தாலியும் கருகுமணியும்
மவ்லவி, காஜா நிஜாமுத்தீன் யூஸுஃபி
[ கருகுமணி கட்டிக்கொள்ளும் பெண் இறைவேதமாம் திருக்குர்ஆனை உதாசீனப்படுத்துகிறாள் என்பது எத்தனை முஸ்லிம் பெண்களுக்குத் தெரியும்?]
"ஆயிரங்காலத்துப்பயிர்" என்று சொல்லக்கூடிய "திருமணம் குறித்து இஸ்லாம் எளிமையும், ஏற்றமும் மிக்க சிறந்த வழிகாட்டுதலைத் தந்திருக்கிறது. ஆனால், இன்று ஆடம்பரமாக பணம் வீண்விரயம் ஆக்கப்படுவது முதல், ஆண்-பெண் ஒன்றாகக்கலக்கும் மாற்றுமதச் சடங்குகள் வரை அத்தனை வகையான அனாச்சாரத்தின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறது முஸ்லிம்களுடைய திருமணம்.
மாற்றாரின் சடங்குகளை சட்டமாக்கிய பாவத்தோடு அவை இஸ்லாமியக் கொள்கையோடு நேரடியாக மோத விடுவது தான் கொடுமையிலும் கொடுமை.
தாலி எப்படி வந்தது?
"பொய்யும் வழுவும் தோன்றியபின்னர்
ஐயர்யாத்தனர் கரணம் என்ப" - என்று தொல்காப்பியம் கூறுகிரது.
"கரணம்" என்றால் "சடங்கு" என்று பொருள். முந்தைய காலத்தில், முதலில் ஒரு பெண்ணை மணப்பான். அவளைவிட அழகிய பெண்ணைக்கண்டால் அவளோடு சேர்ந்து வாழ ஆரம்பித்து விடுவான். இப்படி பொய்யும், வழுவும் தோன்றியபோது ஐயர் வகுத்தவை தான் தாலி போன்ற சடங்குகள். நமக்குத் தேவைதானா இந்த சடங்குகள்? இவை இஸ்லாமிய திருமண ஒப்பந்தத்தையே கொச்சைப்படுத்தாதா?
"இறைநம்பிக்கையாளர்களே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்" (அல்குர்ஆன் 5:1) எனும் இறைவசனம் இரு நபர்களுக்கு மத்தியில் நடக்கும் எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் அதை முறிக்காமல் முழுமையாக நிறைவேற்றுங்கள் என்று பணிக்கின்றது. அதிலும் குறிப்பாக திருமண ஒப்பந்தத்திற்கு குர் ஆன் கொடுக்கும் முக்கியத்துவமும், மதிப்பும், மரியாதையும் அலாதியானது.
"அந்தப் பெண்கள் உங்களிடம் உறுதியான உடன்படிக்கையை எடுத்திருக்கிறார்கள். (அல்குர்ஆன் 4:21) கபில்து "நான் அவளை ஒப்புக்கொண்டேன்" என்று சொல்வது சாதாரண வார்த்தையல்ல. "மீஸாகன் கலீளா" உறுதியான உடன்படிக்கை என்று அல்குர்ஆன் வர்ணிக்கின்றது. குர்ஆனில் அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் மத்தியில் நடைபெற்ற உடன்படிக்கைக்கு மட்டுமே உபயோகிக்கப்பட்ட "மீஸாக்" எனும் வார்த்தை இங்கு ஆண்-பெண்ணுக்கு மத்தியில் நடைபெறும் திருமண ஒப்பந்தத்திலும் உபயோகிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கும் மேலாக "மீஸாகன் கலீளா" - உறுதியான உடன்படிக்கை எனும் வார்த்தை அல்லாஹ்வுக்கும் நபிமார்களுக்கும் மத்தியில் நடந்த உடன்படிக்கைக்கு மட்டுமே குர் ஆன் புழங்கியிருக்கிறது. அதே வார்த்தையை திருமண ஒப்பந்தத்திற்கும் சொல்வதன் மூலம், கபில்து அன்ற வார்த்தை எவ்வளவு புனிதமானது, எவ்வளவு உறுதியானது என்பதை விளங்க முடியும். இதற்குமேலாக கருகுமணிக்கு மதிப்பளித்தால் அது குர்ஆனையே உதாசீனப்படுத்தியதாகாதா?
மணமேடைகளில் இந்த மீஸாகன் கலீளா" - உறுதியான ஒப்பந்தத்தின் உறுதிப்பாட்டை மணம்க்களுக்கு விளக்கி வைக்காமல் மாற்றார்களின் தாலிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அவர்களைப் போலவே நம் சமூகத்திலும் தலாக் அதிகமாக நிகழ்கின்றன.
கணவன் மனைவியை ஏமாற்றக்கூடாது, இறுதிவரை கட்டிக்காக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் சொல்லித்தந்த உறுதியான உடன்படிக்கையை செயல்படுத்துவதா? அல்லது ஐயர் உருவாக்கிய தாலியையும் சேர்த்துக்கொள்வதா? நம்மிடத்தில் சிறந்த வழிகாட்டுதலை வைத்துக்கொண்டு மாற்றார்களிடம் ஏன் காப்பியடிக்க வேண்டும்? கூடை நிறைய பிரியாணியை தலையில் சுமந்துகொண்டு தெரு முழுக்க பிச்சை எடுத்த கதையாக முழு உலகுக்கும் முன்னேற்றப்பாதை காட்டுமளவுக்கு சிறந்த நெறிமுறைகளை கையில் வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் மாற்றார்களுக்குப் பின்னால் செல்வதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.
ஒவ்வொரு திருமண வைபவத்திலும் சொற்பொழிவாற்றும் ஆலிம்கள், தலைவர்கள் இதைப்பற்றிய விளக்கத்தை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை. கருகுமணி கட்டிக்கொள்ளும் பெண் இறைவேதமாம் திருக்குர்ஆனை உதாசீனப்படுத்துகிறாள் எனும் கருத்து அவர்களுக்கு விளங்குமானால் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கருகுமணியை கட்டுவதற்கு தனது கழுத்தை வளைந்து கொடுக்கமாட்டாள் என்று நம்புவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக