வணங்கத் தகுதியான ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
இஸ்லாத்தின் பார்வையில் அனைத்து வணக்க வழிபாடுகளையும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யவேண்டும். மனிதன் உள்ளத்தினால் செய்யக் கூடிய மிக முக்கியமான வணக்கங்களில் ஒன்றுதான் இறைவன் மீது தவக்குல் வைத்தல். இறைவனை சார்ந்திருத்தல் என்ற பொருளை உடையது. தவக்குல் என்பது அல்லாஹ்வை தனது உள்ளத்தினால் பூரணமாக உண்மைப்படுத்தி அதனை ஏற்றுக் கொண்டு அவனிடமே நமது தேவைகளை பொறுப்புச் சாட்டி அதற்குரிய காரணிகளை இனங்கண்டு செயல்படுத்துவதாகும்.
உதாரணமாக, விவசாயம் செய்கின்ற ஒருவர் தனக்கு சிறந்த முறையில் பயிர் கிடைக்கும் என்று மாத்திரம் இறைவன் பால் தவக்குல் (நம்பிக்கை) வைப்பது தவறாகும் மாறாக, தனக்கு சிறந்த பயிர் கிடைகும் என்ற உருதியான நம்பிக்கையுடன் இறைவன்பால் தவக்குல் வைத்து பொறுப்புச் சாட்டிவிட்டு அதற்குறிய காரணிகளாகிய பயிர் செய்கையை பராமரித்த்ல், சீர் படுத்தல், நீர்ப் பாய்ச்சல், கிருமிநாசிக்குரிய மருந்தடித்தல் இன்னும் பல காரணிகளை செய்வதன் மூலமே இறுதியில் சிறந்த விளைச்சல் அவனுக்கு கிட்டும். அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கின்ற ஒருவன் ஏனய விஷயங்களையும் இது போன்றே மேற்கொள்ள வேண்டும். தவக்குலை பற்றி திருக்குர் ஆனில் பல இடங்களில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.“…சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்” (03:159)
“நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்” (08:64)
“எனவே மரிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்” (25:58)
“எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் – திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்” (65:3)
மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் அனைத்துமே இறைவன் மீது தவக்குல் வைக்க வேண்டும் என்பதனை திட்டவட்டமாக தெளிவு படுத்துகின்றன.
நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்வில் இறைவனை முழுக்க முழுக்க நம்பியிருந்தாலும் தான் வைத்திருந்த அந்த நம்பிக்கையை இறைவன்பால் பொறுப்புச் சாட்டி இருந்தாலும் அதற்குறிய காரணிகளை இனங்கண்டு அவற்றை செய்து வந்தார்கள். உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தின் போது தன்னை இறைவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை இருந்தாலும் கூட இணைவைப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்குறிய காரணிகளை இனங்கண்டு செயல்படுதினார்கள். அவர்கள் மக்காவிலிருந்து மதீனவுக்கு செல்லக்கூடிய திசை வடக்கு பக்கமாகும்.
ஆனாலும் இணைவைப்பாளர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக ஒரு யூதனை பாலைவன வழிகாட்டியாக கூலிக்கு அமர்த்திக் கொண்டு, செல்ல வேண்டிய திசையை மாற்றி தெற்கு திசையாக மதீனாவை சென்றடைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஏன் தெற்கு திசையை தேர்ந்தெடுக்க வேண்டும்? யூதன் ஒருவனை ஏன் பாலைவன வழிகாட்டியாக ஏன் கூலிக்கு அமர்த்த வேண்டும்? இவை அனைத்தும் நாம் இறைவனை சார்ந்து இருப்பதுடன் சார்ந்திருக்கும் செயலில் வெற்றிக்குரிய காரணிகளை இனம்கண்டு செயல்பட வேண்டும் என்பதனை தெளிவு படுத்துகின்றது.
இதே போன்று தான் ஏனய விஷயங்களுக்கும் உதாரணமாகும். இவ்வாறு சிறந்த முறையில் இறைவனை சார்ந்திருந்து நமது காரியங்களுக்குரிய காராணிகளை இனம் கண்டு செயல்படுத்தினால் நிச்சயாமாக அல்லாஹ் நமக்கு அவற்றை எளிதாக்குவான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நீங்கள் உண்மையான முறையில் இறைவனை நம்பியிருந்தால், (தவக்குல் வைத்தால்) காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் எவ்வாறு ஒரு பறவை தனது கூண்டிற்கு திரும்புகின்றதோ அதற்கு உணவளிப்பதை போன்று உங்களுக்கும் உணவளிப்பான்” என்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், திரிமிதி)
ஒரு உடம்புக்கு எவ்வாறு தலை அவசியமோ அதே போன்று இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றிருக்கின்ற ஒருவனுக்கு அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்பது அவசியமாகும். தவக்குல் மிகப் பெரிய வணக்கங்களில் ஒன்றாகும். இதனாலேயே ஏனைய மார்க்கத்தை ஏற்றிருப்பவர்களை விடவும் முஸ்லிம்களை அல்லாஹ் பிரித்து காட்டுகின்றான். எவனொருவன் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கவில்லையோ அவன் இறை நிராகரிப்பாளனாக மாறிவிடுகின்றான். எவனொருவன் அல்லாஹ்வுடன் சேர்த்து இன்னொருவரை தவக்குல் வைக்கின்றானோ அவன் இணைவைப்பாளனாக மாறுகின்றான். எவரொருவர் அல்லாஹ்வின் மீது மட்டும் தவக்குல் வைத்து அவனையே சார்ந்து இருக்கின்றாரோ அவன் ஏகத்துவவாதியாவான். அவனையே அல்லாஹ் விரும்புகின்றான்; பொருந்திக் கொள்கின்றான். ஏனெனில் இஸ்லாதின் அடிப்படை வணக்க வழிமுறையை அவன் செயல் படுத்துபவனாவான்.
தவக்குலில் இரண்டு விஷயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன. அவைகளாவன:
- அல்லாஹ்வின் மீது மாத்திரமே தவக்குல் வைத்தல்.
- தவக்குல் வைத்த விஷயத்தின் கரணியை இனம் கண்டு செயல்படுத்தல்..
இதனடிப்படையில் இறைவன் மீது மாத்திரமே தவக்குல் வைக்க வேண்டும். ஒருவன் ஒரு காரியத்தை செய்கின்ற போது அல்லாஹ் அல்லாதவர்களை நம்பிக்கை வைத்து அவர்களையே சார்ந்து இருந்தால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவனாக மாறிவிடுகின்றான்.
ஜாஹிலியா கால அரேபியர்கள் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது தங்களது தேவைகளை பொறுப்புச் சாட்டினார்கள்; நம்பிக்கை வைத்திருந்தார்கள். சிலைகளிடத்திலும், கற்களிடத்திலும், மரங்களிடத்திலும் தங்களது தேவைகளை முறைப்பாடு செய்தார்கள். அவற்றையே நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவைகள் தங்களது தேவைகளை நிறைவேற்றும் என்றும், தங்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகளை தடுத்து நன்மைகளை நிறைவேற்றித்தரும் என்று உறுதியாக நம்பியிருந்தார்கள். இன்னும் சிலர் அவற்றுடன் சேர்த்து அல்லாஹ்வையும் நம்பியிருந்தார்கள். அவைகள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். இதனாலேயே இவர்கள் அனைவருமே அல்லாஹ்வுக்கு இணைவைப்பாளர்களாக மாறிவிட்டார்கள்.
இதே போன்றூதான் தற்காலத்தில் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்கின்றவர்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவ்லியாக்களையும் தங்கள்மார்களையும், ஷேக்மார்களையும் முழுமையாக நம்பிக்கை வைத்து அவர்கள் தங்களது தேவைகளை அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகின்றனர். அல்லது ஒரு நோயை, தீமையை நிறைவேற்றுவதற்காக இஸும் அஸ்மாக்களையும், தாயத்தையும், மந்திரத்தையும், குறிபார்பவரையும் தேடி தங்களது காரியங்களை அவற்றில் முழுமையாக பொறுப்புச் சாட்டி நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். அல்லது இவற்றுடன் சேர்த்து அல்லாஹ்வையும் நம்பிக்கை வைப்பதன் மீலம் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றார்கள். இதனாலேயே அல்லாஹ் இறைவிசுவாசிக்கு நிபந்தனையாக தவக்குல் வைப்பதை சுட்டிக் காட்டி அல்லாஹ்வின் மீது மாத்திரம் தவக்குல் வைத்தால் தான் உண்மையான இறைவிசுவாசி என்பதனை திட்டவட்டமாக தனது இறைவாக்கில் உறுதிப்படுத்துகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” (5:23)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக