திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் மகத்துவம் வாய்ந்தது என்று சொல்வதைவிட அதன் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு எழுத்தும்கூட மகத்துவம் மிக்கது என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தம். திருக்குர்ஆனில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் பத்து நன்மை உண்டு என்று சொன்ன நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீஃப் லாம் மீம் என்பதில் அலீஃபுக்கு பத்து நன்மை, லாமுக்கு பத்து நன்மை, மீமுக்கு பத்து நன்மை. என்றுரைத்த பின்னும் சந்தேகமா?
ஓதுவதற்கே இவ்வளவு நன்மை எனில் அதன் வசனங்களை சிந்திப்பவர்களுக்கு எவ்வளவு நன்மை; சிந்தித்து அதன்படி செயல்படுகின்றவர்களுக்கு எவ்வளவு நன்மை என்பதை ஒருகணம் எண்ணிப்பார்ப்போமானால் ''திருக்குர்ஆனை ஓதாமல், சிந்திக்காமல் கழியும் ஒவ்வொரு நாளும் வீணான நாளே'' என்பதை எவரும் சொல்லாமலே விளங்கிக்கொள்ளலாம்.
மௌத் விழுந்துவிட்டால் உடனே பள்ளிவாசலுக்கு குர்ஆன் ஷரீஃபை வாங்கி கொடுப்பதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக பலர் திருப்தி பட்டுக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் பத்து குர்ஆனை வாங்கி வைப்பதைவிட, அவர்களே ஒரு தடைவயாவது திருக்குர்ஆனை ஓதுவது அதிக நன்மையை ஈட்டித்தரும் என்று சிந்திக்க வேண்டாமா?
இன்னொரு விஷயத்தையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும். யாஸீன், தபாரக் இன்னும் சில குறிப்பிட்ட சூராக்களை சரளமாக, ஏன் மனப்பாடமாகக்கூட ஓதத்தெரிந்த பலருக்கு குர்ஆனின் மற்ற சூராக்களை சரளமாக ஓதத் தெரியாது. காரணம் இந்த சூராக்களின் முக்கித்துவத்தை கருதி இதை மட்டுமே ஓதி மற்றவைகளை ஓதாமல் விட்டு விடுவதால்; அவைகளை ஓதும்போது தடுமாற்றம் ஏற்படுகிறது.திருக்குர்ஆனின் ஒவ்வொரு சூராவும் தனித்தன்மை வாய்ந்ததுதான். ஆகவே முழுமையான குர்ஆனை ஓதுவதற்கு ஒவ்வொருவரும் முயல வேண்டும்.
அல்லாஹ்வின் அருள்மொழிகள்
o அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன்: 2:261)o நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கமாட்டாது. இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் 3:10)
o பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்;ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்;. அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு. (அல்குர்ஆன் 3:14)
o நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்;. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்;. எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல்குர்ஆன் 3:19)
o (நபியே!) நீர் கூறுவீராக: ''அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்;. இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்;. நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்;. நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்;.நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன. அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய். (அல்குர்ஆன் 3:26)
o (நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்;. நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்;. மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்;. நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்;. மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய். (அல்குர்ஆன் 3:27)
o முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி(உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது. (அல்குர்ஆன் 3:28)
o (நபியே!) நீர் கூறும்; ''உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.'' (அல்குர்ஆன் 3:29)
o ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;. அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்;. இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 3:30)
o (நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 3:31)
o (நபியே! இன்னும்) நீர் கூறும்; ''அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் வழிப்படுங்கள்.'' ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் 3:32)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக