மெழுகுவர்த்தி...! - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

19 மார்ச், 2012

மெழுகுவர்த்தி...!


[ ஓர் உண்மைச்சம்பவத்தின் தழுவல் இக்கதை! ]
"நட்சத்திரங்கள் துயில் கொள்ள செல்லும் சாமத்து ராத்திரி...
ஐந்தாவது முறையாகவும் தன் நண்பிக்கு எழுதிய காயிதத்தை சரி பார்க்கிறாள் ருஷ்தா.
"எனதருமை தோழிக்கு... உன் கடிதம் கிடைத்தது... வாழ்வின் வசந்தமான திருமண வாழ்வில் நீ நுழையப்போகிறாய்... திருமணம் என்பது மார்க்கத்தில் பாதி என்று சொல்வார்கள். .. மரணம் மட்டும், அதற்குப் பின் சுவனத்திலும் உங்கள் காதலும், உறவும் தொடரட்டும் என பிரார்த்திக்கிறேன்.... " - வஸ்ஸலாம், உனதருமை நண்பி ருஷ்தா.
கவனமாக மடித்து, காகித உறையுள் இட்டு மேசையில் கிடந்த புத்தகத்திற்குள் பத்திரப் படுத்துகிறாள். தம்பி அய்யாஷ் நாளை கிளாஸ் போகும் போது, அவசியம் கொடுத்து அனுப்பச் சொல்ல வேண்டும். தன் மாவனெல்லை தோழியின் திருமணத்திற்கு வாழ்த்துக்கூறி எழுதிய கடிதம். நேரில் செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், குறைந்தது ஒரு கடிதமாவது எழுதாமல் எப்படி இருப்பது... எத்தனை ஆண்டு கால நீண்ட நெருங்கிய நட்பு.
கடிதத்தை புத்தகத்திற்குள் வைத்ததும், ஒரு நெடிய பெரு மூச்சி. கண்ணீர் ஊற்று இலேசாக கண்ணில் வட்டம் இட்டிருந்தது. கல்லூரி வாழ்வின் முடிவோடு தான் தொலைத்து விட்ட நட்புச் சொந்தங்களை நினைக்கையில் வெளிவரும் வழமையான பெருமூச்சிதான். ஆனாலும், அந்த பெருமூச்சிக்கும், கண்நீரிற்கும் பின்னால் இன்று இருந்தது நண்பிகளல்ல. அவள்தான். இது போன்ற கடிதங்கள் வாழ்த்துச் செய்திகளை சுமந்து தன்னை தேடி எப்போது வரும்...?
ருஷ்தா ... அந்த குடும்பத்தின் மூத்த பிள்ளை... பிறந்தாலும் மூத்த பிள்ளையாக பிறந்து விடக்கூடாது. அதிலும் வறுமை தலை விருத்து பேயாட்டம் ஆடும் குடும்பங்களில் பிறந்து விடவே கூடாது... இப்போது என்னவென்றால் அவள் தங்கச்சி ஹஸீனாவும் திருமண பந்தலுக்கு நிற்கிறாள்.
எத்தனையோ சம்பந்தங்கள்... எதுவும் சரிப்பட்டு வருவதாக இல்லை... ஒன்று அவர்கள் எதிர்பார்த்த சீதனமும், வாய்ப்பு வசதிகளும், வெள்ளை தோலும் ஒத்து வரவில்லை. அல்லது இவர்கள் பார்வையில் நல்ல பையனாக அமைய வில்லை. சல்லி மட்டும் போதுமா? அல்லா ரசூலுக்கு பயந்து ஈரான்டும் பாக்கோணுமே?
அவளது வயது பருவ பெண்களுக்கு உள்ள பயங்கள் அவளுக்கும் இருந்தன. ஒரு வேலை தனக்கு திருமண நடைபெறாமலேயே இருந்து விட்டால் என்ன செய்வது?... இப்படியே வெறுமையாய் சூரியன் உதித்து மறைவதை பார்த்துக்கொண்டே இருப்பதா?
விடியக்காலை ஒன்பது மணி இருக்கலாம்... இளம் வெயில், பச்சை போர்வை போர்த்தி வர்ணஜாலம் காட்டிக்கொண்டிருந்த மரங்களில் பட்டுத் தெளித்தது. ரயில் நிலையத்தில் நண்பனை பிரிந்து செல்ல தயங்கும் நண்பனை போல், வெயில் வந்த பிறகும் நகர மனமின்றி, அரை மனதோடு மெதுமாக நகர்ந்தது பனிக்கூட்டம்.
சூழவும் அரண்கள் போல் நிமிர்ந்து நிற்கும் மலைகள், அவற்றில் விரித்த பசுமை வர்ண கம்பளிகள், பெருக்கெடுத்தோடும் மகவெளி கங்கை... தெற்காசியாவின் Green Forest என்று இதனை பிரகடனப் படுத்தி இருப்பதாக யாரோ சொல்லக்கேட்ட ஞாபகம்... அது உண்மையோ, பொய்யோ அந்த தகுதிக்கு இந்த மலையக கிராமம் முற்றிலும் தகுதியானதுதான்.
ஸீனத்- இவள்தான் ருஷ்தாவின் தாய்- காலை உணவுக்குரிய தயாரிப்புகளை செய்து கொண்டு இருந்தாள். அவளது அடுப்பை போலவே, வயிறும் எரிந்து கொண்டுதான் இருந்தது... கல்யான வயசுல ரெண்டு கொமர வட்ச்சிட்டு எப்பிடி எறியாம ஈக்குற?
நேற்று வந்திருந்த வரனை சுற்றித் தான் ஸீனத்தின் சிந்தனை அலை பாய்ந்து கொண்டு இருந்தது. வந்தது ருஷ்தாவுக்கல்ல. தங்கச்சி ஹஸீனாவுக்கு. தங்கச்சிக்கு வரன் வருவது இது ஒன்றும் முதல் தடவை என்றில்லை. இதற்கு முன்னும் ஒன்றிரண்டு தடவை வந்தது. அதற்கு காரணம் ருஷ்தாவை விட ஹஸீனா கொஞ்சம் நிறமாக இருந்தது என்பதும் அவளுக்கு தெரியும். என்றாலும் இந்த முறை வந்தது சற்று நல்லதொரு வரன். அதை விடவும் விருப்பமில்லை. காரணம், இதை விட்டால் திரும்ப இது போல ஒன்று அமையும் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை. ஆனால், மூத்தவள் இருக்க, தங்கச்சியின் திருமணத்தை நடத்தவும் விருப்பமில்லை. என்ன செய்வது? இலகுவில் ஒரு முடிவுக்கு வர அவளால் இயலவில்லை.எப்பிடி முடிவுக்கு வாறது? பெத்த புள்ளகல்ட வாழ்க்க பிரச்சினை எல்லையா இது? .
காலை நேரம். ருஷ்தா வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள். ஹோல் இல் இருந்த சிறிய புத்தக ராக்கையில் சிதறிக்கிடந்த புத்தகங்களை தூசு தட்டி ஒழுங்கு படுத்தி அடுக்கினாள். வீட்டு மூலைகளில் சிலந்திகள் பின்னிய வலைகளை தும்புத்தடியால் துடைத்தெடுத்தாள்.
ஒழுங்கின்றி இங்கொன்றும், அங்கொன்றுமாக இருந்த நாற்காலிகளை சரிப்படுத்தினாள். தரையை ஒழுங்காகக் கூட்டி பெருக்கி எடுத்தாள். முற்றம் கூட்டுவது, வீட்டை பெருக்குவது என்பன ருஷ்தா அன்றாடம் செய்யும் வேலைகள்.
வீட்டை பெருக்கி முடித்தவள் முகத்தில் படிந்த வியர்வை துளிகளை துடைத்துக் கொண்டாள். குளித்து விட்டே காலை சாப்பாட்டை எடுத்தாள் உடம்புக்கு இதமாக இருக்கும்.
குளிக்கத் தேவையான உடைகளோடு குளிக்க செல்ல முட்பட்டவளை "ருஷ்தா..." என்ற குரல் தடுத்து நிறுத்தியது. சமையலறை வாசலில் தாய் நின்று கொண்டிருந்தாள்.
"ஒன்னோட ஒரு விஷயம் பேசணும்..."
"என்னம்மா...?"
"வா அங்கால ரூமுக்கு போவம்"
முன்னறைக்கு ரெண்டு பேரும் வந்தார்கள்.
"என்ன விஷயம் உம்மா?"
ஸீனத் தயங்கினாள். ருஷ்தாவின் கூர்மையான விழிகளும், அவள் முகத்தில் புரண்டு விளையாடிய கேசமும் இணைந்து வெளிப்படுத்திய ருஷ்தாவின் இளமை அழகு ஸீனத்தை என்னவோ செய்தது. கேட்க வந்ததை கேட்காமலேயே விட்டு விட்டாள் என்ன என்று நினைத்தாள். "என்னமா என்னமோ பேச ஓனுமுண்டு சொன்னீங்க".
ருஷ்தாவின் கேள்வி ஸீனத்தின் சிந்தனையை களைத்தது.
"இல்ல மவள்... ஒரு சின்ன விஷயம்..."
" ...... "
ஸீனத் சொற்களை எண்ணி எண்ணித்தான் பேச வேண்டி இருந்தது. ருஷ்தாவின் கண்களை பார்த்து நேரிடையாக கேட்கும் தைரியம் இல்லை ஸீனத்திற்கு...
"இல்ல மகள் தங்கச்சிக்கு ஒரு கல்யாணம் ஒண்டு பேசி வந்தீக்கிற. நல்ல எடம்..." ஒருவாறு கேட்டுவிட்டாள்.
தன் மகளுக்கு ஏற்ற மருமகனை தேடி பிடிக்க முடியாத தனது கையாலாகா தனத்தை நொந்து கொண்டாள். தான் ஈக்க அவ தங்கச்சிக்கு கல்யாணம் நடக்குறத எந்த கொமர் விரும்புவா?
உலகம் தலைக்கு மேல் சுத்துறது மாதிரி இருக்குது ருஷ்தாவிற்கு... தன் உணர்வை மறைக்கப் பார்த்தாள். கண்களில் நிறைந்த கண்ணீர் காட்டி கொடுத்தது.
"நானும் வாப்பாவும் இதப்பத்திதான் நேத்துப் பேசின... வாப்பாக்கும் விருப்பமில்ல, ஒனக்கு முடியாம. அப்பிடி எண்டாலும், இது ஒரு நல்ல எடம். அதான் யோசிக்கிற... ஒனக்கு விருப்பமில்லாட்டி தேவல்ல".
இதற்கு மேலும் அழுகையை கட்டுப்படுத்த பஸ்ரினாவால் முடியவில்லை.
தலையணையில் முகம் புதைத்து விம்மி அழத்தொடங்கினாள். அந்த அழுகை பெத்த மனதை என்னவோ செய்தது. "என்ன படச்ச நாயனே... ஏன்ட புள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்கையை கொடு", வாய் திறந்து பிரார்த்தித்தாள்.
"அப்பிடி எண்டா தேவயில்ல மகள்"
"இல்ல உம்மா, தங்கச்சிட கல்யாணம் நடக்கட்டும், நல்ல இடங்கள உட்டுட்டு பொறகு கவலைப்பட்டு என்ன பிரயோசனம்"
இப்பிடி ருஷ்தா சொன்னாலும், அவளது மனதில் எவ்வளவு பாரம் இருக்கிறது என்பதை மற்றொரு பெண்ணான ஸீனத்தால் உணர்ந்து கொள்ள முடியாததல்ல.
"இன்னம் நாலஞ்சு மாசம் ஈக்கிது மகள்... அதுல்லுக்கு கல்யாணத்த நடத்தினால் போதுமாம். அதுக்கு மொத எங்க சரி ஒரு எடத்த பாப்போம்"
தங்கச்சியின் திருமணத்திற்கு ஐந்து மாதம் இருப்பதால் அதற்கு முன் ருஷ்தாவிற்கு ஒரு வரனை தேடிவிட வேண்டும் என்ற துடிப்பு பெற்றோருக்கு. வலை விரித்து தேடினார்கள். காலக்கூண்டுக்குள் அடைபட்டுக்கிடந்த நாள் பறவைகள் ஒவ்வொன்றாக பறந்த வண்ணம் இருந்ததேயல்லாமல், வரன் கிடைத்த பாடில்லை.
பஸ்ரினாவுக்கு பொருத்தமே இல்லாத சில சம்பந்தங்கள் வந்தன. பஸ்ரினாவின் குணங்களுக்கு எட்டா பொறுத்தமுள்ள ஜென்மங்கள். உதறினார்கள். கிளியை வளர்த்து பூனைக்கு கொடுக்கும் தவறை ஏன் செய்ய வேண்டும்?
மார்க்கம் பற்றி பீரங்கிப் பிரசாரம் செய்வோர் கூட கையை விரித்தார்கள்.
சமூகத்தின் மீதான வெறுப்பு... துன்பம் வரும் போது கையை கட்டி வேடிக்கை பார்க்கவும், தவறு விட்டால் குறை சொல்லவும் மட்டும் தானே இந்த பாலாய்போன சமூகத்திற்கு தெரிந்திருக்கிறது? எத்தனை உம்மாமார் தங்க கொமர்கள், ஒரு பொடியனோட பழகுறத கண்டும் காணாம உட்டுட்றாங்க. என்னத்துக்கு? சீதனம், இந்த மாதி பிரச்சினைகள்ல் ஈருந்து தப்புறதுக்குத் தானே? இந்தப் பாவத்திற்கு யார் வகை சொல்வது?
இந்த இரவு இப்பிடியே நீண்டு விடியாமலேயே இருந்து விடக்கூடாதா? நாளை என்ற ஒரு நாள் மட்டும் வராவிட்டால்... விடிந்தால் தங்கச்சி ஹஸீனாவின் திருமணம்...
தன்னோடு மண் வீடு கட்டுவது முதல், பாடசாலை போகும் வரை, காகிதக் கப்பல் செய்வது முதல், பரீட்சைக்கு படிப்பது வரை, ஒன்றாக வளர்ந்து, விளையாடி, ஒன்றில் ஒன்று கலந்துவிட்ட தன் தங்கை, மணப்பந்தலுக்கு மட்டும் தனியாகப் போகப் போகிறாள்.
புரண்டு, புரண்டு படுத்துப் பார்த்தாள். தூக்கம் கண்களை தழுவ மறுத்தது. உள்ளம் அமைதியாக இருந்தாள் தான், உள்ளத்தை அமைதிப்படுத்தும் உறக்கம் வரும் போலும். அவள் உள்ளத்தில் வீசிக்கொண்டிருந்த புயல் காற்றில் அடி பட்டு, உறக்கம் அவளை விட்டும் சேய்மை பட்டுப் போய்க்கொண்டு இருந்தது.
சமூகம் அவளை பற்றி என்ன சொல்லும்... அவளிடம் எதாவது குறை இருப்பதாக நினைக்க மாட்டாதா? இல்லாவிட்டால் மூத்தவள் இருக்க ஏன் இளையவளுக்கு திருமணம் செய்ய வேண்டும்? என்று தானே சமூகம் நினைக்கும். அப்படிஎன்றால் இவளின் எதிர் காலம்... ஒரு வேலை காலம் பூராகவும், வாழாவெட்டி என்ற பட்டத்தை சுமந்து கொண்டு இருக்க வேண்டியதுதானா?
அவளது எண்ணக் கடலில் ஆர்ப்பரித்த உணர்வலைகள்....
எப்போது உறங்கினாள் என்று அவளுக்கு தெரியாது. விழித்தபோது சூரியன் உதித்து விட்டிருந்தான்.
வழமை போல் முகம் கழுவி விட்டு விளக்கு மாரை எடுத்து முற்றத்திற்கு இறங்கினாள். வெளி ஓரத்தில் அண்டை வீட்டு பெண்கள் இருவர் குசுகுசுத்த குரலில் பேசியது அந்த காலை நேர இதமான மெல்லிய காற்றில் பறந்து வந்து அவள் செவிகளில் விழுந்தது.
"என்னவாவது ஒரு குறை இருக்கணும்... இல்லாட்டி தாதாவ விட்டு எதுக்கு தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வக்கோணும்."
எதுவுமே நடக்காதது போல் சமூகம், அமைதியாக அன்றைய அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot