டாக்டர் ஷர்மிளா
வீட்டுக்கு அடங்காத ஆண்களை நோக்கி வரும் சொல் அம்பு ''ஒரு கால் கட்டு போட்டால்தான் சரிப்பட்டுவருவான்''. 'கால்கட்டு' என்பது திருமணத்தைத்தான் குறிக்கும் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.திருமணம் என்பது எல்லோரது வாழ்க்கையிலும் நிகழும் தித்திக்கும் திருப்பு முனை. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நம் முன்னோர்கள் சொல்லியிருப்பதற்கு நேரிடையாக அர்த்தப்படுத்திக்கொள்ளலாமல் பார்த்தால் திருமணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தத்தான் இப்படி சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரியவரும். அண்மை காலங்களில் ரொக்கத்தில் திருமணங்கள் நிச்சயிக்கப்படுவதனால் பல குடும்பங்கள் சீரழிந்த கதையையும் நாமறிவோம்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திருமண உறவு இனிக்கவும் மணக்கவும் செய்ய வேண்டாமா? நேற்று வரை நீயாரோ, நான் யாரோ, என்றிருக்கும் இரண்டு உள்ளங்கள் திருமணம் என்கின்ற உறவு வளையத்துக்குள் நுழைந்து இன்று முதல் நீ வேறோ நான் வேறோ என்று வாழ்க்கையின் ஆத்திச்சூடியை ஆரம்பிக்கும் இவர்களின் இல்லற பாடம் ஆயுளின் அந்திவரை வாசம் வீச வேண்டாமா? வீச வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும்.
பெரிய வித்தை ஒன்றும் இல்லை. எந்த பல்கலைக்கழகங்களிலும் சென்று பாடம் படிக்க தேவையில்லை. வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி... என்கிற அடிப்படையில் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் கதைதான் நமக்கு பால பாடம். இல்லறம் சிறக்க மணமக்களுக்கு எளிய சில ஆலோசனைகள். இதில் இரண்டு விதமான ஆலோசனைகள் அவசியம் ஆனது. ஒன்று மனோரீதியானது இன்னொன்று உடல் ரீதியானது.கருத்து ஒற்றுமை
தம்பதிகள் இரு வரும் கருத்தொருமித்த வர்களாக இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டுதான் நம் பெரியவர்கள் ஈருடல் ஓருயிர் என்றார்கள். வாழ்க்கை யெனும் ஒரு வழிப்பாதையில் இருவர் பயணிக்கும்போது ஒருமித்த கருத்து அமைந்திருக்கு மெனில் வாழ்க்கை இனிக்கும். அன்பு மணக்கும். கருத்து ஒற்றுமை நிகழமணமான புதிதில் தம்பதியர் இருவரும் மனம் விட்டு பேசவேண்டும். ஒருவர் பேச்சை இன்னொருவர் கேட்க வேண்டும். சுதந்திரமாக பேசருவர் இன்னொருவரை அனுமதிக்க வேண்டும்.
புரிந்துகொள்ளல் அவசியம்
மனைவிக்கு தெரியும்படியாக அவளை புரீந்துகொள்ள முயற்சிக்காதே என்கிறார் ஓஸோ ரஜனீஷ். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. வாழ்க்கை சங்கீதம் பிசிறின்றி, அதி பேதமின்றி, அபஸ்வரமாக அரங்கேறாமல், அதிசுத்த மாக வெளிப்பட கணவன் மனைவி பரஸ்பரம் புரீந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
உணர்ச்சிகளை மதியுங்கள்
நாம் எப்படி உணர்வுகள் கொண்டிருக்கின்றோமோ, அதே உணர்வு, தனது வாழ்க்கை துணைக்கும் தனது வாழ்க்கை துணைக்கும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் இன்பத்திலும் துன்பத்திலும் சமமாக பங்கேற்க இயலும். உன் புன்னகை என் இதழ்களிலும் தொற்றும், என் கண்ணீர் தீ உன் விழியிலும் பற்றும் என்பதுதான் அன்பான தம்பதியரின் மன இலக்கணம். இதனால் அன்பின் ஆழம் இன்னும் இன்னும் வேர்விட்டு பாயும்.
நம்பிக்கை அவசியம்
இன்றைய மணமக்கள்தான் நாளைய தம்பதிகள். இருவரும் இல்லறம் தொடங்கிய நாள் தொட்டு அன்பின் அடிப்படையில் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்வது அவசியம். பல தம்பதிகளிடம் நடைபெறும் சண்டைகளில் பிரதானமாக பரஸ்பரம், நம்பிக்கையின்மை இல்லாததை காண முடியும். இந்த பரஸ்பர நம்பிக்கை வீண் சந்தேகத்தை விரட்டி அடிக்கும்.
பாராட்டுக்கள்
கணவனோ, மனைவியோ, ஒருவர் மீதான இன்னொருவரின் பாராட்டுதல்கள், விமர்சனங்கள், ஊக்கமளித்தல் அவசியம் ஆகும். இதன் காரணமாக ஒருவரிடம் இருக்கும் சின்ன சின்ன குறைகளை ஜீரணித்து கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படும். பாராட்டை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாதல்லவா. அதே சமயம் அதிகப்படியான பாராட்டும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தலாம் எச்சரிக்கை.
ஆலோசியுங்கள்
கணவன்தான் ஆண், தனக்கு மட்டும்தான் பிரச்சினை என்கிற ரீதியில் செயல்பட கூடாது. மனைவியும் அற்பதனமான விசயங்களை தனது பிரச்சினையாக்கி, அதற்கு கணவன் செவிமடுக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. ஒருவர் பிரச்சினையை இன்னொரு வர் பொறுமையாக கேட்க வேண்டும். விவாதிக்க வேண்டும். சரியான முடிவை நோக்கி ஆலோசிக்க வேண்டும்.
அழகுணர்ச்சி அவசியம்
கணவனோ, மனைவியோ அழகுணர்ச்சி அவசியம். பெரும்பாலான தம்பதிகள் திருமணமான புதிதில் பாதுகாக்கும் தங்கள் அழகை, உடம்பை நாளடைவில் அக்கறையின்றி விட்டுவிடுவார்கள். இது தவறு. தங்கள் உடம்பை, அழகை பேணி பாதுகாப்பது தம்பதியருக்கு இனிமையான நிமிசங்களையும், நல்ல எண்ணங்களையும் உருவாக்கி தரும்.
பாலியல் உணர்வுகள்
இயல்பாக இருக்கும் பாலியல் உணர்வுகளை பகிர்ந்துகொள்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக மட்டுமே திருமணத்தை கருதாமல், பரஸ்பரம், அன்பையும், பரிவையும் காட்டும்படியான இணக்கத்துடன் தம்பதிகளிடையே பாலியல் உணர்வுகள் வெளிப்படவேண்டும்.
ஆரம்பத்தில் ஆர்டீசியன் ஊற்றாய் பெருக்கெடுக்கும் செக்ஸுவல் உணர்வுகளும், பரிமாற்றங்களும் காலப்போக்கில் குறைந்துபோய்விடுவதும்கூட பல தம்பதிகளிடைய நிகழ்கிறது. இப்படி அல்லாமல் வாழ்க்கையின் அடிநாதமாக செக்ஸ் உறவு தொடர்ந்து அமைந்திருக்கும் மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
தம்பதியர்களுக்கு இடையேயான செக்ஸ் உறவு ஒப்பந்த அடிப்படையில் அமைந்திருக்கக்கூடாது. அத்தகைய பழக்கத்தையும் வளர்த்துக்கொள்வது தவறு. அதாவது, இதை வாங்கித்தாருங்கள், இதை நிறைவேற்றுங்கள், இதை பூர்த்தி செய்யுங்கள் என்று வர்த்தக தொணியில் செக்ஸ் பரிவர்த்தனை அமையக்கூடாது. வியாபாரத்திற்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கும். வாழ்க்கைக்கு பொருந்தாது. இத்தகைய மனச் சிக்கல்களை வளர்த்துக்கொண்டு இல்லற சுகம் காண்பதில் இடையூறுகளை அனுபவிக்க வேண்டாம்.
செக்ஸ் விஷயத்தில் ஒருவருக் கொருவர் வற்புறுத்தல்களோ, கட்டாயப்படுத்தலோ கூடாது. இதனால் சந்தோஷத்திற்கு இடைஞ்சல் ஏற்படலாம். ஒருவர் இன்னொருவர் விருப்பத்திற்கு இணங்காமல் போகலாம். ஆரம்பத்திலேயே இத்தகைய எண்ணங்களை இருவரும் தவிர்ப்பது நல்லது.உணர்வுகளை மதிப்பது, செக்ஸ் விஷயத்திலும் நடைபெற வேண்டும். உணர்வுகளை மதிக்காத தம்பதிகளிடையே பரஸ்பர செக்ஸ் பரிவர்த்தணை திருப்திகரமாக இருப்பதில்லை. இருவருக்கும் பொதுவான திருப்தி இதனால் தடைபடும்.
கணவன்-மனைவி இருவரும் செக்ஸ் விருப்பங்களை, தேவைகளை , சந்தேகங்களை விவாதித்து, தங்களுக்குள் செக்ஸ் அறியாமையை அகற்றிக்கொள்ள வேண்டும். இது அவர்களின் பாலியல் பரிவர்த்தணைக்கு மேலும் மெருகூட்டலாக அமையும். தகுந்த பாலியல் மருத்துவரை கலந்தாலோசிப்பதில்கூட தப்பில்லை.
புதுமண தம்பதிகள் திருமணத்திற்கு முன் மருத்துவ ஆலோகனை பெறுதலோ, பரிசோதனை செய்து கொள்வதோ தேவையற்ற ஒன்றாகத்தான் கருதப்படும். மிகவும் நெருங்கிய உறவில் மணமுடிப்பதை தவிர்ப்பது நல்லது.
திருமணத்தன்றே இல்லற சுகம் காணவேண்டும் என்பதில்லை. தம்பதியரின் விருப்பமே இதில் முக்கிமானது. முதல்நாள் பாலியல் உறவில் சங்கடங்களோ, கஷ்டமோ இருந்தால் கலங்க வேண்டாம். இருக்கவே இருக்கிறது இனிமையான ஒரு நாள். எல்லோருக்குமே சத்தான உணவு அவசியம்தான். மணமக்களும் இதனை கைகொள்வதில் தப்பில்லை. நல்ல மனம் மட்டுமல்ல நல்ல உடம்பும் அவசியம். உடம்பை கட்டுகோப்புடன் வைத்து அதனை களைந்தாலே போதும். நோயின்றி வாழ ஆரம்பித்து விடலாம்.
போட்டிகள், வாழ்க்கையில் தேவையற்ற எண்ணங்களை வகுத்துக்கொண்டு அதன்படி செயல்படுதல், தகுதி மீறி வளர்ச்சி பெற துடித்தல், பணத்தின் மீதான ஆசை, பதவி மோகங்கள், புகழ் வெறி போன்றவைதான் மனிதனை இன்று ஆளாய் பறக்க வைக்கின்றன. இப்படியான சூழ்நிலையை களைந்து மனிதன் வாழ முற்பட்டாலே போதும். நிச்சயம் ஆரோக்யமுடன் வாழலாம்.
கடைசி நிமிடத்தில் ஆர்பரிக்க வேண்டிய கட்டாயம், எதையும் ஒத்திப்போடும் மனப் பான்மைகூட மனிதனை அவசர சக்திக்கு உள்ளாக்க நேரிடும். இப்படியான பழக்க வழக்கங்களை தவிருங்கள். அவசரம் உங்களை விட்டு ஓடியே போய் விடும்.
அடுத்து-அன்றைய பணியை அன்றே முடிக்க கற்றுக்கொள்ளுதல், நேரந்தவறாமை, செய்ய வேண்டிய பணிகளை மட்டும் மேற்கொள்ளுதல் போன்றவைகளாலும் அவசர கதியான வாழ்க்கை முறையை மாற்றலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக-போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள். எனவே பொருளாதார விசயத்தில் நிறைவு பெறும் வகையில் பேராசையின்றி வாழுங்கள்.
– டாக்டர் ஷர்மிளா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக