால் நன்கு கற்றறிந்த பலர் இன்று உயர் பதவிகளிலும்,பொறுப்புகளிலும் இருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரம் வசதி வாய்ப்புகளேடு அமைத்துக் கொள்கிறார்கள். இன்னும் பலர் சாதாரண வேலைகள் செய்தே தன் வாழ்க்கைத் தரத்தை அமைத்துக் கொள்கின்றனர். இந்த இரு பிரிவினருக்கிடையே உள்ள வேறுபாடு முதல் தரத்தினர் சிந்தனை என்பதை மூலதனமாகப் பயன்படுத்தியவர்கள். இரண்டாம் தரத்தினர் உடலுழைப்பு மட்டுமே மூலதனமாகப் பயன் படுத்தியவர்கள்.
படித்தால் முன்னுக்கு வரலாம் என்ற சிந்தனை செய்து பொழுது போக்கு விசயங்களில் கட்டுப்பாடு வைத்து கண்விழித்து படித்து முன்னுக்கு வந்தார் முதலாமவர். இரண்டாம் தரத்தினர் படிப்பின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு பற்றி சிந்திக்காத காரணத்தால் பின்னாலில் பின்னுக்கு தள்ளப்பட்டார்.
படிக்கின்ற பருவம் மீண்டும் வரப்போவதில்லை. அதே போல மரணம் வந்தபிறகு கால சக்கரம் பின்னோக்கி சுழலப் போவதில்லை. நஷ்டமடைந்தவன் அவனது நஷ்டத்திற்கு ஈடுகொடுக்க அவனது பொன்னும் பொருளும் பயன்தராத மறுமை நாள் வருவதற்கு முன் மறுமை இலாபத்திற்காகவும் (ஈடேற்றத்திற்காக)சிந்திக்க வேண்டும்.
மறுமை உயர்வுக்கும் சிந்தனை அவசியமானதே
இம்மைக்காகச் சிந்திக்கின்ற மனிதன் மறுமைக்காகச் சிந்திக்க வேண்டாமா? இந்தக் குர்ஆனை சிந்திக்க வேண்டாமா? இறைக்கட்டளைகளை ஆராய்ந்து ஏற்றுச் செயல்பட வேண்டாமா? என்று அல்லாஹ் கூறுகின்றான்:
﴿ أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا﴾அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82)
அல்லாஹ் தன்னையே வணங்கவேண்டும் என்பதற்கு தன்னுடைய வல்லமைகளைச் சுட்டிக்காட்டி சிந்திக்கச் சொல்கின்றான்.
﴿وَهُوَ الَّذِي مَدَّ الْأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ وَأَنْهَارًا وَمِنْ كُلِّ الثَّمَرَاتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ اثْنَيْنِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ﴾மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும்,ஆறுகளையும் உண்டாக்கினான். இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான் அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (13:3)
﴿أَفَمَنْ يَخْلُقُ كَمَنْ لَا يَخْلُقُ أَفَلَا تَذَكَّرُونَ﴾
(அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத ஒருவனைப் போன்றவனா? நீங்கள்(இதை) சிந்திக்க மாட்டீர்களா? (16:17)
மனிதன் சிந்தித்து நல்லறிவு பெறும் பொருட்டே அல்லாஹ் இந்த உலகத்தை அலங்காரமாகவும் சோதனைக் களமாகவும் ஆக்கியுள்ளான்.
﴿ إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا﴾மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம். (18:7)
இந்த உலகத்தில் இன்பம் என்று எதை நினைக்கின்றோமோ அவையெல்லாம் அற்ப இன்பங்களாகவே இருக்கின்றன. எவையெல்லாம் சுகம் என்று நினைக்கின்றோமோ அவையெல்லாம் மாயையாகத்தான் இருக்கின்றன. அவர்களின் சிந்தனையை பொருத்து அவைகள் அமைகின்றன.
மனிதர்களின் சிந்தனைகள்
புகைப்பிடிக்கின்ற ஒருவனுக்கு Last puff is a lady's first kiss (கடைசியில் இழுக்கக் கூடியது சிகரெட்டின் புகை பெண்ணின் முதல் முத்தம் போல இன்பம்) என்ற சிந்தனை தோன்றுகின்றது. புகையின் தீமையைப் பற்றி அறிந்தவனுக்கு ளுஅழமiபெ ளை iதெரசநைள வழ ழரச hநயடவா (புகைப்பது உடல் நலத்திற்கு கேடு) என்ற கண்ணோட்டம்தான் தெரிகின்றது.
மதுக்குப்பியில் மது அருந்துவது உடலுக்கும், வீட்டுக்கும் மற்றும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இவன் சிந்தனை அதன் பக்கம் சிந்திக்க மறந்தது ஏனோ?சொர்க்கத்தில் இன்பம் தரக்கூடிய தேன் ஆற்றை மறக்கச் செய்த சிந்தனை எதுவோ? விபச்சார விடுதியின் வாசலிலே ஒருவன் எழுதினான் சொர்க்கத்திற்கு வழி என்று. சொர்க்கக் கன்னியர்கள் ஹுருல் ஈன்களைப் பற்றிச் சிந்தனை செய்தவன் சுடுகாட்டிற்கு வழி என்று மாற்றியமைத்தானாம்.
இந்தச் சிந்தனை என்பது நாம் இருவேறு கோணங்களில் பயன்படுத்தலாம். அதில் ஒன்று இறைவனின் திருப்பொருத்தத்தை அடைவது. அதை விடுத்து இம்மையில் கிடைக்கும் அற்பச் சுகத்திற்காக மட்டும் நம் சிந்தனையைப் பயன்படுத்தினால் இது இங்கேயே நிறைவேற்றப்படும்.
﴿مَنْ كَانَ يُرِيدُ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لَا يُبْخَسُونَ﴾எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம் அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். (11:15)
இஸ்லாமிய சட்டங்களைப் பற்றி அறியாத முஸ்லிம்கள் வட்டி வாங்கும் போது ஜகாத் என்ற சிந்தனையை மறந்து விடுகிறார்கள். வரதட்சணை வாங்கும் போது மஹர் என்ற சிந்தனையை மறந்து விடுகிறார்கள்.நபிவழிகளை மறந்து பித்அத்தின் பக்கம் சரிகிறார்கள். பெரியார்கள், முரீது சேக்குகள் பின் செல்லும் இவர்கள் இறைபோதனைகளையும் நபியின் வழிகாட்டுதல்களையும் மறந்து விடுகிறார்கள். "சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவரே நீயும் சீர் தூக்கி பார்க்கனும் நெஞ்சுக்குள்ளே" என்ற கவிதை வரிகளை கேட்கும் போது "ஏந்தல் ரசூலுல்லாஹ் சொன்ன சொல்லான இசை ஹராம்" என்பதை சிந்திக்க மறந்து விடுகிறார்கள்.
﴿قَدْ خَسِرَ الَّذِينَ كَذَّبُوا بِلِقَاءِ اللَّهِ حَتَّى إِذَا جَاءَتْهُمْ السَّاعَةُ بَغْتَةً قَالُوا يَاحَسْرَتَنَا عَلَى مَا فَرَّطْنَا فِيهَا وَهُمْ يَحْمِلُونَ أَوْزَارَهُمْ عَلَى ظُهُورِهِمْ أَلَا سَاءَ مَا يَزِرُونَ﴾
ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள் அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். (6:31)சிந்திக்கவில்லை என்றால் இவ்வுலகத்திலும் கேடுதான்!
மனிதர்களில் ஒரு பிரிவினர் எந்நேரமும் முஸ்லிம்களை கருவருப்பதே நோக்கமாகக் கொண்டுள்ளனர்.இஸ்லாம் சமுதாயம் வளர்ச்சியடைந்து விடக்கூடாது என்பதில் மும்முனைப்புடன் இருக்கின்றனர்.முஸ்லிம்களின் இந்த சிந்திக்காத தன்மைப் பயன்படுத்தியே அவர்கள் முஸ்லிம் நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். சிந்திக்கின்ற மக்கள் நாமும் நன்றாக கல்வி கற்கவேண்டும், புதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்யவேண்டும், பொருளாதாரம் பாதுகாப்பு போன்ற விசயங்களில் தன்னிறைவு அடையவேண்டும் என்று சிந்தனை செய்து உழைப்பார்கள் தவிர தூங்கிக் கொண்டும் பொழுதுபோக்குகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.
﴿أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِي كُلِّ عَامٍ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ﴾ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வதுமில்லை (அது பற்றி)நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. (9:126)
சிந்தனையின் உதவியால் நற்பாதைகளை தேர்ந்தெடுங்கள்
அல்லாஹ் நமக்குக் கொடுத்திருக்கும் அருட்கொடைகளில் ஒன்று அறிவு. மறுமையில் இதை எவ்வாறு பயன்படுத்தினோம் என்றும் வினவப்படுவோம். ஆகவே நாம் இந்த அறிவைக் கொண்டு அல்லாஹ்வின் கூற்றுக்கிணங்கி அவனின் பொருத்தத்தை பெற்றவர்களாக வாழ்ந்து வருகிறோமா? என்று சிந்தனை செய்து பார்க்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நமது வழிகளை திருத்திக் கொண்டு செய்த பாவத்திற்காக தவ்பா செய்து மீள முயற்சி செய்யவேண்டும்.
﴿وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ﴾(நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். (90:10)
ஏனென்றால், நற்காரியங்கள் எனும் சுவர்க்க பாதைகளையும் தீமைகள் எனும் நரகத்தின் பாதைகளையும் இறைவன் நமக்கு விளக்கி காட்டிவிட்டான்.
இறைவன் நம் அனைவரையும் ஈருளக வெற்றிகளைப் பெற நற்பாதைகளைத் தேர்ந்தெடுத்தவர்களாக ஆக்கி அருள்புரிவானாக! ஆமீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக